[X] Close
 

போராட்டத்தை நிறுத்தமாட்டார்கள்; நிறுத்தவும் கூடாது: ரஜினிக்கு கமல் பதிலடி


kamal-slams-rajinikanth

  • பாரதி
  • Posted: 04 Jun, 2018 11:12 am
  • அ+ அ-

தூத்துக்குடி சம்பவம் குறித்து நடிகர் ரஜினிகாந்த் கூறிய கருத்தை மறுத்துள்ள மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கம்லஹாசன், "மக்கள் போராட்டத்தை நிறுத்தமாட்டார்கள். நிறுத்தவும்கூடாது. போராட்டத்துக்கு என்று ஒரு தன்மை வேண்டும்" என்று கூறினார்.

கமல் பேசும்போது, "என் கருத்து வேறு. நான் காந்தியின் சீடன். போராடுவதில் ஒரு தன்மை இருக்க வேண்டும். அதை காந்தியிடம்தான் கற்றுக்கொள்ள வேண்டும். போராட்டம் என்பது கத்தியும் வாளும் துப்பாக்கியும் கொண்டு செய்வது அல்ல. துப்பாக்கி வந்தாலும் அதை திறந்த மார்புடன் மனதுடன் ஏற்றுக்கொள்ளும் தன்மையை நாம் தூத்துக்குடியில் பார்த்தோம். அதை நான் நல்ல ஒரு பாதையாக நினைக்கிறேன். அதில் வன்முறை இருந்தது என்றால் வன்முறையைக் குறைத்துக் கொள்ள வேண்டும். அடுத்தடுத்த போராட்டங்களில் அந்தக் கறைகூட இருக்கக்கூடாது.. அதற்காக மக்கள் போராட்டத்தை நிறுத்தமாட்டார்கள். நிறுத்தவும்கூடாது" என்றார்.

ஸ்டெர்லைட் ஆலை முடக்கப்பட்டது குறித்த கேள்விக்கு, "ஸ்டெர்லைட் ஆலை அதிக பேராசையுடன் எந்த ஒரு விதிமுறையையும் பின்பற்றாமல் செயல்பட்டது. நம் நாட்டில் பெரிய ஆலைகள் அமைய வேண்டும் என்பதுதான் எனது ஆசை. ஆனால், அந்த ஆலைகள் எல்லாம் அரசின் சட்டதிட்டங்களை ஒழுங்காகப் பின்பற்ற வேண்டும்" என்றார்.

ரஜினி சொன்னது என்ன?
முன்னதாக, தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய பிறகு செய்தியாளர்களை சந்தித்த ரஜினிகாந்த், "தமிழகத்தில் அடிக்கடி போராட்டங்கள் நடந்துகொண்டே இருக்கிறது. சிலர் நல்லதுக்காக போராடுகிறார்கள். சிலர் போராட்டங்களை ஊக்குவிக்கிறார்கள். தமிழ்நாடு போராட்ட பூமி மாதிரி இருந்தால் எந்தத் தொழிலும் இங்கே வராது. எந்த வியாபாரிகளும் வரமாட்டார்கள். வேலைவாய்ப்பு கிடைக்காது. இளைஞர்கள் ரொம்ப கஷ்டப்படுவார்கள். ஏற்கெனவே, இங்கே விவசாயம் கிடையாது, தண்ணீர் கிடையாது. வேலைவாய்ப்பும் இல்லையென்றால் மக்கள் ரொம்ப கஷ்டப்படுவார்கள்.

எனவே, போராட்டம் நடத்தும்போது ரொம்ப ஜாக்கிரதையாக செய்ய வேண்டும். அரசாங்கமும் போராட்டங்களுக்கு அனுமதி கொடுக்கும்போது விதிமுறைகள், நிபந்தனைகளை முழுமையாக பின்பற்றி கொடுக்க வேண்டும். ஏதாவது பிரச்சினை என்றால் நீதிமன்றங்களை அணுகி தீர்வு காண வேண்டுமே தவிர, போராட்டம், போராட்டம் என்று சொன்னால் ரொம்ப கஷ்டமாயிரும்" எனக் கூறியிருந்தார்.

தொடர்புடைய செய்திகள்

 
 




Kalathin Vasanai - Kindle Edition


m7

d7

[X] Close