[X] Close

தமிழக அளவில் ரத்தம் சேகரிப்பில் மதுரை அரசு மருத்துவமனைக்கு 2-ம் இடம்:


blood-donation-blood-collection-madurai

மதுரை ராஜாஜி மருத்துவமனையில் ரத்த தானம் செய்யும் ரத்தக் கொடையாளர்கள். (கோப்பு படம்)

  • kamadenu
  • Posted: 14 Jun, 2018 11:23 am
  • அ+ அ-

ரத்தம் சேகரிப்பில் தமிழகத்திலேயே மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை 2-ம் இடத்தில் உள்ளது. ஆனாலும், ரத்தம் பற்றாக்குறை தொடர்கிறது. 

ஒரு விநாடி கூட ஓய்வின்றி ஓடிக் கொண்டிருக்கும் ரத்தம், மனிதர்களின் உடலில் உள்ள ஒவ்வொரு உறுப்புக்கும் உயிர் கொடுக்கும் நம்பிக்கை நதியாகும். அந்த நதியோட்டம் தடைபடாதவரை ஆரோக்கியத்துக்கு கேடில்லை. தடைப்பட்டாலோ, வற்றினாலோ, சிக்கல்தான்.

ரத்த தானம் தொடர்பாக தற்போது இளைஞர்கள், மாணவர்களிடையே அதிக விழிப்புணர்வு ஏற்பட்டு வருகிறது. மாணவர்கள், இளைஞர்கள், தாங்களாகவே முன்வந்து முகம் தெரியாத நபர்களுக்கு முகம் சுளிக்காமல் ரத்த தானம் செய்கின்றனர். ஆனால், பொதுமக்களிடம் இன்னமும் ரத்த தானம் பற்றிய முழு விழிப்புணர்வு ஏற்படவில்லை. அதனால், ரத்தத்தின் தேவையும், அதன் பற்றாக்குறையும் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. 

இதுகுறித்து மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை ரத்த வங்கி மருத்துவர் சிந்தா கூறியது: ‘‘தமிழக அரசு மருத்துவமனைகளில் ரத்தம் சேகரிப்பில் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் ரத்த வங்கி முதலிடம் வகிக்கிறது. அங்கு ஆண்டுக்கு சராசரியாக 32 ஆயிரம் யூனிட் ரத்தம் சேகரமாகிறது. அவர்களுக்கு அடுத்து, மதுரை அரசு ராஜாஜி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் ரத்த வங்கி 2-ம் இடம் வகிக்கிறது. இங்கு ஆண்டுக்கு 25 ஆயிரம் யூனிட் ரத்தம் சேகரிக்கிறோம். ராஜாஜி மருத்துவமனையின் ரத்த வங்கிக்கு 25 ஆயிரம் ரத்தக் கொடையாளர்கள் உள்ளனர்.

ஆனால், இன்னும் அதிகம் தேவைப்படுகின்றனர். ரத்த தானம் பற்றிய விழிப்புணர்வு மக்களிடம் இன்னும் முழுமையாகச் சென்று அடையாததால், ஆண்டுக்கு ஒருமுறை கூட ரத்ததானம் செய்ய பெரும்பாலானோர் முன் வருவதில்லை. அதிகபட்சம் ஆண்டுக்கு 3 முறையும், குறைந்தபட்சம் ஒருமுறையாவது ரத்த தானம் செய்யலாம். 

தற்போது 3 ஆயிரம் யூனிட் ரத்தம் சேகரிக்கக் கூடிய வசதி, மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் உள்ளது. ஆனால், ரத்தக் கொடைக்கு கல்லூரிகள், என்ஜிஓ-க்கள், தனியார் நிறுவனங்களை நாடித்தான் செல்ல வேண்டி உள்ளது. கல்லூரி விடுமுறைக் காலங்களில் ரத்தம் பற்றாக்குறை ஏற்பட்டு விடுகிறது.

பொதுமக்களும், இந்த ரத்தக் கொடையில் பங்கெடுத்தால் இப்பிரச்சினை வராது. ரத்த தானம் செய்வதை ஊக்கப்படுத்தவும், ரத்தம் தேவைப்படும்போது ரத்தக் கொடையாளர்களை அழைக்கவும் ரத்த வங்கியில் ‘ஹெல்ப் டெஸ்க்’ செயல்படுகிறது. அவர்கள், ரத்தக் கொடை செய்யாமலே ரத்த தானம் பெறும் நோயாளிகளுடைய உறவினர்களுக்கு ரத்த தானம் பற்றி விழிப்புணர்வு செய்வார்கள். 

ரத்தத்தை உற்பத்தி செய்ய முடியாது என்பதை அவர்களுக்கு புரிய வைத்து, அவர்களையும் ரத்தக் கொடையாளர்களாக மாற்ற முயற்சி மேற்கொண்டுள்ளோம். மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சேகரிக்கப்படும் ரத்தம், மதுரை மாவட்டத்துக்கு மட்டும் இல்லை. விருதுநகர், ராமநாதபுரம், சிவகங்கை, திண்டுக்கல், தேனி உள்ளிட்ட 7 மாவட்டங்களில் இருந்து வரும் நோயாளிகளுக்கும் பயன்படுகிறது. 

ஆண்டுதோறும் பொங்கல், தீபாவளி பண்டிகைகளையும், பிறந்த நாள், திருமண நாள்களை கொண்டாடுகிறோம். அந்நாட்களில் யாராவது ஒருவருக்கு ஆண்டுக்கு ஒருமுறையாவது ரத்த தானம் செய்வதை பழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும், ’’ என்றார். 

ரத்தம்….மனிதனின் உயிர் துளி

 மதுரையில் ‘உயிர் துளி’ என்ற பெயரில் இயங்கும் ‘வாட்ஸ் அப்’ நண்பர்கள் குழு, ஏராளமானோருக்கு ரத்தம் அளித்து உயிரை காப்பாற்றி வருகிறது. அக்குழுவில் ஒருவரான மதுரை வில்லாபுரம் எம். தேவராஜன் (43) கூறியது: எத்தனை முறை ரத்த தானம் செய்தேன் எனக் கணக்கில்லை, 44 வயதாகிறது, 25 ஆண்டுகளாக ரத்த தானம் செய்கிறேன். 

கல்லூரி முதலாம் ஆண்டு படிக்கும்போது நண்பர்கள் சேர்ந்து ஏதாவது நல்லது செய்யலாம் என நினைத்தபோது எங்களிடம் பொருளாதார வசதியில்லை. ரத்த தானம் செய்யலாம் என்று அன்று தொடங்கிய காரியம் இப்போது அத்தியாவசியமானதாகி விட்டது. எந்த வேலையில் இருந்தாலும் அப்படியே போட்டுவிட்டு ரத்த தானம் செய்ய புறப்பட்டு விடுவேன். 

நான் மறந்துவிட்டாலும், கடைசியாக எப்போது கொடுத்தோம் என்பதை உயிர் துளி வாட்ஸ் அப்-ல் நினைவூட்டுவர். அதனால், 3 மாதத்துக்கு ஒருமுறை ரத்ததானம் செய்வதில் எந்த தடையும் இல்லை. ரத்தக் கொடை எங்கள் குடும்பத்தில் என்னோடு நின்றுவிடாமல் அடுத்த தலைமுறையினரையும் ஊக்கப்படுத்துகிறோம் என்றார்.

- ஒய். ஆண்டனி செல்வராஜ்

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close