[X] Close

போலீஸாருக்கு தகவல் தெரிவிப்பதாக சந்தேகித்து முன்னாள் ஊழியர் மீது துப்பாக்கிச் சூடு: தலைமறைவான கரூர் பைனான்சியருக்கு போலீஸ் வலை


  • kamadenu
  • Posted: 13 Jun, 2019 08:06 am
  • அ+ அ-

தம்மைப் பற்றி போலீஸாருக்கு தகவல் தெரிவிப்பதாகச் சந்தேகித்து, தன்னிடம் ஏற்கெனவே வேலை பார்த்த இளைஞரின் வீடு புகுந்து துப்பாக்கியால் சுட்டதுடன், பட்டாக்கத்தியால் வெட்டிய, பைனான்சியர் உள்ளிட்ட 3 பேரை போலீஸார் தேடி வருகின்றனர்.

கரூர் வெண்ணெய்மலை பூர்ணிமா கார்டன் பகுதியைச் சேர்ந்தவர் எல்.விக்னேஷ்(31) என்பவர். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு கரூரைச் சேர்ந்த சக்தி வேல் (45) என்பவரிடம் வேலை பார்த்து வந்தார். சக்திவேல் பைனான்ஸ் தொழில் செய்து வந்ததுடன் அவ்வப்போது வெள்ளிப் பொருட்களை வாங்கி விற்பனை செய்துவந்தார். வெள்ளிபொருட்களை விற்பதில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக சக்திவேலிடம் இருந்து விலகி, ஜெகதீஷ் என்பவரிடம் விக்னேஷ் வேலைக்கு சேர்ந்தார்.

சக்திவேல் மீது பல்வேறு வழக்குகள் இருப்பதாகக் கூறப்படுகிறது. தன்னைப் பற்றி போலீஸாருக்கு விக்னேஷ்தான் தகவல் கொடுத்து வழக்குகளில் சிக்க வைப்பதாக எண்ணிய சக்திவேல், நேற்று முன்தினம் இரவு நெரூரைச் சேர்ந்த விக்கி என்கிற விக்னேஷ் மற்றும் கேரளாவைச் சேர்ந்த ஒருவருடன் எல்.விக்னேஷின் வீட்டுக்குச் சென்றார்.

டம்மி தோட்டாவுடன் துப்பாக்கி

அப்போது, டம்மி தோட்டா மற்றும் நாட்டு கைத்துப்பாக்கியை எடுத்துச் சென்றதாக தெரிகிறது. வீட்டுக்குள் புகுந்து, துப்பாக்கியால் எல்.விக்னேஷை நோக்கி 3 முறை சக்திவேல் சுட்டதாக கூறப்படுகிறது. இதில், காயம் ஏதுமின்றி தப்பிய நிலையில், சக்திவேலுடன் வந்த கேரளாவைச் சேர்ந்தவர் பட்டாக் கத்தியால் வெட்டியதில் எல்.விக்னேஷ் கையில் காயம் ஏற்பட்டது. துப்பாக்கியால் சுடும் சப்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் வந்ததால், 3 பேரும் தப்பிவிட்டனர்.

தகவலறிந்த போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை நடத்தினர். எல்.விக்னேஷ் அளித்த புகாரின்பேரில், வெங்கமேடு போலீஸார் வழக்குப் பதிவு செய்து 3 பேரையும் தேடி வருகின்றனர். காயமடைந்த எல்.விக்னேஷ் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

வாக்களிக்கலாம் வாங்க

'கேம் ஓவர் ' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close