[X] Close

திமுகவில்தான் இரட்டைத் தலைமை உள்ளது: அதிமுகவில் இணைந்தவுடன் ராதாரவி அதிரடி


  • kamadenu
  • Posted: 12 Jun, 2019 16:54 pm
  • அ+ அ-

திமுகவில் இருந்து தன்னை நீக்கியது நியாயமில்லை. குறைந்தபட்சம் ஸ்டாலின் என்னை அழைத்து விளக்கம் கேட்டிருக்கலாம் என ராதாரவி தெரிவித்தார்.

தமிழ்த் திரையுலகில் பல்வேறு படங்களில் நடித்து முன்னணி குணச்சித்ர நடிகராக வலம் வருபவர் ராதாரவி. இவர் ஆரம்பத்தில் திமுக மேடைகளில் தனது அரசியல் பிரவேசத்தைத் தொடங்கினார். பின்னர் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக ஜெயலலிதாவைச் சந்தித்து அதிமுகவில் இணைந்தார்.

சைதாப்பேட்டை இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்ட ராதாரவி மா.சுபரமணியத்தைத் தோற்கடித்தார். நீண்டகாலமாக அதிமுகவில் இருந்த அவர் ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் திடீரென அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் ஸ்டாலினைச் சந்தித்து தன்னை திமுகவில் இணைத்துக்கொண்டார். அதன் பின்னர் திமுக கூட்டங்களில் முன்னணிப் பேச்சாளராக வலம் வந்தார்.

ரஜினியின் அரசியல் பிரவேசம், கமலின் மக்கள் நீதிமய்யம் ஆகியவற்றை திமுக மேடைகளில் கடுமையாக விமர்சித்துப் பேசி வந்தார். சமீபத்தில், 'கொலையுதிர் காலம்' பத்திரிகையாளர் சந்திப்பில் நயன்தாரா குறித்து ராதாரவி பேசிய பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதனால் திமுக தலைமை ராதாரவியை சஸ்பெண்ட் செய்தது, அது என்ன சஸ்பெண்ட் நானே விலகிவிடுகிறேன் என ராதாரவி அறிவித்தார். இந்நிலையில் யாரும் எதிர்பாராவிதமாக இன்றுஅதிமுக மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் நடக்கும்வேளையில் முதல்வர் பழனிசாமியைச் சந்தித்து அதிமுகவில் இணைந்தார். பின்னர்  துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தைச் சந்தித்துப் பேசினார்.

அதன் பின் செய்தியாளர்களிடம் ராதாரவி கூறியதாவது:

முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கும், ஓபிஎஸ்ஸுக்கும் நன்றி. என்னை இணைக்க முயற்சித்த கடம்பூர் ராஜுவுக்கும் நன்றி. ஜே.கே.ரித்தீஷ் என்னை இணைக்கப் பெரிதும் முயன்றார். ஆனால் அவர் இன்று இல்லை என்றார்.

தொடர்ந்து செய்தியாளர்களின் கேள்விகளுக்குப் பதில் அளித்தார்.

அதிமுகவில் இரட்டைத் தலைமை பிரச்சினை உள்ளதே?

இன்னைக்குச் சேர்ந்தேன். இன்று மாலையிலேயே கட்சியை விட்டு எடுக்க வேண்டும் என்பதுபோன்று கேள்வி கேட்கிறீர்களே.

திமுகவில் குறிப்பிட்ட காரணத்துக்காக நீக்கமா?

குறிப்பிட்ட விஷயத்துக்காக இல்லை. அவர்கள் செய்தது நியாயமா அநியாயமா எனக்குத் தெரியாது. அது சினிமா விழா, அதில் நான் பேசியிருக்கிறேன். அந்த நடிகையை தரக்குறைவாகப் பேசவில்லை.

அப்படி மனதைப் பாதித்ததாக இருந்தால் நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என்று தெரிவித்துவிட்டேன். அதன் பிறகும் நீக்கப்பட்டேன். அதன் பிறகுதான் நான் தெரிந்துகொண்டேன். யார் யாருக்கு உறவு என்று தெரிந்து பேச வேண்டும் என முடிவு செய்துவிட்டேன்.

நான் நடிகர் சங்கத் தேர்தலுக்காக பாக்யராஜ் அணியை ஆதரித்து நாடக நடிகர்களிடம் பேசியபோது ராதாரவியை ஆதரிக்கக்கூடாது என்று திமுக தலைமையிலிருந்து பேசியதாக அறிந்தேன். நடிகர் சங்கத்திலிருந்து இதில் நுழைந்ததால் என்னை ஒதுக்கியதை அறிந்தேன். அதனால் யோசித்து அதிமுகவில் இணைய முடிவெடுத்தேன்.

திமுகவின் தலையீடு நடிகர் சங்கத் தேர்தலில் உள்ளதா?

நிச்சயம் உள்ளது. நடிகர் சங்கத் தேர்தலிலேயே இது இருக்கும்போது இனி திமுகவில் நீடிப்பதை பற்றி பரிசீலித்துதான் முடிவு செய்தேன். ஸ்டாலினை நான் குற்றம் சொல்ல மாட்டேன். அவருக்கு இது தெரியுமோ தெரியாதா எனக்குத் தெரியாது.

இப்போது கேட்டீர்களே இரட்டைத் தலைமை, அது திமுகவில்தான் உள்ளது.

யார் அந்த இரண்டாவது தலைமை?

அதை நான் சொல்லமாட்டேன். நீங்களே கண்டுபிடித்துக் கொள்ளுங்கள்.

இப்போது அதிமுகவுக்கு வந்துவிட்டேன். இது எனக்குப் புதிதல்ல. நான் 18 ஆண்டுகள் இருந்தேன். இப்போது மீண்டும் இணைந்துள்ளேன். ஸ்டாலினுக்காக மட்டும் தான் திமுகவில் இணைந்தேன். என்ன நடந்தது என ஸ்டாலின் என்னை அழைத்து விளக்கம் கேட்டிருக்கலாம்.

அதிமுகவில் இணைவதென்று இரண்டு நாட்களுக்கு முன்பு தான் முடிவு செய்தேன். நில அபகரிப்பு தொடர்பான வழக்கை எதிர்கொள்வேன். என்னை நடிகர் சங்கத்தில் இணைக்காமல் நடிகர் சங்கத் தேர்தல் நடைபெறாது.

இனிமேல் மெதுவாக வாருங்கள். நீங்கள் கேட்கும் கேள்விக்கெல்லாம் அதிரடியாகப் பதில் சொல்கிறேன்.

இவ்வாறு ராதாரவி தெரிவித்தார்.

வாக்களிக்கலாம் வாங்க

'கேம் ஓவர் ' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close