[X] Close

வாகன பெருக்கம் அதிகரிப்பு: அதிர்வுகளால் நெல்லையப்பர் கோயிலுக்கு பாதிப்பு ஏற்படலாம்


thirunelveli-temple-land-stability

நெல்லையப்பர் கோயில் ரதவீதியில் உள்ள பழமையான கட்டிடம் | படம்: மு.லெட்சுமி அருண்

  • kamadenu
  • Posted: 14 Jun, 2018 11:26 am
  • அ+ அ-

திருநெல்வேலியில் உள்ள பாரம்பரியமிக்க நெல்லையப்பர் கோயில் ரதவீதிகளின் பழமை பாழாகி வருகிறது என்றும், வாகன பெருக்கத்தால் ஏற்படும் அதிர்வால் கோயிலுக்கு பாதிப்பு ஏற்படக்கூடும் என்றும், பெருமாள்புரத்தை சேர்ந்த கட்டிட கலைத்துறை மாணவர் வி.எஸ். ஆக்னல் ஜோன் தனது ஆய்வின் மூலம் தெரிவித்துள்ளார். 

ஒசூர் அதியமான் பொறியியல் கல்லூரியில் 5 ஆண்டுகள் பிஆர்க் பட்டப்படிப்பை கடந்த ஏப்ரலில் முடித்துள்ள இவர், திருநெல்வேலி டவுனில் நெல்லையப்பர் கோயில் ரதவீதிகள், அவற் றில் உள்ள பழமையான கட்டிடங்கள், அருகில் உள்ள நயினார்குளம் ஆகியவற்றின் பாரம்பரியம், தற்போதைய நிலை, அவற்றை மீட்டுருவாக்கம் செய் யும் வழிமுறைகள் குறித்து விரி வான ஆய்வு செய்துள்ளார். 120 பக்கங்கள் கொண்ட இந்த ஆய்வு அறிக்கையை சமர்ப்பித்து ஆக்னல் ஜோன் பிஆர்க் பட்டம் பெற்றிருக்கிறார். 

அவரது ஆய்வு அறிக்கையில் இடம்பெற்றுள்ள பல்வேறு விவரங்கள்: 

7-ம் நூற்றாண்டை சேர்ந்த திருநெல்வேலி நெல்லையப்பர் காந்திமதியம்மன் திருக்கோயிலின் சுற்றுவட்டார பகுதி வணிகத் தலமாகவும், போக்குவரத்து நெரிசல் அதிகமுள்ள இடமாகவும் மாறியிருக்கிறது. 

கோயிலை சுற்றியுள்ள ரதவீதிகளில் உள்ள குடியிருப்புகளை இடித்து வணிக நிறுவனங்கள் அமைக்கப்பட்டு வருகிறது. இங்குள்ள கட்டிடங்கள் மற்றும் குடியிருப்புகளில் 61 சதவீதம் 100 ஆண்டுகளுக்கும் மேல் பழமையானவை. 24 சதவீத கட்டிடங்கள் 25 முதல் 75 ஆண்டுகளுக்கு உட்பட்டவை. 15 சதவீத கட்டிடங்கள் 25 ஆண்டுகளுக்கு உட்பட்டவை. 

2 % கட்டிடங்கள் மிகமோசம்

மொத்தமுள்ள கட்டிடங்களில் 27 சதவீத கட்டிடங்கள் மட்டுமே நல்ல நிலையில் இருக்கின்றன. 71 சதவீத கட்டிடங்கள் ஓரளவுக்கு நல்ல நிலையில் இருக்கின்றன. 2 சதவீத கட்டிடங்கள் மிகவும் மோசமான நிலையில் உள்ளன. 

மேலும், ரதவீதிகளில் 82 சதவீதம் ஈரடுக்கு கட்டிடங்களாகவும், 11 சதவீதம் ஓரடுக்கு கட்டிடமாகவும், 6 சதவீதம் 3 அடுக்கு கட்டிடங்களாகவும், 1 சதவீத கட்டிடங்கள் பல அடுக்கு மாடி கட்டிடங்களாகவும் உள்ளன.

ரதவீதிகளில் நவீன கட்டிடங்கள் வருகை அதிகரித்திருக்கிறது. ரதவீதிகளில் உள்ள சாலைகள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருக்கின்றன. பொதுமக்களுக்கான நடைபாதை இல்லை. அவர்களுக்கு கழிப்பிட வசதிகளும் செய்துதரப்படவில்லை. வாகன கட்டுப்பாடு அவசியம். வாகனங்களில் இருந்துவரும் புகை மண்டலம் கோயிலை பாதிக்கிறது.

பேட்டரி கார் இயக்கலாம்

கோயிலை சுற்றியுள்ள இடத்தில் 10 நிமிடங்களுக்கு 2 பேருந்துகள் கடந்து சென்று கொண்டிருக்கின்றன. இதுபோன்ற கனரக வாகனங்களின் அதிர்வுகளால் கோயில் மற்றும் சுற்றிலுமுள்ள பழமையான கட்டிடங்களுக்கு பாதிப்பு ஏற்படும் வாய்ப்புகள் அதிகம். 

எனவே, ரதவீதிகளில் வாகன போக்குவரத்தை முறைப்படுத்த வேண்டும். கனரக வாகனங்களுக்கு தடைவிதிக்கலாம். ரதவீதிகளில் இயக்க பேட்டரி கார் போன்றவற்றை பயன்பாட்டுக்கு கொண்டுவரலாம். காலை 9 மணி முதல் இரவு 9 மணிவரை வாகனங்களை இங்கு அனுமதிக்க கூடாது. சாஞ்சியிலுள்ள பிரசித்திபெற்ற ஸ்தூபியை அதிர்வுகளில் இருந்து பாதுகாக்க வேண்டி, நீதிமன்ற உத்தரவுப்படி அதையொட்டிய ரயில் நிலையத்தில் ரயில்கள் 10 கி.மீ. வேகத்துக்குள் செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது.


ஆக்னல் ஜோன்

மறையும் பாரம்பரியம் 

பாரம்பரிய வீதிகள், பழமை வாய்ந்த தெருக்களில் வைக்கப்படும் விளம்பர பலகைகள், அங்குள்ள கட்டிடங்களில் பூசும் வண்ணங்களிலும் பல கட்டுப்பாடுகள் இருக்கின்றன. இந்த கட்டுப்பாடுகள் திருநெல்வேலியில் பின்பற்றப்படவில்லை. இதை அரசுத்துறைகள் கவனத்தில் கொள்ள வேண்டும். 

கடந்த 50 ஆண்டுகளில் திருநெல்வேலி டவுனில் ரதவீதிகளில் 13 சதவீத குடியிருப்புகள் வணிக நிறுவனங்களாக்கப்பட்டு, புதிய கட்டுமானங்கள் உருவாகியிருக்கின்றன. பழைய கட்டுமானங்களை இல்லாமல் செய்து நவீனத்துவம் புகுத்தப்பட்டிருக்கிறது. இதனால் ரத வீதிகள் பாரம்பரியத்தை இழக்கும் அபாயத்தை சந்தித்து கொண்டுள்ளன. இவ்வாறு ஆய்வில் பல்வேறு தகவல்கள் தெரிவிக்கப்பட்டிருக்கின் றன.

அருங்காட்சியகம் அமைக்கலாம்

5 மாதம் தொடர்ச்சியாக ஆய்வு மேற்கொண்ட மாணவர் ஆக்னல் ஜோன் கூறியதாவது:

ரதவீதிகளின் பழமையை பாதுகாக்க பல்வேறு நடவடிக்கைகளை மாவட்ட, மாநகராட்சி நிர்வாகங்கள் எடுக்க வேண்டும். திருநெல்வேலியின் பழமையையும், பாரம்பரியத்தையும், பெருமையையும் தெரியப்படுத்தும் வகையில் இப்பகுதியில் அருங்காட்சியகம் அமைக்கலாம். ரதவீதிகளில் போக்குவரத்தை ஒழுங்குபடுத்த வேண்டிய கட்டாயம் இருக்கிறது. இதற்கு ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். இப்பகுதியில் பழைய கட்டிடங்களை வாடகைக்கோ, அல்லது விற்பனைக்கோ அளிக்கிறார்கள். அவற்றை புனரமைக்கும்போது பழமையை மாற்றாமல் இருக்கச் செய்ய வேண்டும். 

குளம் புனரமைப்பு 

மாநகர மீட்டுருவாக்கம் என் பது மாவட்ட, அரசுத்துறைகளின் கைகளில் உள்ளது. அகமதாபாத்திலும், புதுச்சேரியிலும் இதுபோன்ற பழமையான வீதிகளை மீட்டுருவாக்கம் செய்யும் முயற்சிகளை அரசுத்துறைகள் எடுத்துள்ளன. 

அதுபோன்று டவுன் ரதவீதிகள், அதை சுற்றிலுமுள்ள பழமையான கட்டிடங்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். சென்னையில் சேத்துப்பட்டு, பெங்களூருவில் உள்ள சாங்கி குளம் போன்றவற்றை புதுப்பிக்க மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகளைப்போல் டவுன் நயினார்குளத்தையும் புனரமைப்பு செய்யலாம். இவ்வாறு அவர் கூறினார். 

- .அருள்தாசன்

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close