[X] Close

உரிக்காமலேயே கண்ணீரை வரவழைக்கும் சின்ன வெங்காயம்!


  • kamadenu
  • Posted: 12 Jun, 2019 10:54 am
  • அ+ அ-

-ஆர்.கிருஷ்ணகுமார்

வழக்கமாக வெங்காயத்தை உரிக்கும்போது கண்ணீர் வடிப்போம். ஆனால், சின்ன வெங்காயம் பயிரிடும் விவசாயிகள்,  பல்வேறு பிரச்சினைகளால்  கண்ணீர் வடிப்பதாகத் தெரிவிக்கின்றனர். பல்வேறு இடர்பாடுகளுக்கிடையே பயிர் சாகுபடி செய்து, போதிய விளைச்சல் கிடைத்தாலும், அதற்கு உரிய விலை கிடைக்காமல் தவிக்கிறோம் என்று வேதனை தெரிவிக்கின்றனர் விவசாயிகள்.

கொங்கு மண்டலத்தில் கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், நாமக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் சின்ன வெங்காயம் சாகுபடி செய்யப்படுகிறது. கோவை, திருப்பூர் மாவட்டங்களில் தொண்டாமுத்தூர், உடுமலை, தாராபுரம், பல்லடம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சின்ன வெங்காயம் விளைவிக்கப்படுகிறது. வெங்காய சாகுபடி தொடர்பாக தீத்திபாளையத்தைச் சேர்ந்த விவசாயி ஏ.செல்வராஜ், தமிழ்நாடு விவசாயிகள் சங்க நிர்வாகி தென்னமநல்லூர் ஆறுச்சாமி ஆகியோரிடம் பேசினோம்.

“சின்னவெங்காயத்தை வைகாசியில விதைச்சு, ஆவணியில அறுவடை செய்யறோம். தென்மேற்குப் பருவமழையை நம்பித்தான் இதைப் பயிரிடறோம். தொண்டாமுத்தூர் பகுதியில் அதிக அளவு சின்ன வெங்காயம் பயிராகுது. திருச்சி மாவட்டம் துறையூர்ல இருந்து விதை வெங்காயம் வாங்கிட்டு வர்றோம்.  ஏக்கருக்கு 650 கிலோ விதை வெங்காயம் தேவை. கிலோ ரூ.36 முதல் ரூ.42 வரை கொடுத்து விதை வெங்காயம் வாங்குறோம்.

நிலத்தில் உழவு ஓட்டி, ஒன்றரை அடி இடைவெளியில்,  3 அடி அகலத்துக்கு பார் அமைக்கிறோம். அதில் 4 லைனுக்கு வெங்காயம் நடவு செய்யறோம். இதுக்கு 20-ல் இருந்து 25 வரை ஆட்கள் தேவை. கூலி ஆளுங்களுக்கு ரூ.300 கொடுக்கறோம். அடியுரமாக டிஏபி, வேப்பம்புண்ணாக்கு பயன்படுத்தறோம். களைச் செடிகளை தடுக்க களைக்கொல்லி ஸ்பிரே செய்யறோம்.

வெங்காய பயிருக்கு வெயில் ஆகாது. அதனாலதான், வெப்பம் குறைவாக இருக்கற காலத்துல பயிரிடறோம். 15 நாளைக்கு ஒருமுறை பூச்சிமருந்து, பூஞ்சாணம் தெளிக்கறோம். தழை சாம்பல் சத்துகளுக்காக யூரியா, சல்பேட், பொட்டாஷ் உரம் போடறோம். சிலர், இயற்கை முறையில் தயாரிக்கப்பட்ட உரங்களையும் பயன்படுத்தறாங்க.சின்ன வெங்காயத்தைப் பொறுத்தவரை 60 நாளுக்கு அப்புறம் மகசூல் எடுக்கலாம். எந்தப் பிரச்சினையும் இல்லாம நல்லா வெளஞ்சா ஏக்கருக்கு 5 முதல் 6 டன் வரைக்கும் மகசூல் கிடைக்கும். ரூ.45 ஆயிரம் முதல் ரூ.60 ஆயிரம் வரை உற்பத்தி செலவாகிறது. அறுவடை செய்யும்போது விலை கிடைக்காது. இதனால், வெங்காய பட்டறையில் இருப்பு வெச்சி, அதுக்கப்புறம் விக்கறோம். வெங்காய பட்டறைக்கு படல் அமைக்க ரூ.1500 முதல் ரூ.2 ஆயிரம் வரை செலவாகும்.

வயல்ல இருந்து வெங்காயத்தை பறிச்சி, வண்டியில ஏத்தி, பட்டறைக்கு கொண்டுவந்து, இருப்பு வைக்கறதுக்கும் செலவு செய்ய வேண்டியிருக்கும். அதேபோல, 90 முதல் 100 நாட்கள் வரைதான் பட்டறையில வைக்க முடியும். அதுக்கப்புறம் முளைப்பு விட்டுடும். பொதுவாக, ஐப்பசி, கார்த்திகைக்குள்ள வெங்காயத்தை வித்துடணும்.

பட்டறையில் வெங்காயத்தை இருப்பு வைக்கும்போது, காற்றோட்டம் அவசியம். அதேபோல, மழை பெய்யும்போது, பட்டறைக்குள்ள தண்ணீர் இறங்காம பாத்துக்கணும். கொஞ்சம் தண்ணீர் இறங்கினாகூட, வெங்காயம் கெட்டுப்போயிடும். மொத்த வியாபாரிங்கதான் எங்ககிட்ட இருந்து வெங்காயம் வாங்கிப் போவாங்க.

அவங்க சில்லறை வியாபாரிங்களுக்கு விப்பாங்க. சில சமயம் வெங்காயம் வாங்கிட்டுப்போற வியாபாரிங்க, பணம் கொடுக்காம ஏமாத்தின சம்பவங்களும் உண்டு.வெங்காய சாகுபடியில ஆட்கள் பற்றாக்குறை பிரச்சினை இருக்குது.

ஒரே நேரத்துல பல பகுதிகளிலும் வெங்காயம் சாகுபடி செய்யும்போது, தேவையான ஆட்கள் கிடைக்கறது

இல்லை. அதேபோல, இடு பொருட்களோட விலை தொடர்ந்து அதிகரிச்சுக்கிட்டே இருக்கு. பயிர் சாகுபடி செஞ்சு, 50 நாட்களுக்குப் பின்னால அதிக மழை பெய்தால், வெங்காயம் அழுகிவிடும். ஒரு வெங்காயத்துல அழுகல் இருந்து கண்டுபிடிக்கலைனாலும், பட்டறையில் வைக்கும்போது மொத்த வெங்காயத்தையும் அது கெடுத்துடும்.

அதேபோல, வறட்சியாக இருந்தாலும் பிரச்சினைதான். அதிகமாக மழை பெய்தாலும் தொல்லைதான். இத்தனையும் தாண்டி மகசூல் எடுத்தா, சரியான விலை கிடைக்கறதில்லை. மொத்த வியாபாரி கொடுக்கறதுதான் விலை. வேற வழியில்லாம, நாங்களும் கேட்கற விலைக்கு வெங்காயத்தை வித்துடுவோம்.

உரிய விலை கிடைக்குமா?

சின்ன வெங்காயத்துக்கு அரசாங்கம் சரியான விலை நிர்ணயிக்கணும். வெங்கயத்தை பதப்படுத்தி, இருப்பு வைக்கவும் உதவணும். அரசே கொள்முதல் மையங்களை நிறுவி, சின்ன வெங்காயத்தை கொள்முதல் செய்யணும்.

இயற்கை பேரிடரால வெங்காய சாகுபடி, மகசூல் பாதிக்கப்பட்டா, போதுமான நிவாரணம் வழங்கணும். பயிர்க் காப்பீடு திட்டத்துல, சின்ன வெங்காய விவசாயிகள் எல்லோருக்கும் உரிய இழப்பீடு கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதிக்கப்பட்ட ஒவ்வொரு விவசாயிக்கும் இழப்பீடு கிடைக்கச் செய்யணும். 50 சதவீத மானியத்துல விதை வெங்காயம் தந்து, விவசாயிகளை ஊக்குவிக்க வேண்டும்.

வெங்காய பட்டறை அமைக்க மானியம் கொடுக்கறாங்க. ஆனா, சில விவசாயிகளுக்கு மட்டும்தான் இது கிடைக்குது. எல்லா விவசாயிகளுக்கும் மானியம் கிடைக்க வழி செய்யணும். அதேபோல, விவசாயிகளுக்கு பயனுள்ள வகையில் வெங்காய பட்டறை அமைக்க அனுமதிக்க வேண்டும். சின்ன வெங்காயம்சாகுபடி செய்யும் விவசாயிகள் தொடர்பா கணக்கெடுப்பு நடத்தணும். அப்போதுதான், இழப்பீடு கிடைக்க வசதியாக இருக்கும். மொத்தத்துல, சின்ன வெங்காயம் பயிரிடும் விவசாயிகள், கண்ணீர்விடாம பாத்துக்கணும்” என்றனர் நெகிழ்ச்சியுடன்.

பெரிய பலன்களைத் தரும்...

தமிழகத்தைப் பொறுத்தவரை சைவம், அசைவம் என எல்லா சமையல்களிலும் முக்கிய இடத்தைப் பெறுகிறது சின்ன வெங்காயம். லேசான இனிப்பு கலந்த, கார சுவையைப் பெற்றுள்ள சின்ன  வெங்காயம், மருந்துப் பொருளாகவும் பயன்படுத்தப்படுகிறது. வெப்ப மண்டல மற்றும் மித வெப்ப மண்டலங்களில், வடிகால் அமைப்புடைய மண்ணில் இது செழித்து வளர்கிறது.

இதன் தாயகம் தென்கிழக்கு ஆசியா. அங்கிருந்து இந்தியாவுக்கு வந்து, இங்கு பிரபலமாகியுள்ளது. தற்போது உலகெங்கும் இது பயிரிடப்படுகிறது. சுமார் 1,000 ஆண்டுகளுக்கு முன்பே சின்ன வெங்காயம் பயிர் செய்யப்பட்டதாக கிரேக்க இலக்கியங்கள் மற்றும் வரலாற்றுக் குறிப்புகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.

“சின்ன வெங்காயத்தில் பல்வேறு வகை வைட்டமின்களுடன், இரும்பு, தாமிரம்,  மங்கனீசு, பாஸ்பரஸ், பொட்டாசியம், கால்சியம், மெக்னீசியம், செலீனியம், துத்தநாக சத்துகளும் உள்ளன. சீரான ரத்த ஓட்டம், உடல் வளர்சிதை மாற்றம், சிவப்பணுக்கள் உற்பத்தி, காயங்களை சீக்கிரம் ஆற்றுதல் உள்ளிட்ட  தன்மைகள் கொண்ட சின்ன வெங்காயம், கொழுப்பைக் குறைத்து இதயத்துக்கும் இதமாக இருக்கும்.  உயர் ரத்த அழுத்தத்தைக் குறைப்பதிலும், சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்துவதிலும் இதற்குப் பங்குண்டு. எனவே, சின்ன வெங்காயத்தை உண்டு, மூளை மற்றும் நரம்பு நலத்தைப் பேணுவதுடன், மனஅமைதியையும் பெறலாம்” என்கின்றனர் மருத்துவர்கள்.

வாக்களிக்கலாம் வாங்க

'கேம் ஓவர் ' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close