[X] Close

தமிழக - ஆந்திர எல்லையில் கனமழை: புல்லூர் தடுப்பணை நிரம்பியது


pullur-dam-heavy-rain-effect

கன மழையால் புல்லூர் தடுப்பணை நிரம்பி வழிகிறது.

  • kamadenu
  • Posted: 04 Jun, 2018 12:12 pm
  • அ+ அ-

வாணியம்பாடி தமிழக - ஆந்திர எல்லைப் பகுதியில் பெய்து வரும் கன மழை காரணாமாக புல்லூர் தடுப்பணை நிரம்பி வழிகிறது. இதனால், வாணியம்பாடி பாலாற்றுப்பகுதியில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.

தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கன மழை பெய்து வருகிறது. அதேபோல், ஆந்திரா மற்றும் கர்நாடகா மாநிலங்களிலும் தொடர் மழை பெய்து வருகிறது. இந்நிலையில், தமிழக - ஆந்திர எல்லைப் பகுதியில் கனமழை பெய்து வருவதால், அங்குள்ள பாலாற்றில் வெள்ளம் கரை புரண்டு ஓடத் தொடங்கியுள்ளது.

இந்நிலையில், வேலூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த தமிழக - ஆந்திர எல்லை பாலாற்றுப் பகுதியில் கனகநாச்சியம்மன் கோயில் அருகே பாலாற்றின் குறுக்கே ஆந்திர அரசு 12 அடி உயரத்துக்கு தடுப்பணை ஒன்றை கட்டியுள்ளது. இதேபோல், ஆந்திராவில் உள்ள பாலாற்றுப் பகுதிகளில் 20-க்கும் மேற்பட்ட இடங்களில் அம்மாநில அரசு 12 அடி உயரத்துக்கு தடுப்பணைகளை கட்டி தண்ணீரை சேமித்து வருகிறது.

இந்நிலையில், ஆந்திராவில் பெய்து வரும் தொடர் மழையால் தடுப்பணைகள் நிரம்பி புல்லூர் தடுப்பணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. நேற்று முன்தினம் மாலை புல்லூர் தடுப்பணையும் நிரம்பி அதிலிருந்து தண்ணீர் வழிந்தோடி வேலூர் மாவட்ட பாலாற்றில் பெருக்கெடுத்து ஓடியது.

வாணியம்பாடி அடுத்த திம்மாம்பேட்டை, ஆவாரங்குப்பம், வடக்குப்பட்டு உள்ளிட்ட பகுதிகளைக் கடந்து பாலாற்றில் நீர் வரத்து அதிகரித்துள்ளது. இன்னும் ஓரிரு நாட்களுக்கு ஆந்திராவில் கன மழை பெய்தால், புல்லூர் தடுப்பணை வழியாக வரும் மழைநீர் அம்பலூர், கொடையாஞ்சி, வாணியம்பாடியை கடந்து செல்லும் என அப்பகுதி விவசாயிகள் தெரிவித்தனர்.

மேலும், வேலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் நேற்று முன்தினம் இரவு 8 மணிக்கு மேல் கன மழை பெய்தது. இதனால், நகரில் பல இடங்களில் மின்வெட்டு ஏற்பட்டது. ஆலங்காயம், அரக்கோணம், மேல் ஆலத்தூர், ஆற்காடு உள்ளிட்ட பகுதிகளில் சூறைக்காற்றுடன் கூடிய கன மழை பெய்ததால் அப்பகுதியில் தாழ்வானப் பகுதிகளில் மழைநீர் சூழ்ந்தது. 

வேலூரில் இரவு 8 மணிக்கு தொடங்கிய மழை இரவு 11 மணி வரை நீடித்தது. இதனால், பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர். கோடை வெப்பம் தணிந்து குளிர்ந்த காற்று வீசியதால் மக்கள் மகிழ்ச்சியடைந்தனர். 

ஆலங்காயத்தில் அதிகபட்ச மழை

வேலூர் மாவட்டத்தில் நேற்று காலை நிலவரப்படி மழையளவு பதிவான விவரம்: வேலூர் 7 மி.மீ., ஆம்பூர் 7.2 மி.மீ., வாணியம்பாடி 9.2 மி.மீ., ஆலங்காயம் 34.8 மி.மீ., அரக்கோணம் 25.6 மி.மீ., காவேரிப்பாக்கம் 9.2 மி.மீ., வாலாஜா 6.0.மி.மீ., சோளிங்கர் 15.0 மி.மீ., ஆற்காடு 21.4 மி.மீ., குடியாத்தம் 14.0 மி.மீ., மேல் ஆலத்தூர் 34.6 மி.மீ., என பதிவாயிருந்தன.

 

 

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close