[X] Close

மேட்டூர் அணையில் காவிரி ஒழுங்காற்று துணைக்குழு ஆய்வு


  • kamadenu
  • Posted: 11 Jun, 2019 07:18 am
  • அ+ அ-

காவிரி ஒழுங்காற்று குழுவின் துணைக் குழுவினர் மேட்டூர் அணையில் நேற்று ஆய்வு மேற்கொண்டனர்.

காவிரி படுகை மாநிலங்களில் உள்ள நீர்த் தேக்கங்கள், அவற்றுக்கான நீர்வரத்து, நீர் வெளியேற்றம் உள்ளிட்டவை குறித்து ஆய்வு செய்யவும், காவிரி படுகைகளில் நீர் அளவை மானியைப் பொருத்துவது குறித்தும் இந்தக் குழு ஆய்வு மேற்கொண்டுள்ளது.

மத்திய நீர் வள ஆணையமானது, காவிரி பாயும் மாநிலங்களில் உள்ள நீர்த் தேக்கங்கள், நீர் வரத்து, நீர் வெளியேற்றம் ஆகியவற்றை கணக்கிட, ‘ஆன்லைன் மானிட்டரிங் சிஸ்டம்’ அமைக்க உள்ளது. இந்நிலையில், காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தால் அமைக்கப்பட்டுள்ள காவிரி நீர்ஒழுங்காற்று குழுவானது, ‘ஆன்லைன் மானிட்டரிங் சிஸ்டம்’ அமைப்பதற்கான ஆய்வை மேற்கொண்டு அறிக்கை வழங்குவதற்காக, துணைக் குழு ஒன்றை அமைத்துள்ளது.

குறிப்பாக, காவிரி பாயும் மாநிலங்களில் உள்ள நீர்த் தேக்கங்கள், நீர்வரத்து மற்றும் நீர் வெளியேற்றம் ஆகியவற்றை கணக்கிடுவது, காவிரி படுகைகளில் தானியங்கி நீர் அளவை மானியை பொருத்துவது ஆகியவை குறித்துதுணைக்குழு ஆய்வு மேற்கொண்டுள்ளது.

மத்திய நீர் ஆணைய ஒருங்கிணைப்புக் குழு உறுப்பினர் மோகன் முரளி தலைமையிலான குழுவில், தமிழகத்தின் மேல்காவிரி வடிநில வட்ட கண்காணிப்பு பொறியாளர் ஜெயகோபால், கர்நாடகாவின் கேஆர்எஸ் அணை மேற்பார்வை பொறியாளர் ராமேந்திரா, புதுச்சேரி பொதுப்பணித்துறை மேற்பார்வை பொறியாளர் சுரேஷ், கேரளாவின் ஆழியார் துணை கோட்ட துணைஇயக்குநர் சஜிகுமார், சென்னை வானிலை ஆய்வு மைய விஞ்ஞானிஅமுதா ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

இந்த துணைக் குழு, கடந்த வாரம் கர்நாடகாவில் உள்ள கேஆர்எஸ், கபினி, ஹாரங்கி, ஹேமாவதி ஆகிய அணைகளுக்குச் சென்று ஆய்வு நடத்தினர். பின்னர், தமிழக எல்லையில் மத்திய நீர் ஆணையத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பிலிகுண்டுலு பகுதியிலும் குழு ஆய்வு மேற்கொண்டது.

இதைத் தொடர்ந்து, துணைக் குழுவினர் மேட்டூர் அணைக்கு நேற்று வந்தனர். அணையின் நீர் தேக்கப் பகுதி, 16 கண் மதகுஉள்ளிட்ட பகுதிகளில் துணைக்குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர். அணையின் நீர் இருப்பு, நீர்வெளியேற்றம் உள்ளிட்ட விவரங்களையும் அவர்கள் சேகரித்தனர்.

அடுத்ததாக, பவானி சாகர்அணை, அமராவதி அணை மற்றும் தமிழகம், புதுச்சேரி மாநிலங்களில் காவிரி பாயும் பகுதிகளிலும் துணைக் குழுவினர் ஆய்வு மேற்கொள்ள உள்ளனர். ஆய்வுகளை முடித்த பின்னர் இம்மாதம் இறுதியில் ஆய்வறிக்கையை சமர்ப்பிக்க உள்ளதாக குழுவினர் தெரிவித்தனர்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close