[X] Close

உள்ளாட்சி தேர்தல் தாமதத்தால் நிதி ஒதுக்கீடின்றி பஞ்சாயத்துகளில் பணிகள் தேக்கம்


panchayat-election

  • kamadenu
  • Posted: 04 Jun, 2018 12:20 pm
  • அ+ அ-

உள்ளாட்சி தேர்தல் தாமதமாகும் நிலையில், பஞ்சாயத்துகளுக்கு போதிய நிதி ஒதுக்கீடு செய்யாததால் கிராமங்களில் அத்தியாவசிய தேவைகள் நிறைவேற்றப்படவில்லை. இதனால் அங்கு வசிக்கும் மக்கள் கடும் பாதிப்பை எதிர்கொள் கின்றனர்.

தமிழகத்தில் கடந்த 2016-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டது. இடஒதுக்கீடு முறை யாக பின்பற்றப்படவில்லை எனக்கோரி திமுக சார்பில் சென்னை உயர்நீதிமன்றத் தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிமன்றம் உரிய இட ஒதுக்கீடை பின்பற்றி தேர்தலை நடத்த வேண் டும் எனக்கூறி தேர்தல் அறிவிப்பை ரத்து செய்தது.

உள்ளாட்சி பிரதிநிதிகள் பதவிக்காலம் முடிந்த நிலையில், உள்ளாட்சி அமைப்புகளை நிர்வகிக்க செயல் அலுவலர், வட்டார வளர்ச்சி அலுவலர் ஆகியோரை தனி அலுவலர்களை நியமித்து அரசு உத்தரவிட்டது. இதனால் கிராமங்களில் நடைபெறும் வளர்ச்சிப் பணிகளில் தொய்வு ஏற்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்த வண்ணம் உள்ளன.

பணிகள் தேக்கம்

தற்போது, அரசு சார்பில் கிராம பஞ்சாயத்துகளுக்கு உரிய நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை என கூறப்படுகிறது. இதனால் குடிநீர், சாலை, மின் விளக்கு உள்ளிட்ட அத்தியாவசிய பணிகள் தேக்கமடைந்துள்ளன. மேலும், சுகாதார பணியாளர்களுக்கு சம்பளம் வழங்காததால், அவர்கள் மாற்று பணிகளை தேடி சென்றுவிட்டனர். இதனால் கிராமப்புறங்களில் சுகாதாரப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. 

இதுகுறித்து விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட தலைவர் கு.ரவீந்திரன் கூறியதாவது: தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடத்த தாமதமாகும் நிலையில், தற்போது அரசு கிராமப்பஞ்சாயத்துகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்யவில்லை. இதனால் அத்தியாவசிய தேவைகளான சாலை வசதி, தெரு விளக்கு, குடிநீர் விநியோகம் உள்ளிட்ட பணிகள் கிடப்பில் போடப்பட்டுள்ளன. தமிழகம் முழுவதும் 80 சதவீத கிராமங்களில் தெருவிளக்குகள் எரிவதில்லை. ஆழ்துளை கிணறுடன் கூடிய அடிபம்பு, மின்விசை பம்பு ஆகியவை பழுதானால் கூட, சரி செய்ய முடிவதில்லை.

ஊதியம் வழங்கவில்லை

வளர்ச்சி பணிகள் எதுவும் நடக்காமல் கிராமங்கள் பின்னடைவை சந்திக்கின்றன. பஞ்சாயத்து துப்புரவு பணியாளர்களுக்கு 5 முதல் 6 மாதம் வரை ஊதியம் வழங்கப்படவில்லை. இதுகுறித்து வட் டார வளர்ச்சி அலுவலர்களின் கவனத்துக்கு கொண்டு சென்றால், ஊராட்சி உதவியாளர்களை அவர்கள் கை காட்டுகின்றனர். அவர்களிடம் கேட்டால், ‘‘சிறு, சிறு வேலைகளுக்கு எங்களது சொந்த பணத்தை செலவு செய்து வருகிறோம். பெரிய பணிகள் மேற்கொள்ளும் அளவுக்கு எங்களிடம் பொருளாதார வசதி இல்லை’’ என் கைவிரிக்கின்றனர் என்றார் அவர்.

இதுகுறித்து ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள் கூறும்போது, ‘‘கிராமப்புறங்களில் உள்ள தெருவிளக்குகளை எல்இடி பல்புகளாக மாற்றும் பணி 80 சதவீதம் வரை நிறைவு பெற்றுள்ளது. ஒரு சில பஞ்சாயத்துகளில் நிதி பற்றாக்குறை உள்ளது. ஆனால், பெரும்பாலான பஞ்சாயத்துகளில் பணிகள் தொய்வின்றி நடக்கிறது’’ என்றனர்.

-  எஸ்.கோமதிவிநாயகம்

வாக்களிக்கலாம் வாங்க

வடசென்னை படத்திற்கு உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close