[X] Close

தீவிரவாதிகள் பேச்சுவார்த்தைக்கு வர வேண்டும்: காஷ்மீர் ஆளுநர் சத்யபால் மாலிக் வேண்டுகோள்


  • kamadenu
  • Posted: 13 Jun, 2019 08:13 am
  • அ+ அ-

-பி.டி.ஐ

தீவிரவாதிகள் பேச்சுவார்த்தைக்கு முன்வர வேண்டும் என ஜம்மு-காஷ்மீர் ஆளுநர் சத்யபால் மாலிக் அழைப்பு விடுத்துள்ளார்.

இதுகுறித்து ஸ்ரீநகரில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது: தீவிரவாதிகள் ஆயுதம் ஏந்தி போராடுவதை கைவிட வேண்டும். அவர்களின் எதிர்பார்ப்பு, விருப்பங்கள் என அனைத்தும் அரசமைப்புச் சட்டத்தின் வரம்புக்குட்பட்டதாக இருக்க வேண்டும். அவ்வாறு இருந்தால் மட்டுமே அதனை அவர்கள் அடைய முடியும்.

பிரச்சினைகளுக்கு சிறந்த தீர்வு பேச்சுவார்த்தை மட்டுமே. தீவிரவாதம், வன்முறை மூலமாக இந்தியாவை பணிய வைக்க முடியாது. அதேசமயத்தில், அன்பு, பேச்சுவார்த்தை மூலமாக எதையும் பெற முடியும். பிரதமர் நரேந்திர மோடி அதற்கு தயாராக இருக்கிறார். எனவே, தீவிரவாதிகள் அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த முன்வர வேண்டும்.

காஷ்மீருக்கு தனி அரசமைப்புச் சட்டம், கொடி ஆகியவை இருக்கின்றன. வேறு விருப்பங்கள் இருந்தாலும் அவற்றை ஜனநாயக முறையில் பெறலாம். தீவிரவாதிகளுக்கு இது புரியப்போவதில்லை. ஆனால், 10 ஆண்டுகளுக்கு பிறகே, தாங்கள் சென்ற பாதை தவறானது என்று அவர்களுக்கு தெரியவரும்.

மாநிலத்தில் தீவிரவாதப் பிரச்சினை நீடிப்பதற்கு இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு இல்லாதது மட்டுமே காரணமாக இருக்க முடியாது. பல்லாண்டு காலமாகவே, அரசியல்வாதிகள் மக்களை தவறாக வழிநடத்தி வருகிறார்கள்.

சுதந்திரம், சுயாட்சி என்றெல்லாம் நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை கூறி மக்களை அவர்கள் ஏமாற்றுகிறார்கள். இதனை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

தீவிரவாதிகள் ஊடுருவலை தடுப்பதில் பாதுகாப்புப்படை விழிப்புடன் இருக்கிறது. தீவிரவாதத்துக்கு ஆள்சேர்ப்பது வெகுவாக குறைந்துள்ளது. மாநில நிர்வாகம் இளைஞர்கள் மீது மிகவும் பரிவுகாட்டிவருகிறதுமாநிலத்தில் சட்டப்பேரவைத் தேர்தலை நடத்துவது பற்றி தேர்தல் ஆணையம் முடிவு செய்யும். இவ்வாறு சத்யபால் மாலிக் தெரிவித்தார்.

புல்வாமா தாக்குதலை தொடர்ந்து காஷ்மீரில் தீவிரவாதிகளுக்கு எதிராக கடும் நடவடிக்கைகளை ராணுவம் எடுத்து வருகிறது. இருந்தபோதிலும், காஷ்மீரில் தீவிரவாத அமைப்பில் சேரும் இளைஞர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக ராணுவம் அண்மையில் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close