[X] Close

தமிழகத்தில் அறிமுகமாகிறது ரோபோக்கள் மூலம் மனிதக் கழிவுகளை அகற்றும் திட்டம்: ரோபோவை வடிவமைத்தவர்கள் தகவல்


robo-design

ரோபோவை உருவாக்கிய இளைஞர்களை பாராட்டிய கோவை மாநகராட்சி துப்புரவுத் தொழிலாளர்கள் | படம்: ர.கிருபாகரன்

  • கார்த்திக் கிருஷ்ணா
  • Posted: 11 Jun, 2018 14:27 pm
  • அ+ அ-

மனிதக் கழிவுகளை மனிதர்களே அள்ளுவதற்கு மாற்றாக ரோபோக்கள் பயன்படுத்தும் திட்டம் விரைவில் தமிழகத்திலும் அறிமுகமாக உள்ளதாகவும், அதற்காக அழைப்பு வந்துள்ளதாகவும் ரோபோக்களை வடிவமைத்த கேரள இளைஞர்கள் தெரிவித்துள்ளனர். 

ஏழை, எளிய மாணவர்கள் போட்டித் தேர்வுகளுக்கு தயாராவதற்கு உதவும் வகையில் டாக்டர் அம்பேத்கர் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு பயிற்சி மையம் சார்பில் கோவையில் இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த மையமும், இந்திய வங்கி ஊழியர் சம்மேளனமும் இணைந்து 2018-ம் ஆண்டுக்கான வங்கித் தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்புகளை நேற்று தொடங்கின. அதன் தொடக்க நிகழ்ச்சி கோவை தாமஸ் கிளப்பில் நடைபெற்றது. வங்கி ஊழியர் சம்மேளன மாவட்டச் செயலாளர் ஆர்.மகேஸ்வரன் அனைவரையும் வரவேற்றார். 

மனிதக்கழிவுகளை மனிதனே அகற்றும் முறைக்கு பதிலாக, கேரளாவில் ரோபோவை கண்டறிந்து அறிமுகப்படுத்திய பொறியியில் பட்டதாரிகள் விமல் கோவிந்த், ராஷித், அருண் ஜார்ஜ் ஆகிய மூவரும் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டனர். வங்கித் தேர்வுக்கான பயிற்சி வகுப்பை இவர்கள் தொடங்கி வைத்தனர். செய்தியாளர்களிடம் அவர்கள் கூறும்போது, ‘ரோபோடிக் படித்ததால் ராணுவத்துக்கு தேவையான கருவிகளை தயாரிக்க முயற்சித்தோம்.

எங்கள் முயற்சிகளுக்கு சர்வதேச அளவில் அங்கீகாரமும் கிடைத்தது. அந்த சமயத்தில்தான் மனிதக்கழிவுகளை அகற்றும்போது ஏற்பட்ட விபத்துகளில் சிக்கி அடுத்தடுத்த உயிரிழப்புகள் ஏற்படுவது செய்திகளாக தெரியவந்தது. அப்போதுதான் நமது கண்டுபிடிப்புகள் முதலில் யாருக்கானதாக இருக்க வேண்டும் என்ற கேள்வி எழுந்தது. 

சமூகத்தின் தூய்மைக்காக தங்களையும் வருத்திக் கொண்டு, யாரும் நினைத்துக்கூட பார்க்க முடியாத அளவுக்கு உயிருக்கு உத்தரவாதமில்லாத பணியில் ஈடுபடும் துப்புரவுத் தொழிலாளர்கள் நலனே முக்கியமானதாக தெரிந்தது. மனிதக் கழிவுகளை மனிதனே கையால் அள்ளுவது, அதனால் அவர்கள் இறப்பது என் பது வளர்ச்சியடைந்த சமூகத்தின் அறிகுறியாக இருக்க முடியாது. தொழில்நுட்ப ரீதியில் அதற்கு மாற்று கண்டறிவது மட்டுமே தீர்வு என தெரிந்துகொண்டோம்.

மனிதக் கழிவுகளை அகற்றும் கருவியை கண்டுபிடித்தாலும் அதை மனித உதவியோடு மட்டுமே இயக்க முடியும். இதற்கு சட்டரீதியாகவும், நிதியாதார அடிப்படையிலும் கேரள அரசு ஒத்துழைப்பு வழங்கியது. தற்போது ரோபோக்களுக்கு அங்கீகாரம் கிடைத்துள்ளது. அதைப் பயன்படுத்த துப்புரவுத் தொழிலாளர்களுக்கு பயிற்சி வழங்கி வருகிறோம்.

2019-க்குள் கேரளாவில் மனிதக் கழிவுகளை மனிதர்களே கையால் அள்ளும் பிரச்சினை முழுவதுமாக முடிவுக்கு கொண்டு வரப்படும் என திட்டமிடப்பட்டுள்ளது. அதற்காக உழைத்து வருகிறோம். அதேசமயம் தமிழ்நாட்டிலும் கும்பகோணத்தில் இருந்து எங்களுக்கு அழைப்பு வந்துள்ளது. இந்த மாத இறுதியில் இந்த பணிகள் தொடங்கும்.

துப்புரவுத் தொழிலாளர்கள் சாதி ரீதியாக பிரிக்கப்பட்டுள்ளனர். அதனால் மாற்று வேலைவாய்ப்பு, கல்வி உள்ளிட்டவை மறுக்கப்படுகின்றன. ரோபோக்களை இயக்க, அவர்களுக்கு பயிற்சி கொடுத்தால், வேலைவாய்ப்பு பாதிக்காது, அதேசமயம் அவர்களுக்கான பாதிப்புகள் இருக்காது. இதை கேரளாவில் வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தியுள்ளோம். இதை நாடு முழுவதும் கொண்டு செல்ல வேண்டும் என்பதே எங்களது குறிக்கோளாக உள்ளது. சமூக மாற்றத்துக்கான பயணத்தை ஒவ்வொரு இளைஞர்களும் முன்னெடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர். 

துப்புரவுப் பணியாளர்களுக்கான ரோபோவை உருவாக்கிய 3 இளைஞர்களுக்கும், கோவை மாநகராட்சி துப்புரவுப் பணியாளர்கள் நினைவுப் பரிசு வழங்கி பாராட்டினர். அம்பேத்கர் கல்வி வேலைவாய்ப்பு பயிற்சி மைய ஒருங்கிணைப்பாளர் கணேஷ் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close