[X] Close

தொழிலாளர்களின் தியாகத்தில் உருவான சுரங்கப் பாதைகள்!


  • kamadenu
  • Posted: 12 Jun, 2019 10:58 am
  • அ+ அ-

-எஸ்.கோபு

தமிழகத்தில் உள்ள சோலையாறு அணைக்கும், கேரள மாநிலத்தில் உள்ள சோலையாறு அணைக்கும் இடைப்பட்ட பகுதியில் உள்ள நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் கிடைக்கும் 6 டிஎம்சி தண்ணீர் மற்றும் தமிழக சோலையாறு அணையிலிருந்து வழங்கப்படும் 6.30 டிஎம்சி தண்ணீரையும் சேர்த்து கேரளாவுக்கு மொத்தம்  12.30 டிஎம்சி தண்ணீர் வழங்கப்படுகிறது. கேரளாவின் சோலையாறு மின் உற்பத்தி நிலையத்தில் ஆண்டுக்கு சராசரியாக 390 கனஅடி தண்ணீரைப்  பயன்படுத்தி, மின்சாரம் உற்பத்தி செய்து,  12.30 டிஎம்சி தண்ணீரை மின் உற்பத்தி நிலையத்திலிருந்து வெளியேற்ற வேண்டும் என்று ஒப்பந்தத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதே சமயம், கேரளாவில் உள்ள சோலையாறு அணையை செப்டம்பர் 1-ம் தேதி மற்றும் பிப்ரவரி 1-ம் தேதி அதன் முழு கொள்ளளவில் (கடல் மட்டத்திலிருந்து 2,663 அடி ) வைத்திருக்க வேண்டும். பிற நாட்களில், கடல் மட்டத்திலிருந்து 2,658 அடியில் தண்ணீர் இருப்பு இருக்கும் வகையில் பராமரிக்க வேண்டும். அதாவது, கேரளா சோலையாறுக்கு 12.30 டிஎம்சி தண்ணீர் கொடுத்ததுபோக, தமிழகம் 2.50 டிஎம்சி தண்ணீரை எடுத்துக் கொள்ளலாம் என்று

இந்த  ஒப்பந்தத்தில் வரையறுக்கப்பட்டுள்ளது.

அணை பாதுகாப்பு விதிகளின்படி அணைகளில் நிமிடத்துக்கு 966.65 லிட்டர் வரை நீர்க்கசிவு இருக்கலாம். ஆனால், 5.42 டிஎம்சி தண்ணீரை தேக்கிவைக்கக் கூடிய அளவுக்கு கொள்ளளவு கொண்ட இந்த அணையில் அதிக அளவு நீர்க்கசிவு இருப்பது தெரியவந்தது.  2005 ஆகஸ்ட் மாதம் அணையில் நடைபெற்ற ஆய்வில்,  நிமிடத்துக்கு 1,828.25 லிட்டர்  நீர்க்கசிவு  இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து, அணை பாதுகாப்பு இயக்குநர், தலைமைப் பொறியாளர் கொண்ட குழுவினர் கூட்டாய்வு நடத்தி, அணையின் நீர்க்கசிவை  கட்டுப்படுத்த திட்டம் வகுத்தனர். ரூ.6.47 லட்சம் மதிப்பில், அணையின் தண்ணீர் தேங்கும் பகுதியில்  தூர்ந்துபோன கல் இணைப்புகளை அகற்றிவிட்ட, ரசாயனப் பூச்சுகளுடன் இணைந்த சிமென்ட் கலவையை அதிக அழுத்தத்தில் செலுத்தி, இடைவெளிகள் முற்றிலும் அடைக்கப்பட்டன. இதன் மூலம் அணையின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டது.

பரம்பிக்குளம் அணை!

பிஏபி திட்ட அணைகளில் அதிக கொள்ளளவு கொண்ட அணை பரம்பிக்குளம் அணையாகும். இது தமிழகத்தின்  3-வது பெரிய அணையாகும். இதன் கொள்ளளவு 17.82 டிஎம்சி. தமிழக சோலையாறு அணையிலிருந்து தண்ணீர் நேரடியாக தமிழகத்துக்கு வருவதில்லை. கேரள மாநிலம்  பாலக்காடுமாவட்டத்தின் வனப் பகுதிக்குள் அமைந்துள்ள பரம்பிக்குளம் அணைக்கு கொண்டுசெல்லப்பட்டு, அங்கிருந்து தமிழகத்துக்கு வருகிறது. கேரள வனப் பகுதிக்

குள் அமைந்திருந்தாலும்,  அணையின் கட்டுமானம், பராமரிப்பு, இயக்குதல் ஆகியவை தமிழகத்தின் கட்டுப்பாட்டில்தான் உள்ளன. பிஏபி திட்டத்தின் மிகப்பெரிய அணையான பரம்பிக்குளம் அணையின் கட்டுமானப் பணியில் ஈடுபட்ட பொறியாளர் முத்துசாமி,  பிஏபி திட்டத்தில் அணை கட்டுமானம், சுரங்க நீர்வழிப்பாதை அமைத்தல் ஆகியவை குறித்த நினைவுகளைப் பகிர்ந்துகொண்டார்.

“மலைப் பகுதியில் அமைந்துள்ள அணைகளில் பெரிய அணை பரம்பிக்குளம்.  சமவெளியில் உள்ள அணைகளில் பெரிய அணை ஆழியாறு.  இந்த இரு அணைகளின் பெயரை இணைத்து பரம்பிக்குளம்-ஆழியாறு திட்டம் என்று  பெயரிடப்பட்டது.

அணை கட்டும் இடம் தேர்வு செய்யப்பட்ட பின்னர், தென் மாவட்டங்களில் இருந்து ஒப்பந்ததாரர்கள் மூலம் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கூலித் தொழிலாளர்கள் வரவழைக்கப்பட்டனர். அடர்ந்த வனப் பகுதியில் சாலைகள் அமைக்கப்பட்டன. தொழிலாளர்கள் தங்குவதற்கு 100-க்கும் மேற்பட்ட நீண்ட குடிசைகளும் கட்டப்பட்டன. பிஏபி திட்ட கட்டுமானம் மற்றும் சுரங்கம் தோண்டும் பணியின்போது  20-க்கும் மேற்பட்டோர்  உயிரை இழந்துள்ளனர்.

பரம்பிக்குளம் அணை கட்டுமானப் பணிகள் ஒருபுறமும், பரம்பிக்குளம்  தூணக்கடவு  சுரங்கம் அமைக்கும் பணி மறுபுறமும் துரிதமாக நடைபெற்றது.  பரம்பிக்குளம்-தூணக்கடவு  சுரங்கம், பிஏபி திட்டத்தில் வெட்டப்பட்ட முதல் சுரங்கமாகும்.

பரம்பிக்குளம்-தூணக்கடவு  இடையே 8,186 அடி நீளத்துக்கு, குதிரை லாட வடிவில் சுரங்கம் தோண்ட முடிவு செய்தனர். சுரங்கத்தின் ஒரு முகப்பு பரம்பிக்குளத்திலும், மற்றொரு முகப்பு தூணக்கடவிலும் இருந்தது. சுரங்கம் தோண்டும் பணியில் ஒரு குழுவினர் பரம்பிக்குளத்திலிருந்து தூணக்கடவு நோக்கியும், மற்றொரு குழுவினர் தூணக்கடவுவிலிருந்து  பரம்பிக்குளம் நோக்கியும் ஈடுபட்டிருந்தனர்.

இந்த தொழில்நுட்பத்தில் சுரங்கம் தோண்டினால் நீண்டகாலம் பிடிக்கும்.  8 அணைகள், 8 சுரங்கப் பாதைகள்,

10 கால்வாய்கள்  அடங்கிய  பிரம்மாண்டமான இந்த திட்டத்தை குறித்த காலத்தில் முடித்தால்  மட்டுமே, மதிப்பீட்டுத் தொகைக்குள் முடிக்க முடியும். பணியை விரைந்து  முடிக்க நினைத்த  முதன்மைப் பொறியாளர் யூ.ஆனந்த ராவ், “பிஏபி திட்டத்தில் வெட்டப்படும் முதல் சுரங்கப் பாதையான பரம்பிக்குளம் சுரங்கப் பாதையை விரைந்து முடித்தால் மட்டுமே, மற்ற 7 சுரங்கப் பாதை பணிகளை விரைவில் தொடங்க முடியும்” என்று தனது குழுவினரிடம் அடிக்கடி கூறுவார்.

இதற்காக, கண்காணிப்புப் பொறியாளர்கள் சி.ஆர்.ராமமூர்த்தி, பி.பாலகிருஷ்ணன், செயற் பொறியாளர்கள் டி.எஸ்.கண்ணன், வி.பி.சுந்தரம் மற்றும் பொறியாளர்களுடன் ஆலோசனை நடத்தினர்.

நான்கு முகப்புகள் இருக்கக் கூடாதா?

‘ஒரு சுரங்கத்துக்கு இரண்டு முகப்புகள்தான் இருக்க வேண்டுமா ? நான்கு முகப்புகள் இருக்கக் கூடாதா? இந்த சுரங்கப் பணியில் 4 முகப்புகளை அமைக்கப் போகிறோம்.  அதற்கான தொழில்நுட்ப சாத்தியக்கூறுகளைக்  கண்டறியுங்கள்’  என்றார் ஆனந்தராவ். இதையடுத்து, தமிழகப் பொறியாளர்கள், `3 பாயின்ட் ப்ராப்ளம்’ என்ற நுட்பத்தில், சர்வே நடத்த முடிவு செய்தனர்.

ஒரு சுரங்கப் பாதை அமைக்க  அளவீடு செய்யும் ஆய்வுப் பணிக்கு, உயரமான மலைகளின் மீது ஏறி,  இரு பாயின்ட்களை சர்வே செய்து, அதை அடிப்படையாகக் கொண்டு, நிலப் பகுதியில் ஒரு பாயின்ட் சர்வே செய்து, கற்பனைக் கோடுகள் மூலம் இந்த 3 பாயின்ட்களையும் இணைத்து, `பேஸ் லைன்  வேல்யூ’வைக்  கணக்கிட்டனர்.

இதை அடிப்படையாகக் கொண்டு, மீண்டும் மலை மீது ஏறி 2 பாயின்ட்கள் சர்வே செய்தனர். இவ்வாறு ஒரு பாயின்ட் சர்வே செய்வதற்கே ஒரு நாளாகும். இந்த முறைக்கு `3 பாயின்ட்  ப்ராப்ளம்’ என்று பெயர்.  ஆறு  இன்ஜினீயர்கள் தினமும் 8 மணி நேரம் வீதம், ஒரு மாதம் சுரங்கம் அமைக்கும் சர்வே பணியில் பணியாற்றினர். சுரங்கத்தின் மொத்த நீளம் கணக்கிடப்பட்டு, அதன் மையப் புள்ளி கண்டறியப்பட்டது. அந்த இடத்தில் கிணறு தோண்டி, அதனுள்ளே லாரி சென்று வரக்கூடிய அளவுக்கு,  சரிவான நிலப் பாதை அமைக்கப்பட்டது. சுரங்கம் தோண்டும் பணியில் 4 குழுக்கள் ஈடுபட்டன.

ஏற்கெனவே ஒரு குழுவினர் பரம்பிக்குளம் முகப்பிலிருந்தும், மற்றொரு குழுவினர் தூணக்கடவு முகப்பிலிருந்து சுரங்கம் தோண்டும் பணியிலும் ஈடுபட்டிருந்தனர். தற்போது மேலும் இரு குழுக்கள் அமைக்கப்பட்டன.

இதில் ஒரு குழுவினர் சுரங்கக் கிணற்றின் ஒரு முகப்பில் இருந்து பரம்பிக்குளம் நோக்கியும், மற்றொரு குழுவினர் சுரங்க கிணற்றின் மற்றொரு முகப்பில் இருந்து தூணக்கடவு  நோக்கியும் சுரங்கம் தோண்டும் பணியில் ஈடுபட்டனர். இதில் எதிர்முனையிலிருந்து வருவோரும், இந்தப் பகுதியிலிருந்து செல்வோரும் ஒரே நேர்க்கோட்டில் சந்திக்க வேண்டும். சற்றே கோணம் மாறினாலும், சுரங்கம் திசை மாறி,  ஒன்றையொன்று சந்திக்காமலேயே சென்றுவிடும் சிக்கல் இருந்தது. என்ன செய்தார்கள் தமிழகப் பொறியாளர்கள்?

பிஏபி பயணம் தொடரும்...

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close