[X] Close

ஓ... பட்டர்ஃபிளை... பட்டர்ஃபிளை... ஏன் விரிக்கவில்லை சிறகை?


  • kamadenu
  • Posted: 11 Jun, 2019 08:33 am
  • அ+ அ-

இந்த உலகில் அழகுக்கு உதாரணமாய் சொல்லப்படுபவைகளில் பட்டாம்பூச்சிகளுக்கும் இடம் உண்டு. வண்ணச் சிறகை விரித்து அவை பறப்பதை ரசிப்பதே தனி சுகம்தான். தற்போது பருவமழை தள்ளிப் போவதால், பட்டாம்பூச்சிகளின் இடப் பெயர்ச்சி தாமதமாவதாகவும், இயற்கை சமன்பாடு மாறுவதாகவும் கவலை தெரிவிக்கின்றனர் சூழல் ஆர்வலர்கள்.

இயற்கையின் தன்மை மாறாமல் பாதுகாப்பதிலும், இயற்கை நிகழ்வுகளை முன்கூட்டியே தெரிவிப்பதிலும் பட்டாம்பூச்சிகளின் பங்கு இன்றியமையாதது. மலைக் காடுகள், அடர்ந்த வனங்களில்  மட்டுமின்றி, பல்வேறு பகுதிகளிலும் அரியவகைத் தாவரங்கள் மற்றும் மலர்களின் பரவலாக்கத்துக்கு இவற்றின்  மகரந்த சேர்க்கையே முக்கியக் காரணம்.

சின்னஞ்சிறிய பட்டாம்பூச்சிகள்,  நிலத்தில் வாழும் பெரிய உயிரினமான காட்டு யானைக்  கூட்டங்களைப்போல, ஆண்டுக்கு இருமுறை பருவச் சூழலுக்கு ஏற்றாற்போல  இடம்பெயரும் இயல்புடையவை. தென்மேற்குப் பருவமழை தொடங்கும்போது மேற்குத் தொடர்ச்சி மலைக் காடுகளில் இருந்து, கிழக்குத் தொடர்ச்சி மலைக் காடுகளுக்கு லட்சக்கணக்கில் இடம்பெயரும். இதேபோல, இன விருத்திக்கு பின்னர், அங்கிருந்து வடகிழக்குப் பருவமழை தொடங்கும்போது மீண்டும் மேற்குத் தொடர்ச்சி மலைக் காடுகளை வந்தடையும்.

இந்த இடப்பெயர்ச்சி, பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக தவறாமல் தொடரும் ஓர் இயற்கை சார்ந்த நிகழ்வு. மே மாதம் இறுதியில் தொடங்கி, ஜூன் மாத தொடக்கத்தில் இடப்பெயர்ச்சி உச்சகட்டத்தில் இருக்கும். ஆனால், இந்த ஆண்டு இதுவரை பட்டாம்பூச்சிகளின் வலசை தொடங்கவில்லை.

வழக்கமாக கோடையில் ஆயிரம் மீட்டர் உயரத்துக்கும் கீழே இருக்கும் இலையுதிர்க்  காடுகள் மட்டுமே காய்ந்த நிலையில் இருக்கும். ஆயிரம் மீட்டருக்கு மேலே இருக்கும் சோலைக்காடுகள், ஈரப்பதத்தை தக்கவைத்திருக்கும். அங்கிருக்கும் நீர் நிலைகளில் தண்ணீர் இருக்கும். யானைகள் உள்ளிட்ட வன விலங்குகள் அங்கு இடம் பெயர்வதன் மூலம் உயிர் பிழைக்கும். ஆனால்,  இம்முறை சோலைக்காடுகளும் பெருமளவு வறண்டு விட்டன. கீழே சமவெளிக் காடுகளிலும் புற்களும், மலர்ச் செடிகளும் காய்ந்து கிடக்கின்றன. கோடையில் பெய்ய வேண்டிய மழையும், மலை சார்ந்த பகுதிகளில் பொய்த்துப்போனது. வழக்கமான பருவமழையும் தள்ளிப்போவதால், பட்டாம்பூச்சிகளின் இடப்பெயர்ச்சியும் தாமதமாகியுள்ளது.

ஏற்கெனவே, தமிழகத்தில் இருந்த பல வகை பட்டாம்பூச்சிகளை பருவநிலை மாற்றத்தால்,  கடந்த சில ஆண்டுகளாக பார்க்கவே முடியவில்லை என்று கவலை தெரிவிக்கும் பட்டாம்பூச்சி ஆர்வலர்கள், நடப்பாண்டு உணவுக்காகவும், இன விருத்திக்காகவும் வழக்கமாக வலசை செல்லும் வண்ணத்துப்பூச்சிகள், மழை தாமதமாவதால் இயற்கையான இடப்பெயர்வை மேற்கொள்ளவில்லை என்கின்றனர்.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகேயுள்ள கல்லார் வனப் பகுதியை `பட்டர்பிஃளை ஹாட் ஸ்பாட்' என்று போற்றுகின்றனர் பூச்சியியல் துறை வல்லுநர்கள். இங்கு அண்மையில் மேற்கொண்ட ஆய்வில், வழக்கமான பட்டாம்பூச்சிகளின் வலசை இன்னமும் தொடங்கவில்லை என்பது தெரியவந்துள்ளது. எனினும், விரைவில் பருவமழை தொடங்கும். தாமதம் ஏற்பட்டாலும், வனப் பகுதிகளில்  பசுமை திரும்பும். அப்போது, பட்டாம்பூச்சிகளின் இடப்பெயர்ச்சியும் தொடங்கும் என்கின்றனர் வல்லுநர்கள்.

ஏதோ ஒரு மூலையில், ஒரு வண்ணத்துப்பூச்சியின் சிறகசைப்பு, மற்றொரு இடத்தில் நிகழ உள்ள  இயற்கை பேரிடரைச்  சுட்டிக்காட்டும். இதை `வண்ணத்துப்பூச்சி விளைவு' என்பார்கள். தற்போது, பட்டாம்பூச்சிகளின் வலசை தள்ளிப்போவது, இயற்கையின் சமன்பாடு மாறி வருவதையே சுட்டிக்காட்டுவதாக உள்ளது என்றும் கவலை தெரிவிக்கின்றனர் சூழல் ஆர்வலர்கள்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close