[X] Close
 

தரமான கல்வியை அளித்து சாதிக்கும் அம்மைய நாயக்கனூர் அரசு தொடக்கப்பள்ளி: தனியார் பள்ளியிலிருந்து அரசு பள்ளிக்கு திரும்பும் மாணவர்கள்


quality-education

அம்மையநாயக்கனூர் அரசு தொடக்கப் பள்ளியில் சேர்ந்துள்ள முதலாம் வகுப்பு மாணவர்கள்

  • kamadenu
  • Posted: 02 Jun, 2018 13:10 pm
  • அ+ அ-

திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை அருகே உள்ள அம்மையநாயக்கனூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியின் சிறந்த கல்வித் தரத்தால் ஈர்க்கப்படும் பெற்றோர்கள், தங்கள் குழந்தைகளை இங்கு சேர்க்க அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.

தமிழகத்தில் தனியார் பள்ளிகளை பலரும் நாடிச்செல்வதால் அரசு தொடக்கப் பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை குறைந்து பல பள்ளிகள் மூடப்படும் சூழலுக்கு தள்ளப்பட்டு வருகிறது. ஆனால், நிலக்கோட்டையில் உள்ள அம்மையநாயக்கனூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியிலோ நிலைமை தலைகீழாக உள்ளது. அருகில் உள்ள தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களை, அங்கிருந்து டி.சி. பெற்று இந்த அரசு தொடக்கப் பள்ளியில் சேர்க்க ஏராளமான பெற்றோர்கள் ஆர்வம் காட்டுகின்றனர்.

பள்ளிகள் திறக்கப்பட்டு நேற்று முதல் நாளிலேயே இப் பள்ளியின் ஒன்றாம் வகுப்பில் 57 மாணவர்கள் சேர்ந்துவிட்டனர். அவர்களுக்கு மாலை அணவித்து வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்நிலையில், மேலும் 22 மாணவர்களின் பெற்றோர், தனியார் பள்ளிகளில் படிக்கும் தங்களின் பிள்ளைகளை டி.சி. பெற்று வந்தால், இங்கு சேர்த்துக்கொள்வீர்களா என தலைமை ஆசிரியர் ஜோ.ஆர்தரிடம் விசாரித்துவிட்டுச் சென்றுள்ளனர்.

கடந்த கல்வியாண்டில் இப்பள்ளியில் 5-ம் வகுப்பில் 48 பேர் தேர்ச்சி பெற்று, 6-ம் வகுப்பில் சேர பிற பள்ளிகளுக்குச் சென்றுள்ளனர். தற்போது 1 முதல் 5-ம் வகுப்பு வரை 304 பேர் படிக்கின்றனர்.

திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த மூன்று ஆண்டுகளாக மாணவர்கள் சேர்க்கையில் தொடர்ந்து முதலிடம் பிடித்து வருகிறது இந்த தொடக்கப்பள்ளி. அந்த அளவுக்கு வரவேற்பை பெற இப்பள்ளியில் உள்ள கல்வித் தரம்தான் காரணம்.

இதுகுறித்து பள்ளி தலைமையாசிரியர் ஜோ.ஆர்தர் கூறியதாவது:

மாலை 3.30 மணி முதல் 4.30 மணி வரை மாணவர்களுக்கு ஆங்கிலப் பேச்சுப் பயிற்சி கற்றுத்தருகிறோம். பள்ளியில் உள்ள ஒரு கணினி மூலம் கணினி கல்வியின் அடிப்படையை கற்றுத்தருகிறோம்.

பள்ளியில் மாணவர்களின் பிறந்தநாளை கொண்டாடுகிறோம்.அனைத்து மாணவர்களும் பங்கேற்கும் விதமாக பள்ளி ஆண்டு விழாவை விமரிசையாக கொண்டாடுகிறோம். பள்ளிகளில் நடைபெறும் நிகழ்ச்சிகள், கல்வி தொடர்பான தகவல்களை பெற்றோர்களின் வாட்ஸ்அப் எண்ணுக்கு அனுப்புகிறோம். இதன் மூலம் பெற்றோர்கள் பள்ளியுடன் நேரடித்தொடர்பில் இருக்கின்றனர்.


ஜோ.ஆர்தர்

படிப்பு மட்டுமின்றி விளையாட்டு, நடனம், பேச்சுப்போட்டி, பாட்டு பயிற்சி ஆகியவற்றிலும் மாணவர்களை ஈடுபடுத்துகிறோம். கடந்த ஆண்டு பள்ளிகளுக்கு இடையேயான கலைநிகழ்ச்சிகள் போட்டியில் தனியார் பள்ளிகளுடன் போட்டிபோட்டு எங்கள் பள்ளி மாணவர்கள் பாட்டு, நடனப்போட்டியில் பரிசுகளை பெற்றனர். நிலக்கோட்டை வட்டார அளவிலான விளையாட்டுப்போட்டியில் 13 பரிசுகளை வென்றனர்.

கடந்த ஆண்டு மட்டும் தனியார் பள்ளிகளில் படித்த 17 பேர் எங்கள் பள்ளியில் சேர்ந்தனர். பள்ளியில் ஆங்கில வழிக்கல்வியும் உண்டு. இந்த ஆண்டு பள்ளியில் ஸ்மார்ட் கிளாஸ் தொடங்க உள்ளோம். எங்களின் செயல்பாடுகள் குறித்து மக்களின் பிரச்சாரம் தான் எங்கள் பள்ளியின் வளர்ச்சிக்கு காரணம்.

இவ்வாறு அவர் கூறினார்.

- பி.டி.ரவிச்சந்திரன்

தொடர்புடைய செய்திகள்

 
 




Kalathin Vasanai - Kindle Edition


m7

d7

[X] Close