[X] Close

ஜொலிக்கும் கவிதாலட்சுமி நகர் தொடக்கப் பள்ளி: பறை முழங்க சீர் பொருட்கள் ஊர்வலம்


model-school-kavithalakshmi-nagar

திருப்பூர் அனுப்பர்பாளையத்தில் நேற்று நடந்த கல்வி சீர் வழங்கும் விழாவில் பங்கேற்றோர்.

  • kamadenu
  • Posted: 09 Jun, 2018 15:26 pm
  • அ+ அ-

மூடப்படும் நிலையில் இருந்த பள்ளி, தலைமை ஆசிரியை, பெற்றோர் மற்றும் பெற்றோர் ஆசிரியர் சங்கத்தினரால் அரசுப் பள்ளிகளுக்கு முன்மாதிரியாக உருமாற்றப்பட்டுள்ளது. 

திருப்பூர் மாநகர் கவிதா லட்சுமி நகர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிக்கு, அனுப்பர்பாளையம் செல்வ விநாயகர் கோயிலில் இருந்து கணினி, பிரிண்டர், மேஜை, இருக்கை, மின்விசிறி, பீரோ, துடைப்பம் உட்பட பல்வேறு பொருட்களை பள்ளிக் குழந்தைகள், பெற்றோர் ஆசிரியர் சங்கத்தினர் பறை அதிர சீர் கொண்டுவர, பள்ளி ஆசிரியைகள் நேற்று ஆரத்தி எடுத்து வரவேற்றனர். இதனை, வழிநெடுக இருந்த பொதுமக்கள், மிகுந்த மகிழ்வுடன் வரவேற்றனர். 

உயிர் பெற்ற பள்ளி

திருப்பூர் அனுப்பர்பாளையம் சந்தையின் கழிவுகள் கொட்டும் இடத்தில் இறைச்சிக் கடைகளின் கடும் துர்நாற்றத்துக்கு நடுவே, 2007-ம் ஆண்டு 24 மாணவர்களோடு குறுகலான இடத்தில் தொடங்கப்பட்ட இடம்தான் இப்பள்ளி. கருவாட்டு வாசம் காற்றில் கலந்தே இருக்கும் இடத்தில், கிட்டத்தட்ட மூடப்படும் நிலையில் இருந்த பள்ளியைத்தான், இன்றைக்கு வேறு விதமாக உருமாற்றி இருக்கின்றனர் பள்ளி ஆசிரியைகள். 

பள்ளி மாணவர்களின் மொத்த எண்ணிக்கை 152. நடப்பு ஆண்டில் மட்டும் புதிதாக 51 பேர் சேர்ந்துள்ளனர். 1-ம் வகுப்புக்கு மட்டும் 40 பேர் சேர்ந்துள்ளனர். கவிதாலட்சுமி நகர் மட்டுமின்றி நேதாஜி நகர், முத்துகோபால் நகர் உட்பட சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்தவர்களும், இப்பள்ளியில் தங்கள் குழந்தைகளை மனமுவந்து சேர்த்துள்ளனர். பின்னலாடை நிறுவனங்கள், பாத்திர உற்பத்தி பட்டறைகளில் பணிபுரிவோரின் குழந்தைகள் பெரும்பான்மையாக படிக்கின்றனர். 

‘பள்ளிக் குழந்தைகளுக்கு நல்லதொரு சூழலை இப்பள்ளி ஏற்படுத்தி கொடுத்திருப்பதால், எங்கள் குழந்தைகளை தனியார் பள்ளியில் இருந்து கொண்டு வந்து சேர்த்துள்ளோம். அனைத்து குழந்தைகளுக்கும் சீருடைகள், யோகா வகுப்புகள், சதுரங்கம், கராத்தே, டான்ஸ் உட்பட பல்வேறு பயிற்சிகள் அளிக்கிறார்கள்’ என்கின்றனர் பெற்றோர்கள். 


புதுப்பொலிவுடன் காணப்படும் கவிதாலட்சுமி நகர் அரசுப் பள்ளி வகுப்பறை

கல்வி சீர் வழங்கும் விழா

பெற்றோர் ஆசிரியர் சங்கத்தினர் கூறும்போது, ‘கோடை விடுமுறையில் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் உதவியுடன் படைப்பாற்றலை வளர்த்தெடுக்கும் வகையில், பள்ளிக்கு புது வர்ணம் பூசப்பட்டது. 

பள்ளி வளாகத்தில் தலைவர்களின் படங்கள் வரையப்பட்டு, புதுப்பொலிவுடன் காணப்படுகிறது. 

இந்நிலையில், பள்ளியின் வளர்ச்சியை கருத்தில்கொண்டு ரூ. ஒன்றரை லட்சம் மதிப்பிலான பொருட்களை வழங்கும் ‘கல்வி சீர் கொடுக்கும் விழா’ நடத்தப்பட்டது. பெற்றோர் மற்றும் பெற்றோர் ஆசிரியர் சங்கத்தினர் உதவியுடன், முன் மாதிரி பள்ளியாக மாற்றி உள்ளார் பள்ளித் தலைமை ஆசிரியை மு.கற்பகம்’ என்றனர். 

 - தலைமை ஆசிரியை கற்பகம்

சமூகத்துக்கான வரம்

தலைமை ஆசிரியை மு.கற்பகம் கூறும்போது, ‘இறைச்சிக்கடை அருகே மிகவும் குறுகலான இடத்தில் பள்ளியை நடத்த தொடங்கினேன். பல்வேறு உதவிகளை பெற்று, இன்றைக்கு 150-க்கும் மேற்பட்ட குழந்தைகள் படிக்கும் அரசு தொடக்கப் பள்ளியாக மாற்றப்பட்டுள்ளதுடன், முன்மாதிரி பள்ளியாகவும் மாற்றி உள்ளோம். 

கூடுதல் வகுப்பறை எழுப்பப்பட்டு, 4 ஆசிரியைகள் பாடம் நடத்துகிறார்கள். குழந்தைகளுக்கு நிறைவான ஆரம்பக் கல்வியை தருவதை நோக்கமாகக் கொண்டு செயல்படுகிறோம். ஏனென்றால், ஓர் அரசுப் பள்ளியின் தரம் என்பது, அந்த சமூகத்துக்கான வரம்’ என்றார்.

- இரா.கார்த்திகேயன்

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close