[X] Close

தற்போதைய தலைமையை அதிமுகவினரும் பொது மக்களும் புறக்கணித்துள்ளனர்: அதிமுக அதிருப்தி எம்எல்ஏ கலைச்செல்வன் கருத்து


  • kamadenu
  • Posted: 12 Jun, 2019 15:05 pm
  • அ+ அ-

தற்போதைய தலைமையை அதிமுகவினரும் பொதுமக்களும் புறக்கணித்து விட்டதாக அதிமுக அதிருப்தி எம்எல்ஏ கலைச்செல்வன் தெரிவித்துள்ளார்.

அதிமுக எம்எல்ஏக்கள், எம்.பி.க்கள், மாவட்டச் செயலாளர்கள், தலைமைக் கழக நிர்வாகிகளின் கூட்டம் இன்று (புதன்கிழமை) கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் அதிமுக அதிருப்தி எம்எல்ஏக்களுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. இந்நிலையில் அதிருப்தி எம்எல்ஏக்களில் ஒருவரான விருத்தாச்சலம் எம்எல்ஏ கலைச்செல்வன் தனியார் தொலைக்காட்சிக்குப் பேட்டி அளித்தார்.

அப்போது அவர் பேசியதாவது:

''இரட்டைத் தலைமையால்தான் இந்தத் தேர்தலில் அதிமுகவின் வாக்கு வங்கி சரிந்துள்ளது. ஒற்றைத் தலைமை இருந்தால் மட்டுமே அதிமுக பலம் பொருந்தியதாக இருக்கும். அதிமுகவுக்கு ஒரு தலைமைதான் வேண்டும் என்று ராஜன் செல்லப்பா கூறினார்.

அதையொட்டி குன்னம் ராமச்சந்திரனும் கருத்து தெரிவித்திருந்தார். ஒற்றைத் தலைமை வருகிற போதுதான் ஜெயலலிதா கூறியதுபோல நூறு ஆண்டுகள் அதிமுக ஆட்சி ஆளும். ஆனால் அந்த எண்ணமே இப்போதைய ஆட்சியாளர்களிடத்தில் இல்லை.

அதற்கு என்ன காரணம், யார் அவர்களைப் பின்னிருந்து இயக்குகின்றனர் என்பது சந்தேகத்துக்கு இடமான செயல்பாடாக உள்ளது. ஒன்றரை கோடி உறுப்பினர்களைக் கொண்ட இயக்கம் அதிமுக என்று சொல்கிறார்களே தவிர, அவர்களின் வாக்கு வங்கி மிகப் பெரிய அளவில் சரிந்திருக்கிறது.

இதற்குக் காரணம் கட்சியின் அடிப்படை உறுப்பினர்களில் இருந்து நிர்வாகிகள், பொதுமக்கள் உட்பட அனைவரும் இத்தலைமையைப் புறக்கணித்துள்ளனர் என்பதுதான். இதைத்தான் மக்களவைத் தேர்தல் வாக்கு வங்கியும் காண்பிக்கிறது''.

இவ்வாறு கலைச்செல்வன் தெரிவித்தார்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close