[X] Close

கொங்கு பிரதேசத்தில் ஒரு வித்தியாச கோயில்: மதநல்லிணக்கத்தின் சாட்சி


a-secular-temple-in-kongu-heartland

  • பாரதி ஆனந்த்
  • Posted: 09 Jun, 2018 14:49 pm
  • அ+ அ-

கோம்பை எஸ்.அன்வர்

 

குதிரைகள்.. நிச்சயமாக தென்னிந்தியாவுக்கு சொந்தமானவை அல்ல. ஆனாலும் தமிழகத்தின் குக்கிராமங்களில்கூட குதிரை சிலைகளைக் காண முடியும். சிறிய குதிரை சிலை முதல் வண்ணமயமாக ஜொலிக்கும் முழு உருவ குதிரை பொம்மை வரை பார்க்கலாம்.

அந்தக் குதிரை மீது ஒய்யாரமாக வீற்றிறிக்கும் அய்யனாரும், சுடலை மாடனும், கருப்பண்ண சாமியும் கிராமங்கள் கொண்டாடும் காவல் தெய்வங்கள். அய்யானரையும் சுடலை மாடனையும் சுமந்திருக்கும் குதிரை மீது முஸ்லிம் ராவுத்தரை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா? பார்க்க வேண்டும் என்றால் ராவுத்த குமாரசாமி கோயிலுக்குச் செல்லுங்கள்.

கொங்கு நாட்டில் காகம் எனுமிடத்தில் இருக்கிறது இந்த ராவுத்த குமாரசாமி கோயில். கோயில் மீது ஆறு சிறிய தூண்களும், ஒரு கோபுரமும் விமானமும் இருக்கும். வித்தியாசமான காட்சி. மசூதியும் கோயிலும் சேர்ந்தார்போல் இருக்கும். 
இந்தக் கோயிலுக்குப் பாத்தியப்பட்டவர்கள் காகம் பகுதியைச் சேர்ந்த கண்ணன் கூட்டத்தினர். கொங்கு வெள்ளாளர் கவுண்டர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் இவர்கள். கோயில் முழுக்க ராவுத்தர்களின் சிலை இருக்கிறது. நுழைவுவாயில் முதல் கர்ப்பகிரஹம்வரை இந்தச் சிலைகளைப் பார்க்கலாம். கர்ப்பகிரஹ வாயில்கதவு மீது ராவுத்தர் ஒருவர் லுங்கி உடுத்தி சிகரெட் புகைப்பதுபோல் சிலை இருக்கிறது. கர்ப்பகிரஹத்துக்குள் முருகன் சிலைக்கு அருகேயே ராவுத்தர் சிலையும் ஒய்யாரமாக வீற்றிருக்கும்.

முஸ்லிம்களின் ஆதிக்கம் ஆயிரம் ஆண்டு காலம் பழமையானது என்ற நிலையில் இந்துக் கோயில்களில் இஸ்லாமியர்களை காவல் தெய்வங்களாகக் கொண்டாடும் கலாச்சாரம் ஆச்சரியம் அளிப்பது ஒன்றுமில்லை.
ஸ்ரீரங்கத்தில் துளுக்க நாச்சியார், ஐயப்பன் கோயிலில் வாவர் சாமி, திரவுபதி அம்மன் கோயிலில் முத்தல ராவுத்தன் என்ற தெய்வங்கள் எல்லாம் நம் கலாச்சாரத்தோடு இணைந்ததே.

ராவுத்தர்கள் காவல்தெய்வமான கதை..
சரி தமிழ் முஸ்லிம்களில் குதிரை வியாபாரம் செய்துவந்த ராவுத்தர்கள் எப்படி கொங்கு வெள்ளால சமூகத்தின் தெய்வமானார்கள் என்பதைத் தெரிந்து கொள்வோம். பல நூறு ஆண்டுகளுக்கு முன்னர் கொங்கு வெள்ளால சமூகத்தின் கண்ணன் கூட்டத்தினர் பெருந்த் துயரில் இருந்தபோது ராவுத்தர்கள்தான் அவர்களுக்கு பாதுகாப்பு நல்கி அந்தக் கூட்டம் மீண்டும் பிழைக்க உதவி செய்திருக்கிறது. அதற்கு நன்றி செலுத்தும் வகையிலேயே கண்ணன் கூட்டத்தினர் இன்றளவு ராவுத்தர்களை காவல் தெய்வமாகக் கொண்டாடுகின்றனர். இத்தகவல் நாட்டுப்புற இலக்கியங்களைப் பாடும் கண்ணாடி பெருமாள் பாடிய வெள்ளையம்மா காவியத்திலிருந்து தெரியவந்துள்ளது.
ராவுத்தர் சாமிக்கு கண்ணன் கூட்டத்தினர் படையலாக இறைச்சியும் சாராயமும் படைக்கின்றனர். 

ஒவ்வொரு திங்களும், வெள்ளியும், அமாவாசை, பவுர்ணமி நாட்களில் கண்ணன் கூட்டத்தினர் கோயிலுக்கு தவறாமல் வந்துவிடுகின்றனர். மூன்றாண்டுகளுக்கு ஒருமுறை பொங்கல் வைக்கின்றனர். குடும்பத்தில் சுபகாரியம் முடிவு செய்தால் உடனே குடும்பத்தாருடன் ராவுத்த குமாரசாமி கோயிலுக்கு வந்துவிடுகின்றனர்.
முஸ்லிம் ராவுத்தரை காவல் தெய்வமாகக் கொண்டாடும் இந்தக் கோயில் நிச்சயம் மதநல்லிணக்கத்தின் அடையாளமே.

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close