[X] Close

வங்கிக் கணக்கிலிருந்து நூதனமாக  பணம் திருடு போகாமல் தடுக்கும் வழிமுறைகள்


skimmer-money-theft

ஸ்கிம்மர் கருவி

  • kamadenu
  • Posted: 09 Jun, 2018 15:13 pm
  • அ+ அ-

வங்கிக் கணக்கிலிருந்து ஹைடெக் கும்பல் பணம் திருடாமல் தடுக்கும் வழிமுறைகள் குறித்து சைபர் கிரைம் காவல் ஆய்வாளர் விளக்கம் அளித்தார்.

பிக்பாக்கெட், வீடு புகுந்து திருடுதல், நகைப் பறிப்பு என நடைபெற்ற சாதாரணக் குற்றச் சம்பவங்கள், இன்று தொழில்நுட்ப உதவியுடன் வங்கிகளில் உள்ள பணத்தை வேறு ஒருவரின் வங்கிக் கணக்குக்கு மாற்றுதல், பொதுமக்களின் ஏடிஎம் கார்டு மற்றும் ரகசிய எண்ணை கண்காணித்து போலி அட்டைகள் தயாரித்து நூதனமாகத் திருடுதல், வங்கிகளில் இருந்து வாடிக்கையாளர்களின் விவரங்களை எடுத்து, வங்கி அதிகாரி பேசுவதாகக் கூறி செல்போனில் தொடர்பு கொண்டு ஏடிஎம் கார்டு எண் மற்றும் ரகசிய எண்ணை வாங்கி திருடுதல் போன்ற சைபர் குற்றங்களாக உருவெடுத்து ள்ளன.

நாட்டில் பரவலாக நடைபெற்று வரும் இது போன்ற சைபர் குற்றங்களில், கோவை சிங்காநல்லூரில் சில நாட்களுக்கு முன்பு பொதுமக்களின் வங்கிக் கணக்கில் இருந்து ரூ.50 ஆயிரம் முதல், ரூ.4 லட்சம் வரை என ரூ.10 லட்சத்துக்கு மேல் திருடியுள்ளது ஒரு ஹைடெக் கும்பல். இக்குற்றச் சம்பவங்கள் எவ்வாறு நடைபெறுகின்றன? இதில் பொதுமக்கள் தங்கள் பணத்தை பாதுகாத்துக் கொள்வது எப்படி? என்று கோவை மாநகர சைபர் கிரைம் காவல் ஆய்வாளர் கே.மல்லிகா கூறியதாவது:

சைபர் குற்றங்கள் பலவழிகளில் நிகழ்த்தப்படுகின்றன. இதில் ஏடிஎம் கார்டு மற்றும் அதன் ரகசிய எண்ணை பயன்படுத்தி திருடுவதும் ஒன்று. 

இதற்கு ஸ்கிம்மர் கருவி மற்றும் மைக்ரோ கேமரா பயன்படுத்தப்படுகிறது. ஏடிஎம் இயந்திரத்தில் கார்டு சொருகுவதற்கு ஓர் இடம் இருக்கும். அதைப்போன்றே வடிவமைக்கப்பட்ட ஸ்கிம்மர் கருவியை, அதன்மேல் ஒட்டி வைப்பார்கள். இது அனைத்து வகையான வங்கிகளின் டெபிட், கிரெடிட் கார்டுகளையும் ஏற்றுக் கொள்ளக்கூடியது. அது ஏடிஎம் கார்டில் உள்ள பயனர் பெயர், அட்டை எண் உள்ளிட்ட விவரங்களைப் பதிவு செய்து விடும்.

ஸ்கிம்மர் கருவி

இதேபோல், மைக்ரோ கேமராவானது ஏடிஎம் இயந்திரத்தின் கீபேடுக்கு மேலோ, குளிர்சாதன கருவியிலோ அல்லது கீபேடை கண்காணிக்கக்கூடிய இடத்திலோ பொருத்தி வைக்கப்பட்டிருக்கும். அது ரகசிய எண்ணை பதிவு செய்யும். இதன்மூலம் போலி அட்டை தயாரித்து, ரகசிய எண்ணைப் பயன்படுத்தி எளிதாகப் பணத்தை திருடிவிடுகின்றனர். 

அதை தவிர்க்க பொதுமக்கள் ஏடிஎம் இயந்திர கீபேடுக்கு மேல் கையை வைத்து மறைத்துக் கொண்டு, மற்றொரு கையால் ரகசிய எண்ணைப் பதிவு செய்ய வேண்டும். 

ஏடிஎம் இயந்திரத்தில் ஸ்கிம்மர் கருவி பொருத்தப்பட்டிருப்பதாக உணர்ந்தாலோ அல்லது சந்தேகம் அடைந்தாலோ, கார்டை சொருகும் பகுதியை இழுத்து பார்க்கலாம். ஸ்கிம்மர் கருவியாக இருந்தால் கையோடு வந்துவிடும். இதுபோன்ற சம்பவங்கள் நிகழ்ந்தால் 0422-2399100 என்ற தொலைபேசி எண்ணிலோ அல்லது 8190000100 என்ற வாட்ஸ் அப் எண்ணிலும் தெரிவிக்கலாம்.

பொதுமக்கள் தங்களுடைய ஏடிஎம் கார்டு எண் மற்றும் அதன் ரகசிய எண்ணை யாரிடமும் தெரிவிக்கக்கூடாது. இதே தகவலை வங்கியில் பேசுவதாகக் கூறி யாரேனும் கேட்பினும் கூறக்கூடாது.

இதேபோல் உங்கள் கார்டு பிளாக் ஆகிவிட்டது, உங்கள் செல்போனுக்கு ஓடிபி (ஒருமுறை பயன்படுத்தும் ரகசிய எண்) அனுப்பியுள்ளோம், அதை கூறுங்கள் என்றாலும் சொல்லக்கூடாது. இதுபோன்ற தகவலை வங்கியில் இருந்து கேட்டு அழைத்தால் நேரில் வந்து கொடுப்பதாக தெரிவித்து விட வேண்டும்.

ஆன்லைன் பேங்கிங் 

கடைகளில் பொருட்கள் வாங்கும் போது, ஏடிஎம் கார்டுகளை பயன்படுத்தி பணம் செலுத்தும் போது (‘பிஓஎஸ்’ என்ற பாய்ண்ட் ஆப் சேல்ஸ் முறை) ஒன்றுக்கு மேற்பட்ட முறை ஸ்வைப் செய்யாதவாறும், பணம் வசூலிப்பவர் ரகசிய எண்ணைக் காணிக்காணிக்காதவாறும் பார்த்துக் கொள்ள வேண்டும்.

ஏடிஎம் கார்டில் ரகசிய எண்ணை எழுதி வைக்கக்கூடாது. அவற்றை துண்டுச் சீட்டிலும், செல்போனில் பதிவு செய்து வைக்கக்கூடாது. ஆன்லைன் பேங்கிங் மற்றும் நெட் பேங்கிங் முறையில் பணப்பரிவர்த்தனை மேற்கொள்ளும்போது மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும். 3-ம் நபர் பணப் பரிவர்த்தனைக்கு குறைவான தொகையை வைத்துக் கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

-  த.சத்தியசீலன்

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close