[X] Close

சிக்கலில் மாட்டிக் கொண்டால் முடங்கி விடாதீர்கள்; எதிர்த்துப் போராடுங்கள்!- `மாயவலை'யிலிருந்து தப்ப இளம் பெண்களுக்கு அறிவுரை


  • kamadenu
  • Posted: 11 Jun, 2019 08:28 am
  • அ+ அ-

பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சூழலில், இளம் பெண்கள் சிக்கல்களுக்குள் சிக்கிக் கொள்ளாமல் இருப்பதற்கும், ஒருவேளை சிக்கிக் கொண்டால் தப்பிப்பதற்கான வழிகாட்டுதல்களையும் வழங்கியது `மாயவலை' நிகழ்ச்சி. ஸ்ரீகிருஷ்ணா ஸ்வீட்ஸ் நிறுவனம் சார்பில் கோவையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் இளம் பெண்களுடன், பெற்றோரும் பெருமளவு திரண்டனர்.

ஸ்ரீகிருஷ்ணா ஸ்வீட்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் எம்.கிருஷ்ணனின் வரவேற்புக்குப் பிறகு சிறப்பு அழைப்பாளர்களின் உரை தொடங்கியது.

சமூக ஊடகங்களைப் பாதுகாப்பாகப் பயன்படுத்துவது குறித்து உளவியல் ஆலோசகர் கிருத்திகா தரண் பேசும்போது "உங்கள் செல்போனில் எதையும் அழிக்காமல் பிள்ளைகளிடம் கொடுக்க முடியும் என்றால்தான், உங்கள் பிள்ளையும் அவரது செல்போனை உங்களிடம் கொடுப்பார். எனவே, நீங்கள் ஒரு ரோல் மாடலாக நடந்துகொள்ள வேண்டியது அவசியம். சமூக வலைதளங்களில் பெரும்பாலான பதின் பருவப் பெண்கள் எளிதாக மயங்கி விடுவதற்குக் காரணம் `வாவ் ஃபேக்டர்' எனும் சிறிய ஆச்சரியம்தான்.  நாம் எதை எழுதினாலும், பகிர்ந்தாலும் லைக் போடுவதற்கும், பாராட்டுவதற்கும்,  அங்கீகரிப்பதற்கும் நண்பர்கள் இருக்கிறார்கள் என்ற சிறிய பரவசம்தான் இளம் பெண்களை பெரிதும் ஈர்க்கிறது.

அங்கீகாரத்துக்கு ஏங்க வேண்டாமே!

ஒரு படத்தைப் பகிர்ந்ததும், இன்பாக்ஸில் வந்து `நீங்க அழகா இருக்கீங்க' என்று ஒருவர் சொல்கிறார் என்றால், பொது வெளியில் கமென்டாக சொல்லாமல், உள்பெட்டியில் தனியாக சொல்வதன் காரணம் என்ன என்பதை  யோசிக்க வேண்டும். படமோ, வீடியோவோ, எதைப் பகிர்ந்தாலும் அது

நம்முடையது அல்ல. சமூக வலைதளங்களின் சர்வர்களுக்குச்  சென்றுவிடுகிறது. இளம் பெண்கள் தங்களது தோற்றம்,  திறமை தொடர்பான இன்னொருவரின் அங்கீகாரத்துக்காக ஏங்கும் மனப்போக்கைத் தவிர்க்க வேண்டும்.

ஒரு ஆணின் தகவல் தொடர்பு முறையை கவனிக்க வேண்டும்.  உங்களுக்கு மெஸெஜுகளும், கவிதைகளும் அனுப்புகிறவர்,  அதையே 10  பெண்களுக்கும் அனுப்புவார் என்ற புரிதல் அவசியம். வீட்டிலோ, அலுவலகத்திலோ புன்னகைத்து `குட்மார்னிங்'  செய்யும் பழக்கம் இல்லாதவர்கள்தான், யாரோ ஒருவருக்கு தினமும் இன்பாக்ஸில் குட்மார்னிங் சொல்வார்கள்.

ஒருவேளை பெண்கள் ஏதாவது சிக்கலில் மாட்டிக் கொண்டால்கூட,  அதற்காக முடங்கிப் போய்விடாமல், அதை எதிர்த்துப் போராடி,  வெல்ல வேண்டும். இணையதளத்தை ஆக்கப்பூர்வமாகப் பயன்படுத்தி, நமது கலையார்வத்தையும், தொழில் ஆர்வத்தையும்  வளர்த்துக் கொள்ள முடியும்.வெளியுலக பயத்தைக் கைவிட்டு, சவால்களை எதிர்கொண்டு, முன்னேறுவதே முக்கியம்.

இணையதளம் ஆபத்தானது எனக் கருதி நல்லவர்கள் பலரும் சமூக ஊடகங்களில் இருந்து விலகி விடுவதுதான், அது கயவர்களின் கூடாரமாக மாறக் காரணம். நல்லவர்கள் நிறைய பேர் வந்தால் மட்டுமே இணையதளம் என்பது பாதுகாப்பானதாக இருக்கும்" என்றார்.

கோவை மாநகர  காவல் துறை துணை ஆணையர் பாலாஜி சரவணன் பேசும்போது, "பெண்கள் உணர்வுப்பூர்வமானவர்கள். அந்த உணர்வுதான் அவர்களின் பலமும், பலவீனமும். பதின் பருவப் பெண்களை உசுப்பேற்றும் தோழிகள்தான், இத்தகைய ஆபத்தான விஷயங்களில் அவர்களை சிக்க வைத்து விடுகிறார்கள்.

பழகும்போது  கவனம் தேவை!

பொதுவாக, தோழியின் அண்ணனுக்கு நண்பர் என்பதுபோன்ற அறிமுகத்தில்தான் பல்வேறு பிரச்சினைகள் தொடங்குகின்றன. ஒருவர் மீது நம்பிக்கை வைத்துப் பழகுவதற்கு முன்பு  பெண்கள் மிகுந்த எச்சரிக்கையாக இருக்க வேண்டும். ஒருவேளை பழகினாலும்கூட,  பார்ட்டி அல்லது வெளியிடங்களில் செல்ஃபி எடுப்பதுபோன்ற விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும். ஒருவர் மீது வைத்திருக்கும் நம்பிக்கையை மோசடி செய்து, மற்றொருவரை மிரட்டும்போது அது சட்டப் பிரச்சினையாகிவிடுகிறது. இதிலிருந்து  பெண்களைப் பாதுகாக்க பல சட்டப் பிரிவுகள் இருக்கின்றன.

இயல்பில் யாரும் அடிமைகளாக இருக்க விரும்புவதில்லை. ஆனால், வாழ்க்கையில் நாம் ஆண்ட்ராய்டின் அடிமைகளாகவே உள்ளோம். வாழ்வில் எந்த முடிவையும் எடுப்பதற்கு முன்பு  ஐந்து நொடிகள் தாமதித்து, நமது மனசாட்சியின் குரலைக் கேட்க வேண்டும்.

யாரோ ஒரு கிரிமினல் மிரட்டுவதை,  பெற்றோரிடம் உரிய நேரத்தில் தெரிவிக்காமல் இருப்பதும், காவல் துறையின் உதவியை நாடாமல் இருப்பதும்தான் பிரச்சினையை மேலும் சிக்கலாகி விடுகிறது.

உதவக் காத்திருக்கிறது காவல் துறை!

பல வழக்குகளில், பாதிக்கப்பட்டவர்கள் பற்றிய எந்த விவரத்தையும் வெளிப்படுத்தாமல்,  அவர்களைத் துன்புறுத்திய குற்றவாளிகளுக்குத் தண்டனை வாங்கிக் கொடுத்திருக்கிறது காவல் துறை. பல பெண்களின் துயரங்களைத் துடைத்திருக்கிறோம்.  இதுபோன்ற வழக்குகளில் காவல் துறை மனிதநேயத்துடனும், அந்தப் பெண்களின் வாழ்க்கை குறித்து அக்கறையுடன்தான் செயல்படுகிறது. எனவே, சட்டம் மற்றும் காவல் துறையின் உதவியை நாட  தயங்கவே கூடாது"  என்றார்.

பேசுங்கள், பாராட்டுங்கள்...

வழக்கறிஞர் சுமதி பேசும்போது, "இக்காலப் பெண்கள், பெற்றோர் விதிக்கும் கட்டுப்பாடுகளால் எரிச்சல் அடைகிறார்கள். எனவே, பெற்றோர் அவர்களுக்கு சரியான வழிகாட்ட வேண்டும். பெற்றோர்,  குழந்தைகளிடம் பேசுவதில்லை. அவர்களுக்கு உரிய அங்கீகாரத்தையும், பாராட்டுதல்களையும் அவ்வப்போது தெரிவிப்பதில்லை. இந்த அங்கீகாரத்தையும், பாராட்டையும் இன்னொருவர் வழங்குவார் எனில், அவரை விரும்புவது பெண்களின் இயல்பாகிவிடுகிறது.

`காதலிக்கவில்லை என்றால் கையைக் கிழித்து கொள்வேன்' என சொல்பவர் ஒரு மனநோயாளி. 

`நீ இல்லை என்றால் நான் செத்துவிடுவேன்' என்று மிரட்டுபவர்கள் உணர்ச்சி மிகுந்தவர்கள். இவர்களோடு வாழ்தல் என்பது யாருக்கும் சாத்தியமில்லை. தன்னுடைய வாழ்க்கையை தானே தீர்மானிக்கும் பக்குவமும், திறனும் இல்லாத சூழலில் அதிரடியாக முடிவெடுத்து,  தங்கள் வாழ்க்கையை அலங்கோலமாக்கிக்  கொண்ட எத்தனையோ பெண்களை தினசரி தொழில்வாழ்க்கையில் சந்திக்கிறேன்.

மிரட்டலுக்கு அடிபணிந்து,  தினமும் துன்பப்பட்டு, பெரும் சிக்கலுக்கு ஆளாவதைக் காட்டிலும், உண்மையை பெற்றோரிடம் எடுத்துச் சொல்வது சிறந்தது. அந்த சமயத்தில் அவர்கள் கோபப்பட்டாலும், தங்கள் குழந்தையை ஒருபோதும் பெற்றோர் கைவிட மாட்டார்கள்.

பெண்களைப் பாதுகாக்க பல சட்டப் பிரிவுகள் இருந்தாலும்,  நமது பாடத் திட்டத்தில் இல்லை. பள்ளி, கல்லூரிகளிலேயே, பெண்களைப் பாதுகாக்கும் சட்டப் பிரிவுகள் குறித்து விளக்க வேண்டியது அவசியம்"  என்றார்.

இந்த நிகழ்வில், தங்களது அடையாளங்களை வெளிப்படுத்திக் கொள்ள விரும்பாமல்,  வழிகாட்டுதல்களையும், உதவிகளையும் பெற்றுக்கொள்ள விரும்புவோருக்காக தனி பெட்டிகள் வைக்கப்பட்டிருந்தன. பார்வையாளர்கள் தங்கள் வினாக்களை ஒரு படிவத்தில் எழுதி, அந்தப் பெட்டியில் சேர்த்தனர். சில கேள்விகளுக்கு மேடையிலேயே பதில் அளிக்கப்பட்டது. தனிப்பட்ட

உதவிகள் கோரியவர்களுக்கு நிச்சயம் உரிய தீர்வு வழங்கப்படும் என்று காவல் துணை ஆணையர் பாலாஜி சரவணன் உறுதியளித்தார். நிகழ்ச்சியில் பங்கேற்ற இளம் பெண்கள், சிக்கல்களையும், பிரச்சினைகளையும் எதிர்கொள்ளும் நம்பிக்கையுடன் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றனர்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close