[X] Close
 

மதுரையில் காலா படத்தின் முதல் காட்சி டிக்கெட் ரூ.700: அதிகாலை சிறப்புக் காட்சி, முன்பதிவு தீவிரம்


madurai-kaala-release

  • kamadenu
  • Posted: 06 Jun, 2018 16:15 pm
  • அ+ அ-

ரஜினிகாந்த் நடித்து நாளை வெளியாகும் காலா படத்துக்கான முதல் காட்சியை பார்க்க மதுரையில் ரூ.700-வரை டிக்கெட் விற்பனை விறுவிறுப்பாக நடக்கிறது.

நடிகர் ரஜினிகாந்த் நடிக்க, பா.ரஞ்சித் இயக்கத்தில் நாளை (ஜூன் 7) வெளிவருகிறது காலா திரைப்படம். ரஜினி அரசியல் பிரவேச அறிவிப்புக்குப் பின் வெளியாகும் படம் என்பதால் ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்பு நிலவுகிறது. ரஜினி படத்தை முதல் காட்சியிலேயே பார்க்கும் ஆர்வத்தில் மதுரை ரசிகர்கள் உள்ளனர்.

இதுகுறித்து மதுரை ரஜினி மக்கள் மன்ற நிர்வாகி ஒருவர் கூறியது: மதுரையில் அம்பிகா, மதி, தமிழ்ஜெயா , தங்கரீகல், அம்பிகை, மீனாட்சி, திருநகர் தேவி கலைவாணி ஆகிய திரையரங்குகளில் காலா படம் வெளியாக உள்ளது. இதில் 2 திரையங்குகளை உள்ளடக்கிய திரையங்குகளும் உள்ளன. நாளை அதிகாலை 4.30 மணிக்கு சிறப்பு காட்சி ரசிகர்களுக்காக திரையிடப்படுகிறது.

இதற்காக அனைத்து திரையரங்குகளிலும் முதல் காட்சிக்கான டிக்கெட்டுகளை ரசிகர் மன்ற நிர்வாகிகளே வாங்கி, ரசிகர்களுக்கு விநியோகித்து வருகின்றனர். மதுரையைச் சேர்ந்த பிரபல விநியோகஸ்தர் ஒருவர் தென் மாவட்ட காலா விநியோக உரிமையைப் பெற்றுள்ளதாகவும், ஒரு திரையரங்குக்கு ரூ.60 லட்சம் பெறப்பட்டுள்ளதாகவும் தகவல் உள்ளது. இதனால் திரையரங்கை பொறுத்து, ஒரு டிக்கெட் ரூ.300 முதல் ரூ.400-வரை ரசிகர்மன்ற நிர்வாகிகள் முன்பணம் செலுத்தியே பெற முடிகிறது. 

இதனை ரூ.500-க்கு மன்றங்கள் மூலம் விநியோகிக்கிறோம். கூடுதலாக கிடைக்கும் பணத்தை வைத்து கட்அவுட், பேனர், தோரணங்கள் உள்ளிட்டவற்றுக்கு செலவிடுகிறோம்.

சில ஆண்டுகளுக்கு முன்பு வரை முதல் காட்சிக்கு குறைந்தபட்ச கட்டணத்திற்கு டிக்கெட்டை வழங்குவர். அதை அதிக தொகைக்கு விற்று, கூடுதல் பணத்தில் மன்றங்களை நடத்தினோம். இதற்கு மன்றத் தலைமையும் ஒத்துழைத்தது. இப்போது எல்லாமே தலைகீழாக மாறிவிட்டது. மொத்தமாக படத்தை விற்று பணம் பார்த்து விடுகின்றனர். 

ரசிர்களுக்கான காட்சிக்காக மன்றம் எந்த வழியிலும் தலையிடுவதில்லை. மிக அதிக தொகை கொடுத்து படத்தை வாங்கும் திரையரங்கம், போட்ட முதலை எடுக்கவே பெரும்பாடு பட வேண்டிய நிலை உள்ளதாகக் கூறி, ரசிகர்களை கண்டுகொள்வதில்லை. 

ஜூன் 7 அதிகாலை ரசிகர்களுக்கான காட்சிக்காக ஒரு திரையரங்கில் நேரடியாக ஒரு டிக்கெட் ரூ.700-க்கு முன்பதிவு செய்யப்படுகிறது. அடுத்த காட்சி முதல் ரூ.500-க்கு விற்கப்படுகிறது. மற்ற திரையரங்குகளில் ரூ.300 முதல் ரூ.200 வரை முன்பதிவு செய்யப்படுகிறது.

படம் எப்படி இருக்குமோ என தெரியாத நிலையில், வரும் ஞாயிற்றுக்கிழமைக்குள் முடிந்தவரை முன்பதிவு செய்து பணத்தை எடுத்தால்தான் உண்டு என்ற நிலையில் திரையரங்க உரிமையாளர்கள் செயல்படுகின்றனர். ரசிகர்கள் காட்சிக்கான விற்பனை முன்புபோல் இல்லாவிட்டாலும் விற்றுத்தீர்ந்துவிட்டது என்றார்.

- எஸ்.ஸ்ரீனிவாசகன்

தொடர்புடைய செய்திகள்

 




Kalathin Vasanai - Kindle Edition


m7

d7

[X] Close