[X] Close

விவசாயிகள் என்ற போர்வையில் தண்ணீரை திருடும் கார்ப்பரேட் நிறுவனம்: சட்ட நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்


corporate-illegal-water-extraction

உடுமலையை அடுத்த திருமூர்த்தி அணை முன்பாக பொதுப்பணித் துறை அலுவலகம் எதிரே முறைகேடாக பதிக்கப்பட்டிருந்த ராட்சத குழாய். (அடுத்த படம்) அப்புறப்படுத்தப்பட்ட குழாயை பார்வையிட்ட கோட்டாட்சியர் மற்றும் அதிகாரிகள்.

  • kamadenu
  • Posted: 05 Jun, 2018 15:29 pm
  • அ+ அ-

விவசாயிகள் என்ற போர்வையில் பிஏபி தண்ணீரை திருடும் கார்ப்பரேட் நிறுவனம் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டுமென விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர். 

கோவை, திருப்பூர் மாவட்டங்களிலுள்ள 3.77 லட்சம் ஏக்கர் பாசனம் பெறும் பிஏபி திட்டம், அதிகரித்துவரும் முறைகேடுகளால் அழியும் நிலைக்கு தள்ளப்பட்டு வருவது விவசாயிகளை வேதனையடைச் செய்துள்ளது. முறைகேடாக குழாய்கள் பதிக்கப்பட்டு பாசன நீர் திருடப்படுவதால், கடைமடை விவசாயிகள் தண்ணீர் கிடைக்காமல் விவசாயத்தை கைவிடும் நிலைக்கு தள்ளப்பட்டு வருகின்றனர். 

பெரும்பாலான விவசாயிகளின் நிலை இவ்வாறாக இருக்க, திருமூர்த்தி அணையை ஒட்டியே பிஏபி பாசனம் பெறாத சிறு, குறு விவசாயிகளின் தரிசு நிலங்களை கையகப்படுத்தி, ‘கார்ப்பரேட்’ பாணியில் சிலர் விவசாயம் செய்து வருவதாகக் கூறப்படுகிறது. மேற்படி நிலத்தில் ஒரு சொட்டு தண்ணீர்கூட கிடைக்காது என்ற நிலையில், 3 கி.மீ. தொலைவில் உள்ள பிஏபி நீரை முறைகேடாக எடுத்துச்செல்வது அதிகாரிகளின் ஆய்வில் தெரியவந்துள்ளது. 

விவசாயிகளின் புகாரின்பேரில், முறைகேடாக பதிக்கப்பட்ட குழாய்களை அகற்ற ஆட்சியர் உத்தரவிட்டதை அடுத்து, கோட்டாட்சியர் எஸ்.அசோகன் தலைமையில் வட்டாட்சியர் ப.தங்கவேல், பொதுப்பணித் துறை உதவி செயற்பொறியாளர் காஞ்சித்துரை ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர். வாய்க்காலுக்கு அடியில் துளையிட்டு, ராட்ச குழாய்கள் பதித்து தண்ணீர் எடுத்துச் செல்வது கண்டுபிடிக்கப்பட்டது. 

இதுதொடர்பாக தளி பேருராட்சி முன்னாள் தலைவர் தெய்வநாயகி கூறும்போது, ‘சிலரது அராஜகம், அத்துமீறல்களால் பிஏபி திட்டம் பாழ்படுத்தப்பட்டு வருகிறது. சிறு விவசாயி ஒருவரின் பலவீனத்தைப் பயன்படுத்தி, மாதம் ரூ.20000 தருவதாகக் கூறி, அவரது கிணற்றில் இருந்து 3 கி.மீ.-க்கு அப்பால் உள்ள 300 ஏக்கர் நிலத்துக்கு தண்ணீர் கொண்டு செல்லப்படுகிறது. இதற்காக, 1 கோடி லிட்டர் கொள்ளளவு கொண்ட நீர்த்தேக்கத் தொட்டி கட்டியுள்ளனர். கார்ப்பரேட் விவசாயம் நடைபெற்று வருகிறது. சிறு, குறு விவசாயிகளை காக்க யாரும் இல்லை என நினைக்கும்போது வேதனையாக உள்ளது’ என்றார். 

பேரூராட்சியின் மற்றொரு முன்னாள் தலைவர் ரம்யாதேவி கருணாகரன் கூறும்போது, ‘திருமூர்த்தி அணையைச் சேர்ந்த விவசாயிகள் 60 ஆண்டுகளாக கிணறு மற்றும் பிஏபி நீரைக் கொண்டு விவசாயம் செய்து வருகின்றனர். 2 ஆண்டுகளுக்கு முன்னர் உடுமலையில் உள்ள பிரபல தொழிலதிபரும், தனியார் பள்ளித் தாளாளர் ஒருவரும் சேர்ந்து, தண்ணீர் வசதியே இல்லாத இடத்தில் 200 ஏக்கரை விலைக்கு வாங்கியுள்ளனர். 

அங்கிருந்து தளி பகுதியிலுள்ள விவசாயிடம் கூட்டு சேர்ந்து, அவருக்கு சொந்தமான கிணற்றில் இருந்து தண்ணீர் கொண்டுசெல்ல பேரூராட்சியிடம் அனுமதி கோரி விண்ணப்பித்துள்ளனர். பிற விவசாயிகளுக்கான நடைமுறை என்ற அடிப்படையில் நிர்வாகமும் அனுமதி அளித்துள்ளது. மேற்படி அனுமதியைப் பயன்படுத்தி முறைகேடாக கிணற்றை ஆழப்படுத்தியும், பக்கத் துளைகள் இட்டும் தண்ணீர் எடுத்ததால், அருகாமையில் உள்ள விவசாய கிணறுகள் பாதிக்கப்பட்டன. இதுதொடர்பாக முழுமையான நடவடிக்கை எடுத்தால் மட்டுமே, பிஏபி திட்டத்தை பாதுகாக்க முடியும்’ என்றார். 

திருமூர்த்தி அணை உதவி செயற்பொறியாளர் காஞ்சித்துறை கூறும்போது, ‘ஆட்சியரின் உத்தரவின்பேரில், பிரதான வாய்க்கால், கிளை வாய்க்கால்களில் 45 இடங்களில் பதிக்கப்பட்ட குழாய்கள் நேற்று அகற்றப்பட்டன. 30 குழாய்கள் பிரதான வாய்க்காலில் இருந்து அகற்றப்பட்டுள்ளன. கார்ப்பரேட் நிறுவனத்துக்கு கொண்டு செல்லப்படுவதாக எழுந்துள்ள புகார் குறித்து ஆய்வு செய்யப்படும்’ என்றார். 

உதவிப் பொறியாளர் விஜயசேகர் கூறும்போது, ‘பணியில் உள்ள அதிகாரிகள் அனைவருமே ஓராண்டுக்குள் பொறுப்பேற்றவர்கள்தான். மேற்படி அலுவலகம் எதிரே முறைகேடாக குழாய் பதிக்கப்பட்டிருப்பது எங்களுக்கு தெரியாது. 2 ஆண்டுகளுக்கு முன்பே பதிக்கப்பட்டதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்’ என்றார்.

- எம்.நாகராஜன்

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close