[X] Close

மாதவரத்தில் தன்பாலின உறவின்போது கொலை செய்த சைக்கோ சிக்கினார்: முதலாளியே பிடித்துக் கொடுத்தார்


  • kamadenu
  • Posted: 12 Jun, 2019 14:11 pm
  • அ+ அ-

ரெட்டேரியில் தன்பாலின உறவுக்கு அழைத்து 2 பேரின் பாலுறுப்பை அறுத்த நபரை போலீஸார் நீண்ட தேடலுக்குப் பின் கைது செய்தனர். ஊடகங்கள் வாயிலாக குற்றவாளியைப் பிடிக்க முடிந்ததாக கூடுதல் ஆணையர் தினகரன் நன்றி தெரிவித்தார்.

கடந்த மாதம் 26-ம் தேதி இரவு ரெட்டேரி பாலத்தின் அடியில் படுத்திருந்த அசதுல்லா என்பவர் தன் பாலுறுப்பு துண்டிக்கப்பட்ட நிலையில் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

அவர் தானே தனது உறுப்பை அறுத்துக்கொண்டதாகத் தெரிவித்தார். சில நாட்களில் சிகிச்சை பலனின்றி அசதுல்லா உயிரிழந்தார். போலீஸாரும் அதை தற்கொலை என முடிவு செய்து வழக்கை முடித்தனர்.

இந்நிலையில் அதே இடத்தில் ஒருவாரம் கழித்து ஜூன் 2-ம் தேதி கூடங்குளத்தைச் சேர்ந்த நாராயணபெருமாள் என்பவர் தன் பாலுறுப்பு துண்டிக்கப்பட்டதாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஒரே இடத்தில் ஒரே மாதிரி சம்பவம், ஒரே மாதிரி உள்ளதைக் கண்டு சந்தேகமடைந்த போலீஸார் நாராயண பெருமாளிடம் விசாரித்தனர்.

அவர் அளித்த வாக்குமூலத்தில் தன்பாலின உறவில் ஈடுபட்டபோது அந்த நபர் மது போதையில் இருந்த எனது உறுப்பை அறுத்துவிட்டார் என தெரிவித்தார். அப்படியானால் அசதுல்லாவும் இதேபோன்று தன்பாலினச் சேர்க்கையின்போது பாலுறுப்பு அறுக்கப்பட்டிருக்கவேண்டும் என போலீஸார் முடிவுக்கு வந்தனர். தொடர்ந்து போலீஸார் விசாரணை நடத்தினர்.

அந்தப் பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர்.அதில், நாராயண பெருமாள் சொன்ன அடையாளத்துடன் உறுப்பை அறுத்த நபர் நடமாடும் காட்சி பதிவாகி இருந்தது.

வேட்டி, வெள்ளைச் சட்டை அணிந்தபடி நடமாடும் அந்த நபரின் புகைப்படத்தை வெளியிட்டுள்ள போலீஸார் அந்த சைக்கோ நபர் குறித்து தகவல் தெரிந்தால் உடனடியாகத் தெரிவிக்குமாறு கேட்டுக்கொண்டனர்.

இந்நிலையில் இந்தக் குற்றச்செயலில் ஈடுபட்ட சைக்கோ நபரை போலீஸார் கைது செய்தனர். மானாமதுரையைச் சேர்ந்த முனுசாமி (36) என்கிற அந்த சைக்கோ நபர் பிடிபட்டார்.

இதுகுறித்து சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த வடக்கு மண்டல கூடுதல் ஆணையர் தினகரன் கூறியதாவது: 

“சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது ஒரே நபர்தான் மேற்கண்ட குற்றச்செயல்களை செய்தவர் எனத் தெரியவந்தது. 40 சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தோம். வில்லிவாக்கம், ராஜமங்கலம் ஆகிய ஏரியாவிலிருந்துதான் வந்திருப்பார் என தெரியவந்தது. ஆனால் சரியாக யார் அந்த நபர் என்பது தெரியாமல் இருந்தது.

டாஸ்மாக் பார்கள், பொது இடங்களில் விசாரணை நடத்தினோம், ஆனாலும் கண்டுபிடிக்க முடியவில்லை. அதன்பின்னர் ஊடகங்கள் உதவியை நாடினோம். சந்தேக நபர் குறித்த சிசிடிவி காட்சிகள் தொலைக்காட்சிகள், ஊடகங்கள், சமூக வலைதளங்களில் வெளியானது.

இதையடுத்து அசோக் குமார் என்கிற நபர் மூலம் எங்களுக்கு போன் வந்தது. அந்த நபரிடம்தான் மேற்கண்ட குற்றவாளி வேலை செய்துவருகிறார் என தெரிவித்தார். வில்லிவாக்கத்தில் உள்ள தனக்குச் சொந்தமான மீன் கடையில் அந்த நபர் வேலை செய்து வருவதாகத் தெரிவித்தார். இதையடுத்து ஆய்வாளர் தலைமையிலான தனிப்படையினர் சென்று கைது செய்தனர்.

அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவரது பெயர் முனுசாமி(36) என்பதும் மானாமதுரையைச் சேர்ந்தவர் என்பதும் தெரிந்தது. திருமணமான அவருக்கு 2 குழந்தைகள் உள்ளன. 2 மாதங்களுக்கு முன் சென்னை வந்துள்ளார். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் தன்பாலின உறவில் இருக்கும்போது தனக்கு ஒத்துழைப்பு தராத ஆட்களின் உறுப்பை கோபத்தால் அறுத்ததாகத் தெரிவித்துள்ளார்.

அசதுல்லாவை பிளேடால் வெட்டியதாகவும், நாராயணனை உடைந்த பாட்டில் துண்டைக்கொண்டு அறுத்ததாகவும் தெரிவித்துள்ளார்.

இச்சம்பவத்தில் நான்கு அம்சங்கள், ஒன்று போலீஸ், பொதுமக்கள், செய்தியாளர்கள், சமூக ஊடகங்கள் ஒத்துழைப்பு காரணமாக குற்றவாளியைப் பிடிக்க முடிந்தது. ஆகவே பொதுமக்கள் ஒத்துழைத்தால் குற்றவாளியைப் பிடிக்க முடியும், ஒத்துழைப்பு அளித்த ஊடகங்களுக்கு நன்றி”.

இவ்வாறு கூடுதல் ஆணையர் தினகரன் தெரிவித்தார்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close