[X] Close

பிளாஸ்டிக் பயன்பாட்டை கைவிடக் கோரி ராமேசுவரத்தில் நேரடி விழிப்புணர்வு ஏற்படுத்திய வானொலி


plastic-waste-awareness

உலக கடல் தினத்தை முன்னிட்டு பாம்பன் கடலில் மலர் தூவும் மீனவர்கள்

  • kamadenu
  • Posted: 09 Jun, 2018 15:30 pm
  • அ+ அ-

உலக கடல் தினத்தை முன்னிட்டு பிளாஸ்டிக் பயன்பாட்டை கைவிட வலியுறுத்தி, கடல் ஓசை சமுதாய வானொலி நிலையம் ராமேசுவரம் தீவு கடற்கரை பகுதிகளில் மீனவர்கள், சுற்றுலாப் பயணிகள், பக்தர்களிடம் தொடர் நேரலை நிகழ்ச்சிகளை நடத்தியது.

நாம் வாழும் பூமியின் நான்கில் மூன்று பகுதி கடல்களால் நிறைந்துள்ளது. நாம் சுவாசிக்கத் தேவையான ஆக்சிஜனில் பெருமளவு மரங்களை விடவும் கடலில் இருந்தே அதாவது 80 சதவீதம் உற்பத்தி செய்யப்படுகிறது. நமக்குத் தேவையான பெருமளவு உணவு, மருந்துகள், உயிரின வளம் கடலில் இருந்து கிடைக்கிறது. 

கடற்கரையிலிருந்து வானொலி

மனித சமூகத்துக்கு கடல் வழங்கும் எண்ணற்ற செல்வங்களை இனங்கண்டு 08.06.1992 அன்று பிரேசில் தலைநகர் ரியோ டி ஜெனிரோ நகரில் நடைபெற்ற புவி மாநாட்டில் உலகக் கடல் நாள் கொண்டாடப்பட வேண்டும் என்ற கருத்து முன்வைக்கப்பட்டது. இதனடிப்படையில் 2009-ம் ஆண்டு ஜூன் 8-ம் தேதியிலிருந்து உலகப் பெருங்கடல் நாளைக் கொண்டாட ஐக்கிய நாடுகள் சபை அறிவித்தது.

இந்நிலையில், ராமநாதபுரம் மாவட்ட கடலோரப் பகுதிகளில் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக ஒலிபரப்பப்பட்டு வரும் கடல் ஓசை சமுதாய வானொலி நிலையத்தார், உலக கடல் தினத்தை வித்தியாசமாக கொண்டாட நினைத்தனர். வெள்ளிக்கிழமை காலை முதல் இரவு வரை வானொலி நிலையம் மூடுவது வரை, ராமேசுவரம் தீவின் வெவ்வேறு கடற்கரைகளிலிருந்து நேரலையாக நிகழ்ச்சிகளை தயாரித்து வழங்கி, அதற்கு உயிர் வடிவம் கொடுத்து செயல்படுத்தி இருக்கின்றனர் சமுதாய வானொலி பணியாளர்கள்.

மறுசுழற்சியாகும் குப்பை

முதலாவதாக ராமேசுவரம் மீன்பிடித் துறைமுகத்தில் கடற்கரை தூய்மை பணியை தொடங்கி வைத்த ஆட்சியர் ச. நடராஜன் கடல் ஓசை சமுதாய வானொலி மூலம் நேரலை நிகழ்ச்சியில் பேசியது: 

இம்மாவட்டத்தில் 237 கி.மீ நீள கடற்கரை உள்ளது. இதில் ராமேசுவரம் கடல் பகுதியானது கடல்சார் உயிரினங்களுக்கு ஏற்ற சிறந்த சூழல் நிறைந்த பகுதியாகும்.

ராமேசுவரத்துக்கு ஆண்டொன்றுக்கு சுமார் 2 கோடி சுற்றுலா பயணிகள் வருகின்றனர். இந்நிலையில் ராமேசுவரம் தீவில் சுற்றுப்புறத் தூய்மையை மேம்படுத்தும் வகையில் மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரிக்கப்பட்டு, மக்கும் குப்பையை பயனுற மறுசுழற்சி செய்து பயன்படுத்தும் வகையில் பசுமை ராமேசுவரம் திட்டம் மூலம் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

இத்திட்டத்தை 100 சதவீதம் சிறப்பாகச் செயல்படுத்த அனைத்து மக்களும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றார். 

பிளாஸ்டிக் ஒழிப்பு உறுதிமொழி

தொடர்ந்து, பாம்பன் கடற்கரையில் உலக கடல் தினத்தை மீனவர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நேரலை செய்யப்பட்டது. 

இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட மீனவர்கள் பின்னர் பாம்பன் கடற்கரையில் தூய்மை பணியில் ஈடுபட்டனர்.

மேலும் ராமேசுவரம் அக்னி தீர்த்தக் கடற்கரை, தனுஷ்கோடி, முகுந்தராயர் சந்திரம், அரிச்சல்முனை, ராமநாதசுவாமி கோயில், கலாம் நினைவிடம் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து கடல் ஓசை சமுதாய வானொலி பணியாளர்கள் அங்கிருந்த மீனவர்கள், சுற்றுலாப் பயணிகள், பக்தர்களை நேரலை நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளச் செய்து உலக கடல் தினத்தை முன்னிட்டு பிளாஸ்டிக் பயன்பாட்டை கைவிட வலியுறுத்தி உறுதிமொழி எடுக்கச் செய்தனர்.

- எஸ். முஹம்மது ராஃபி

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close