[X] Close

குமரியில் மழையால் 800 குளங்கள் நிரம்பின: தூர்வாரியதால் அதிக நீர் தேக்கம்


kaniyakumari-rains

கன்னியாகுமரி மாவட்டம் வெள்ளிச்சந்தை பகுதியில் மழைநீரால் நிரம்பி, மறுகால் பாய்ந்த குளம. | படம்: எல்.மோகன்.

  • kamadenu
  • Posted: 04 Jun, 2018 12:22 pm
  • அ+ அ-

குமரி மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்த மழையால் 800-க்கும் மேற்பட்ட குளங்கள் நிரம்பியுள்ளன. கடந்த ஆண்டு தூர்வாரியதால் குளங்களில் முழு கொள்ளளவுக்கு தண்ணீர் தேங்கியுள்ளது. பாசனத்துக்காக அணைகள் திறக்கப்படும் முன்னரே குளங்கள் நிரம்பி வருவதால் விவசாயிகள் ஆறுதல் அடைந்துள்ளனர்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை சரிவர பெய்யாததால் கன்னிப்பூ சாகுபடியில் பாதியளவுக்கு கூட நெல் விவசாயம் நடைபெறவில்லை. அதே நேரம், அரசு அளித்த அனுமதியையும், மழையின்மையையும் பயன்படுத்தி கடந்த ஆண்டு மாவட்டத்திலுள்ள பொதுப்பணித்துறைக்கு சொந்தமான 2,040 குளங்களில் 60 சதவீத குளங்களில் இருந்து விவசாயிகள் வண்டல்மண் எடுத்தனர். பிற தேவைகளுக்கும் குளங்களில் இருந்து மண் எடுக்கப்பட்டதால் 8 ஆண்டுகளுக்கு பிறகு குளங்கள் தூர்வாரப்பட்டன. 

விவசாயிகளின் தொடர் கோரிக்கையை ஏற்று மாவட்டத்தில் முக்கிய நீராதாரமாக திகழும் பேச்சிப்பாறை அணையை சீரமைக்கும் பணி நடைபெறுவதால் அணையில் தற்போது தண்ணீரை சேமித்து வைக்க முடியாத சூழல் உள்ளது. 

பேச்சிப்பாறை அணைக்கு விநாடிக்கு 400 கனஅடி தண்ணீர் உள்வரத்தாக வரும் நிலையில், முழுவதும் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் இந்த ஆண்டு கன்னிப்பூ சாகுபடி மேற்கொள்ளும் விவசாயிகள் கவலையில் இருந்தனர். 

விவசாயிகள் மகிழ்ச்சி

இந்நிலையில் கடந்த மாதம் கோடைமழை ஓரளவு கைகொடுத்தது. தற்போது குமரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளது. இதனால் மாவட்டத்தில் உள்ள பாசன குளங்கள் வேகமாக நிரம்பி வருகின்றன. 800-க்கும் மேற்பட்ட பொதுப்பணித்துறை குளங்கள் முழு கொள்ளளவை எட்டியுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

பாசனத்துக்காக இன்று பெருஞ்சாணி அணை திறக்கப்படவுள்ளது. 

இதுகுறித்து வேளாண் அதிகாரி ஒருவர் கூறும்போது, ‘‘கன்னியாகுமரி மாவட்டத்தில் தற்போது குளங்களில் உள்ள தண்ணீர் மூலம் குளத்து பாசனத்தால் பயன்பெறும் வயல்களுக்கு இரு மாதங்களுக்கு தட்டுப்பாடின்றி தண்ணீரை விநியோகிக்க முடியும். ஆனால், கால்வாய் மூலம் பாசனம் பெறும் வயல்கள், கடைமடை பகுதிகளுக்கு அணை நீர் கட்டாயம் தேவையாகிறது.

தட்டுப்பாடின்றி நீர் விநியோகம்

கடந்த ஆண்டு குளங்களில் வண்டல் மண் எடுத்து தூர்வாரப்பட்டதால், அவற்றில் கொள்ளளவு 30 சதவீதத்துக்கு மேல் அதிகரித்துள்ளது. பருவமழை மேலும் தொடரும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், கிராமப்புறங்களில் உள்ள பெரும்பாலான குளங்கள் மறுகால் பாய்ந்து வருகின்றன. எஞ்சியுள்ள குளங்களை நிரப்ப அணை நீரை அதிகம் பயன்படுத்த வேண்டியதில்லை. 

எனவே, சானல் பகுதி, கடைமடை பகுதி விவசாயிகளுக்கும் அணையிலிருந்து பாசனத்துக்கு தட்டுப்பாடின்றி தண்ணீர் கிடைக்கும்’’ என்றார் அவர். 

-  எல்.மோகன்

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close