[X] Close
 

மீட்கப்பட்ட பின் பாதுகாப்பகத்தில் வைக்காமல்  முதல் முறையாக கோயிலில் ஒப்படைக்கப்பட்ட சிலைகள்


தஞ்சாவூர் பெரிய கோயிலில் நேற்று ஒப்படைக்கப்பட்ட ராஜராஜ சோழன், உலகமாதேவி சிலைகளுக்கு நேற்று நடைபெற்ற தீபாராதனை.

  • kamadenu
  • Posted: 02 Jun, 2018 13:25 pm
  • அ+ அ-

சிலை கடத்தல் வழக்கில் மீட்கப்பட்ட பல்வேறு கோயில்களின் சிலைகள் பாதுகாப்பகத்தில் வைக்கப்பட்டுள்ள நிலையில், தஞ்சாவூர் பெரிய கோயில் ராஜராஜ சோழன், உலகமாதேவி சிலைகள் மட்டுமே கோயிலில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

தமிழகத்தில் பழமையான கோயில்களின் சிலைகள் திருடு போவதை, வெளிநாடுகளுக்கு கடத்தப்படுவதை தடுப்பதற்காக தமிழக காவல் துறையில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு என்ற பிரிவு ஏற்படுத்தப்பட்டது.

தமிழகத்தில் எந்த கோயில்களிலும் சிலைகள் உள்ளிட்ட விலை மதிப்புமிக்க பொருட்கள் காணாமல் போனாலும் உள்ளூர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, பின்னர் அவ்வழக்கு சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸாரிடம் மாற்றப்படும்.

இதற்கிடையில், தஞ்சாவூர் மாவட்டம் பந்தநல்லூர் கோயிலில் சிலைகள் காணாமல் போனது தொடர்பாக அவ்வூரைச் சேர்ந்த வெங்கட்ராமன் என்பவர் பந்தநல்லூர் காவல் நிலையத்தில் கடந்த 2016-ம் ஆண்டு புகார் அளித்தார். ஆனால், எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதையடுத்து, அவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி மகாதேவன் கடந்த 21.7.2017 அன்று சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐஜியாக பொன் மாணிக்கவேலுவை நியமித்து, சிலை கடத்தல் தொடர்பான வழக்குகளை எல்லாம் அவர் விசாரிக்க வேண்டும், இதற்காக கும்பகோணத்தில் தனியாக நீதிமன்றத்தை ஏற்படுத்தி தர வேண்டும் என தமிழக அரசுக்கு உத்தரவிட்டார்.

இதையடுத்து, தமிழக அரசு சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐஜியாக பொன் மாணிக்கவேலுவை நியமித்தது. மேலும், தமிழகத்தில் உள்ள காவல் நிலையங்களில் கிடப்பில் இருந்த சிலைகள் காணாமல் போன வழக்குகளை எல்லாம் கும்பகோணம் நீதிமன்றத்துக்கு மாற்றம் செய்தது.

கும்பகோணம் நீதிமன்றத்தில் இந்த வழக்குகள் எல்லாம் விசாரிக்கப்பட்டு, பல்வேறு கோயில்களில் காணாமல் போய் மீட்கப்பட்ட சிலைகள் அனைத்தும் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டு வழக்குகள் முடியும் வரை பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று கருதி, கும்பகோணம் சிலைகள் பாதுகாப்பு மையத்தில் வைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், தஞ்சாவூர் பெரிய கோயிலில் காணாமல் போய் மீட்கப்பட்ட இந்த இரு சிலைகள் மட்டுமே வழக்கு பதிவு செய்த மூன்றே மாதத்தில் மீட்கப்பட்டு நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டு உடனடியாக வழிபாட்டுக்காகவும், பொதுமக்கள் பார்வையிடவும் அதற்குரிய கோயிலில் முதன்முறையாக ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் கூறியதாவது: சிலைகள் கடத்தல் தடுப்பு பிரிவில் 690 வழக்குகள் கும்பகோணம் நீதிமன்றத்துக்கு மாற்றம் செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகின்றன.

கும்பகோணம் நீதிமன்றத்துக்கு இந்த வழக்குகள் வந்த பின், அமெரிக்காவிலிருந்து மீட்கப்பட்ட ஸ்ரீபுரந்தான் கோயில் சிலைகள் உள்ளிட்ட பல்வேறு சிலைகள் கும்பகோணம் சிலை பாதுகாப்பு மையத்தில் இருந்தாலும், முதன் முறையாக உரிய கோயிலுக்கு வழங்கப்பட்டுள்ள சிலைகள் தஞ்சாவூர் பெரிய கோயில் சிலைகள் என்பது சிறப்புக்குரியது.

மீட்கப்பட்ட அனைத்து சிலைகளையும் வழிபாட்டுக்காக அந்தந்த கோயிலில் ஒப்படைக்க நீதிமன்றம் வாயிலாக விரைந்து நடவ டிக்கை எடுக்கப்படும் என்றார்.

- வி.சுந்தர்ராஜ்

தொடர்புடைய செய்திகள்

 
 




Kalathin Vasanai - Kindle Edition


m7

d7

[X] Close