[X] Close

இலங்கை குண்டுவெடிப்பு தீவிரவாதிகளுடன் தொடர்பு?- கோவையில் 6 பேரின் வீடுகளில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை


6

  • kamadenu
  • Posted: 13 Jun, 2019 08:00 am
  • அ+ அ-

இலங்கை குண்டுவெடிப்பு தீவிரவாதிகளுடன் தொடர்பிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில், கோவையில் 6 இளைஞர்களின் வீடுகளில் தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர்.

இலங்கையில் கடந்த ஏப்ரல் 21-ம் தேதி தொடர் குண்டுவெடிப்பு நிகழ்ந்தது. இதில் ஏராளமானோர் உயிரிழந்தனர். இதைத் தொடர்ந்துஇந்தியாவிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. இலங்கை குண்டுவெடிப்பு சம்பவத்தில் தொடர்புடைய சிலருடன், கோவையைச் சேர்ந்த சில இளைஞர்கள் முகநூல் மூலம் நெருங்கிய தொடர்பில் இருப்பதாக என்ஐஏ அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து, என்ஐஏ அதிகாரிகள், கடந்த சில வாரங்களாக அந்த இளைஞர்களின் நடவடிக்கைகளை கண்காணித்தனர். அவர்களின் சமூகவலைதள பக்கங்களின் தொடர்புகளையும், அவர்கள் பதிவிடும் கருத்துகளையும் கண்காணித்து வந்தனர். இதை தொடர்ந்து சந்தேகத்துக்குரிய இளைஞர்களான உக்கடம் அன்பு நகரைச் சேர்ந்த அசாருதீன்(32), அல் அமீன் காலனியைச் சேர்ந்த ஜாகிம்ஷா என்ற இப்ராகிம் (28), குழந்தை கவுண்டர் வீதியைச் சேர்ந்த ஷேக் இதாயத்துல்லா (37), குனியமுத்தூரைச் சேர்ந்த அபுபக்கர் சித்திக்(30), போத்தனூரைச் சேர்ந்த சதாம் உசேன்(30), அக்ரம் ஜிந்தா (26) ஆகிய 6 பேரின் வீடுகள், முகமது அசாருதீன் வேலை செய்யும் டிராவல்ஸ் அலுவலகம் ஆகியவற்றில் என்ஐஏ அதிகாரிகள் நேற்று திடீர் சோதனை நடத்தினர்.

இதை கோவை மாநகர உளவுத்துறை போலீஸாரும் உறுதிப்படுத்தினர். காவல் துணைக் கண்காணிப்பாளர் விக்ரம் தலைமையில் 7 குழுக்களாக பிரிந்து என்ஐஏ அதிகாரிகள் இந்த சோதனையை நடத்தினர். நேற்று அதிகாலை 6.30 மணி முதல் மதியம் 1.30 மணி வரை நடந்த சோதனையின்போது, அவர்களின் வீடுகளில் இருந்து ஆவணங்கள் மடிக்கணினி, ஹார்ட் டிஸ்க் மற்றும் பென்டிரைவ் சிலவற்றை அதிகாரிகள் எடுத்துச் சென்றதாக கூறப்படுகிறது.

ஐஎஸ்ஐஎஸ் இயக்கத்தில் சேர இளைஞர்களை மூளைச்சலவை செய்ததாக முகமது அசாருதீன் மீது என்ஐஏ அதிகாரிகள் கடந்த மாத இறுதியில் வழக்குப் பதிவு செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

அசாருதீன் டிராவல்ஸ் ஏஜென்சியில் ஊழியராகவும், அபுபக்கர் சித்திக் திருமண மண்டபத்தில் ஊழியராகவும் பணியாற்றி வருகின்றனர். ஷேக் இதாயத்துல்லா தேன் வியாபாரத்திலும், சதாம் உசேன் தனியார் நிறுவன உரிமையாளராகவும், இப்ராகிம் வாசனை பொருட்கள் விற்பனையாளராகவும் உள்ளனர். பின்னர், 6 பேரையும் ரேஸ்கோர்ஸில் உள்ள என்ஐஏ அலுவலகத்துக்கு அழைத்துச் சென்று அதிகாரிகள் விசாரித்தனர். முன்னதாக, சோதனை நடந்த வீடுகளுக்கு முன்பு, பாதுகாப்புக்காக போலீஸார் நிறுத்தப்பட்டிருந்தனர்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close