[X] Close

சட்டப்பேரவை தேர்தல் வரை அதிமுக கூட்டணி தொடரும்: பாமக கூட்டத்தில் ராமதாஸ் தகவல்


  • kamadenu
  • Posted: 13 Jun, 2019 08:02 am
  • அ+ அ-

அதிமுக உடனான கூட்டணி வரும் சட்டப்பேரவைத் தேர்தல் வரை தொடரும் என்று பாமக நிர்வாகிகள் கலந்தாய்வு கூட்டத்தில் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

திண்டிவனம் அருகே ஓமந்தூரில் பாமக மாநிலத் துணை பொதுச் செயலாளர்கள், மாவட்ட செயலாளர்கள், மாநில இளைஞர் சங்க நிர்வாகிகள் பங்கேற்ற கலந்தாய்வு கூட்டம் நேற்று நடைபெற்றது.

கட்சி நிறுவனர் ராமதாஸ் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் மாநில இளைஞர் அணிதலைவர் அன்புமணி, மாநிலத் தலைவர் கோ.க.மணி, பொதுச் செயலாளர் வடிவேல் ராவணன், பொருளாளர் திலகவதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

மக்களவைத் தேர்தலுக்கு பின்பு நடைபெற்ற மாநில அளவிலான இந்த நிர்வாகிகள் கூட்டத்துக்கு அழைக்கப்பட்ட நிர்வாகிகள் தவிர, மற்ற பொறுப்பில் உள்ள நிர்வாகிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.

இக்கூட்டத்தில் பங்கேற்ற நிர்வாகிகளிடம், அங்கு பேசப்பட்ட விவரங்கள் குறித்து கேட்டபோது அவர்கள் கூறியதாவது: பட்டியல் ஒப்பீடுமக்களவைத் தேர்தலில் பாமக பெற்ற வாக்குகள் அடங்கிய பட்டியலை வைத்துக் கொண்டு மாவட்ட செயலாளர்கள், மாநில துணைப் பொதுச் செயலாளர்களிடம் தொகுதியில் உள்ள பாமக உறுப்பினர்கள் எண்ணிக்கையோடு, பெற்ற வாக்குகளின் எண்ணிக்கை ஒப்பீடு செய்யப்பட்டது.

நமக்கு நாமே ஏமாற்ற வேண்டாம்

இதில், அரக்கோணம் மக்களவைத் தொகுதியில் 10 லட்சம் உறுப்பினர்கள் உள்ளதாக கணக்கு கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால், அதை விட குறைவான வாக்குகள் (3,43,234) பெறப்பட்டது தொடர்பாக விவாதிக்கப்பட்டு, அத்தொகுதி நிர்வாகிகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது. பொய்யான தகவல்களை கொடுத்து நம்மை நாமே ஏமாற்றிக் கொள்ளக் கூடாது.

ஒவ்வொரு ஊராட்சியிலும் 10 இளைஞர்கள் கொண்ட பட்டியலை தயாரித்து, அவர்களைப் பற்றிய விவரங்களை அளிக்க வேண்டும். அவர்களை ஒருங்கிணைத்து தொகுதி வாரியாக நடைபெறும் கூட்டத்தில் அன்புமணி ராமதாஸ் பங்கேற்று பேசுவார். வருகின்ற சட்டப்பேரவைத் தேர்தல் வரை அதிமுகவுடனான கூட்டணி தொடரும். இவ்வாறு ராமதாஸ் பேசியதாக கூட்டத்தில் பங்கேற்ற நிர்வாகிகள் தெரிவித்தனர்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close