[X] Close

அடுத்தடுத்து கொலைகள், நாள்தோறும் வழிப்பறி: மதுரை காவல் ஆணையருக்கு காத்திருக்கும் சவால்கள்


madurai-new-police-commissioner

  • kamadenu
  • Posted: 13 Jun, 2018 10:51 am
  • அ+ அ-

மதுரை நகர் காவல் ஆணையராக பணிபுரிந்த மகேஷ்குமார் அகர்வால் சிபிசிஐடி ஐஜியாக மாற்றப்பட்டுள்ளார். ஆணையராக நியமிக்கப்பட்ட ஓராண்டிலேயே அவர் மீண்டும் சிபிசிஐடிக்கு செல்கிறார். மதுரை நகர் புதிய காவல் ஆணையராக டேவிட்சன் தேவாசீர்வாதம் இன்று (ஜூன் 13) பொறுப்பேற்கிறார். 

ஏற்கெனவே இவர், மதுரை நகரில் போக்குவரத்து துணை ஆணையராக பணிபுரிந்த அனுபவம் இருந்தாலும், காவல் ஆணையராக கூடுதல் சவால்களை எதிர்கொள்ள இருக்கிறார். மதுரை நகரில் சமீப காலமாக அடுத்தடுத்து கொலைகள், நாள்தோறும் வழிப்பறியால் கலக்கத்தில் இருக்கும் மக்கள் புதிய காவல் ஆணையர் சிறப்பாக செயல்பட்டு குற்றச் சம்பவங்களை கட்டுப்படுத்துவாரா என்ற எதிர்பார்ப்புடன் உள்ளனர்.

மதுரை நகரில் 21 காவல் நிலையங்கள் செயல்படுகின்றன. ஆயுதப்படை போலீஸார் உட்பட 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீஸார் உள்ளனர். குற்றப் பிரிவில் அனைத்து காவல் நிலையங்களிலும் 15 ஆய்வாளர்களே இருப்பதாக தகவல் உள்ளது. சில ஆண்டுகளுக்கு முன், நகர் பகுதியுடன் கூடல்புதூர், அவனியாபுரம், திருப்பரங்குன்றம் காவல் நிலையங்கள் இணைந்தன. இருப்பினும் புதிதாக இணைந்த காவல் நிலைய எல்லைகளில் குற்றச் சம்பவங்களை கட்டுப்படுத்த முடியவில்லை. காரணம், புதிதாக இணைந்த காவல் நிலைய எல்லைகளில் குடியிருப்புகள் நெருக்கமின்றி அடிக்கடி கொள்ளைச் சம்பவங்கள் நடக்கின்றன. 

தல்லாகுளம், அண்ணாநகர் உட்பட ஓரிரு காவல் நிலைய எல்லைகள் விரிவுபடுத்தப்பட்டாலும் குற்றச் செயல்களை தவிர்க்க முடியவில்லை. இதைக் குறைக்க, அதிக பகுதிகளை கொண்ட அண்ணாநகர், தல்லாகுளம், கூடல்புதூர் காவல் நிலைய எல்லைகளை இரண்டாகப் பிரிக்க வேண்டும் என்ற கோரிக்கை கிடப்பில் உள்ளது.

இருப்பினும், பிற காவல் நிலைய பகுதியிலும் செல்போன் பறிப்பு, பெண்களிடம் நகை பறிப்பு, பூட்டிய வீடுகளில் திருடுவது நடந்து வருகிறது. குறிப்பாக பைக்கில் ஹெல்மெட் அணிந்து கைவரிசை காட்டுவது, போலீஸ் போல ஏமாற்றி, கவனத்தை திசை திருப்பி நகை பறிப்பதும் மதுரை நகரில் அதிகமாக நடக்கின்றன. தனிப்படையினர் குற்றச்செயல் புரிவோரை பிடித்து, களவு பொருட்களை மீட்டாலும், வழிப்பறி, கடை, வீடுகளை உடைப்பது போன்ற நிகழ்வுகள் தடுக்க முடியாத ஒன்றாகி போனது. 

செல்போன், நகை வழிப்பறியில் ஈடுபட்டதாக கடந்தாண்டு மட்டும் 50-க்கும் மேற்பட்ட பள்ளி, கல்லூரி மாணவர்கள் பிடிபட்டனர். 

பழிக்குப் பழி கொலைகள் 

மதுரை யாகப்பா நகர் பகுதியில் கஞ்சா விற்பதில் திருவாதவூர் செந்தில், யாகப்பா நகர் உதயா தலைமையில் இரு கோஷ்டிகளாக செயல்படும் நபர்களிடையே நடந்த தொழில் போட்டியால் இதுவரை 15 பேர் பலியாகி உள்ளனர். உதயா மற்றும் செந்தில் தரப்பில் அவரது சகோதரர் கொல்லப்பட்ட போதிலும் இரு தரப்பிலும் பழிக்கு பழி கொலைகள் தொடர்கின்றன.

அதேபோல, காமராசர்புரத்தில் அதிமுக, திமுக மண்டலத் தலைவர்களாக இருந்த இருவரது தரப்பிலும் கோஷ்டிகள் செயல்படுகின்றன. இவர்களிடையே நடந்த மோதலில் இதுவரை 12-க்கும் மேற்பட்டோர் கொலை செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் தவிர, ஜெய்ஹிந்த்புரம், செல்லூர், கீரைத்துறை, வாழைத்தோப்பு, காமராசர்புரம், மதிச்சியம், யாகப்பா நகர் பகுதியைச் சேர்ந்தவர்கள் ரவுடி பட்டியலில் அதிகம் உள்ளனர். நகர் முழுவதும் சுமார் 100-க்கும் மேற்பட்டோர் இப்பட்டியலில் உள்ளனர்.

தீராத போக்குவரத்து நெரிசல்

கோரிப்பாளையம், காளவாசல், பெரியார் பஸ் நிலையம், சிம்மக்கல், கீழவாசல் உள்ளிட்ட பகுதிகளை எளிதாக கடக்க முடியவில்லை. அனைத்து சிக்னல்களிலும் தரமான கேமராக்களை பொருத்த வேண்டும்.

சிம்மக்கல் உட்பட 4 வெளி வீதிகள், மாசி வீதிகள், முக்கிய பஜார்களின் பிளாட்பாரங்கள் ஆக்கிரமிப்பில் உள்ளன. நடைபாதையில் வாகனங்களை நிறுத்துவதால் மக்கள் சாலையில் நடந்து விபத்தில் சிக்குகின்றனர். 

 அண்ணாநகர் சாலை, ரேஸ்கோர்ஸ் சாலை, காமராசர் சாலை உட்பட சில சாலைகளில் இளைஞர்கள் மாலை நேரத்தில் வேகமாக பைக் ரேஸ் செல்கின்றனர். இதனால் எதிரே வருவோர் தடுமாறி விபத்தில் சிக்குகின்றனர். போலீஸார் அவர்களை பிடித்து அவ்வப்போது பெயரளவுக்கு வழக்கு போட்டு விட்டு விடுவதால் பைக் ரேஸை தடுக்க முடியவில்லை.

களப்பணியில் கண்காணிப்பு 

உயர் அதிகாரிகள் சட்டம், ஒழுங்கை கட்டுக்குள் வைத்திருந்தாலும், தினமும் நகை, செல்போன் வழிப்பறி, திருட்டுகள் வழக்கமாகி விட்டது. கொலை உட்பட சில முக்கிய நிகழ்வுகள் நடக்கும்போது மட்டுமே சம்பவ இடத்துக்கு செல்கின்றனர். ஆணையர், அதிகாரிகள் அடிக்கடி களப் பணியாற்றினால் குற்றச் சம்பவங்களில் ஈடுபடுவோரை விரைந்து பிடிக்க நடவடிக்கை எடுக்கலாம் என்ற எதிர்பார்ப்பு மக்களிடம் உள்ளது. 

மாட்டுத்தாவணியில் கைவரிசை

தினமும் பல்லாயிரக்கணக்கான மக்கள் வந்து செல்லும் மாட்டுத்தாவணி (எம்ஜிஆர்) பேருந்து நிலையத்தில் பாதுகாப்பற்ற சூழல் உள்ளது. வெளியூர் பயணிகள் அடிக்கடி நகை, லேப்டாப் உள்ளிட்டவற்றை பறிகொடுத்து தவிக்கின்றனர். ராமநாதபுரம், நெல்லை உள்ளிட்ட தொலைதூர பேருந்துகளை குறிவைத்து திருடர்கள் கைவரிசை காட்டுகின்றனர்.

இதற்கென மாட்டுத்தாவணியில் நடமாடும் திருடர்கள் தரமற்ற கேமராக்களால் எளிதில் தப்புகின்றனர். நகை உள்ளிட்டவற்றை பறிகொடுக்கும் பயணிகள், அங்கு புறக்காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தாலும் போலீஸார் ‘நீங்கள்தான் பொருட்களை பாதுகாத்துக் கொள்ள வேண்டும்’ என ‘கீதா உபதேசம்’ செய்து புகார்களை அலட்சியப்படுத்துவதாக பாதிக்கப்பட்டவர்கள் குமுறுகின்றனர்.

புறக்காவல் நிலையங்கள்

நகரில் அண்ணாநகர் உட்பட பெரும்பாலான இடங்களில் புறக்காவல் நிலையங்கள் மூடிக் கிடக்கின்றன. போலீஸார் பற்றாக்குறையால் செயல்படுத்த முடியாமல் உள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். குற்றச் சம்பவம் அதிகமாக நடக்கும் பகுதியில் புதிய காவல் நிலையங்கள் திறக்கப்பட வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

போலீஸுக்குள்ஈகோவா’ ?

திருட்டு, குற்றச் செயல்களில் ஈடுபடும் குற்றவாளிகளை பிடிப்பதில் சட்டம், ஒழுங்கு, குற்றப்பிரிவு போலீஸார் இடையே ‘ ஈகோ’ பிரச்சினை உள்ளதாக தகவல் வெளியானது. போலீஸாரின் ஈகோவால் குற்றவாளிகளுக்குத்தான் வசதியாக போய்விடும். எந்த குற்றச் செயலாக இருந்தாலும், போலீஸார் ‘ஈகோ’ இன்றி இணைந்து பணிபுரிய புதிய காவல் ஆணையர் நடவடிக்கை எடுக்கவேண்டும் என, போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இரவில் தனியாக போக முடியாத சூழல் 

அன்பு (தனியார் ஊழியர்): மதுரை நகரில் குற்றச் செயல்கள் அதிகமாக உள்ளது. குற்றப்பிரிவு போலீஸாரின் எண்ணிக்கை குறைவாக உள்ளது எனக் காவல் நிலையங்களில் புகார்களை தட்டிக் கழிக்கின்றனர். பைக் திருட்டு, நகை திருட்டு பற்றி புகார் அளிக்கச் சென்றால் நகை வாங்கிய ரசீதை கேட்கின்றனர். இதுபோன்று அலைக்கழிக்கப்படுவதால் பலர் புகார் தெரிவிக்கச் செல்வதில்லை. சில புகார்களுக்கு சிஎஸ்ஆர் மட்டும் தருகின்றனர். எப்ஐஆர் பதிவு செய்வதில்லை. கேட்டால் சிஎஸ்ஆர், எப்ஐஆர் சமம் என்கின்றனர். பொருட்கள் மீட்கப்படும்போது, எப்ஐஆர் போடுவோம் என்கின்றனர். அதிக குற்ற வழக்குகள் பதிவானால் அதிகாரிகளின் கேள்விகளுக்கு பதில் அளிக்க வேண்டும் என்பதால் குற்றச் சம்பவங்களில் வழக்குபதிய தயங்குகின்றனர்.

எந்த புகாராக இருந்தாலும் பொதுமக்களை அலைக்கழிக்காமல், உரிய நேரத்தில் எப்ஐஆர் பதிந்து நடவடிக்கை எடுக்க, புதிய ஆணையர் உத்தரவிடவேண்டும், என்றார். 

நாகராஜன் (ஆட்டோ ஓட்டுநர்): மதுரை நகரில் போக்குவரத்து நெரிசல் தீராத பிரச்சினையாக உள்ளது. இதற்கு தரமில்லாத சாலைகள் காரணமாக இருந்தாலும் முக்கிய சாலைகளில் உள்ள வர்த்தக நிறுவனங்களில் பார்க்கிங் வசதியில்லை. இதனால் பிளாட்பாரங்களில் வாகனங்களை நிறுத்துவதால் மாசி வீதிகள், வெளி வீதிகளில் எப்போதும் போக்குவரத்து நெரிசல் உள்ளது. இதற்கு மேம்பாலங்களே தீர்வாக இருந்தாலும், தகுதியான சாலைகளை ஒருவழி பாதையாக மாற்றினால் ஓரளவு நெரிசல் குறையும் வாய்ப்புள்ளது என்றார்.

விவசாய குடும்பத்தை சேர்ந்த டேவிட்சன் தேவாசீர்வாதம்

மதுரை நகர் புதிய காவல் ஆணையராக பொறுப்பேற்கும் டேவிட்சன் தேவாசீர்வாதம் சொந்த ஊர் தூத்துக்குடி மாவட்டம் முதலூர். விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவர். அமராவதி புதூரில் சைனிக் பள்ளியில் படித்தவர். சென்னை லயோலா கல்லூரியில் இளநிலை வரலாறு, டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் எம்ஏ சோஷியாலஜி முடித்தார்.

1995-ல் ஐபிஎஸ் ஆக தேர்வானார். தருமபுரியில் பயிற்சி உதவி எஸ்பியாக பணியைத் தொடங்கினார். பரமக்குடியில் முதல் பணி. 1998-ல் கோவை குண்டுவெடிப்பு சம்பவத்தின்போது, அங்கு சென்ற சிறப்புக் காவல் குழுவில் இடம் பெற்றார். கோவை துணை ஆணையராக பணிபுரிந்தார். கடலூர், காஞ்சிபுரம், உளவுத்துறை, கியூ பிராஞ்ச் எஸ்பியாக பணியாற்றினார். டிஐஜியாக உளவுத் துறையிலும் பணிபுரிந்தவர். 5 ஆண்டுகள் தேசிய போதைப் பொருள் தடுப்பு பிரிவில் (என்சிபி) தென்மண்டல இயக்குநராக இருந்தார். உளவுத்துறை, போலீஸ் நலப்பிரிவு ஐஜியாக இருந்து மதுரை நகர் காவல் ஆணையராக தற்போது நியமிக்கப்பட்டுள்ளார்.


டேவிட்சன் தேவாசீர்வாதம்

கியூ பிரிவில் பணிபுரிந்தபோது, மாவோஸ்டுகளின் ராக்கெட் லாஞ்சர், விடுதலைப்புலி கள்ளப்படகு வழக்குகள், கடலூர் கலவர வழக்கை திறம்பட கையாண்டார். சர்வதேச அளவில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட பலரை கைது செய்தார். காஞ்சிபுரத்தில் எஸ்பியாக பணிபுரிந்தபோது, சங்கரராமன் கொலை வழக்கை விசாரித்தார். 2005-06-ல் மதுரை நகர் போக்குவரத்து துணை ஆணையராக பணியாற்றினார். நேர்மையான அதிகாரி என பெயர் எடுத்தவர். ஜெயலலிதா மறைவுக்குப் பின்,ஓ. பன்னீர்செல்வம் முதல்வராக இருந்தபோது, உளவுப்பிரிவு ஐஜியாக நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

- என்.சன்னாசி

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close