[X] Close

இன்று உலக புகையிலை இல்லாத தினம்: மதுவை விட மோசமானது புகையிலை பழக்கம்


anti-tobacco-day-no-smoking

  • kamadenu
  • Posted: 31 May, 2018 11:36 am
  • அ+ அ-

ஆண்டுதோறும் மே 31-ம் தேதி சர்வதேச புகையிலை இல்லாத தினம் கடைபிடிக்கப்படுகிறது. 

புகையிலை பயன்படுத்துவதால் ஏற்படும் இதய நோய்களை பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்துவதுதான் இந்த ஆண்டின் புகையிலை இல்லா தினத்தின் முக்கிய நோக்கம். பாக்கு போடுவது, புகைபிடிப்பது என 2 வடிவங்களில் புகையிலையை பயன்படுத்துகின்றனர். புகைபிடிப்பதால் புகையிலையில் இருக்கும் போதை தரக்கூடிய நிக்கோடின் எனும் கெமிக்கல் மூளை நரம்பை தூண்டுகிறது. 2 நிமிடத்தில் மூளையின் ரத்த ஓட்டத்தில் கலக்கிறது. 

பதற்றத்தை குறைத்து உற்சாகம், சுறுசுறுப்பைக் கூட்டுகிறது. உடனே உற்சாகம் பிறக்கிறது. சுறுசுறுப்பாக அவரவர் வேலைகளில் ஈடுபட முடிவதாக புகைபிடிப்பவர்கள் நம்புகின்றனர். அதனாலேயே, புகைபிடிக்கும் பழக்கத்துக்கு எளிதாக அடிமையாகிறார்கள்.

கோபத்தை தணிக்கவும், பொழுது போக்குக்காகவும், இரவுப் பணியில் ஈடுபடுவோர் பெரும்பாலும் புகைபிடிக்கும் பழக்கத்துக்கு அடிமையாகின்றனர். பொதுவாக வாகன ஓட்டுநர்கள் இரவில் விழித்திருக்கவும், சுறுசுறுப்பாக இருக்கவும் புகைபிடிக்கின்றனர். அதில் முழு திருப்தி அடையாதவர்கள், பாக்கை பயன்படுத்துகிறார்கள். நாளடைவில் இதற்கு அவர்கள் முழு அடிமையாகிறார்கள். 

இது குறித்து மதுரையைச் சேர்ந்த உளவியல் ஆலோசகர் ராஜசவுந்தரபாண்டியன் கூறியதாவது: 

புகைபிடிப்பதால் நுரையீரல் புற்று நோய், சுவாசக் கோளாறுகள் ஏற்படுகின்றன. மாரடைப்பு, மூளையில் ரத்தக் கசிவு, பக்கவாதம் உணவு மண்டலத்தில் புற்று நோய் ஏற்படுகிறது. பாக்கு போடுகிறவர்களின் வாயில் புற்று நோய் ஏற்படுகிறது. இளைஞர்கள் புகைபிடிக்கும் பழக்கத்தை சாதாரண டீ, காப்பி குடிப்பது போல நினைக்கிறார்கள். 

விளையாட்டாக இளம் வயதில் புகைபிடிக்க ஆரம்பிக்கிறவர்கள் வாழ்நாள் முழுவதும் மீள முடியாமல் தவிக்கிறார்கள். பாக்கு போடுவது, மது அருந்துவதை (ஆல்கஹால்) விட மோசமானது புகை பழக்கம். மது பழக்கத்தில் இருப்பவர்களைக்கூட மீட்டு விடலாம். ஆனால், புகை பழக்கத்துக்கு அடிமையானவர்களை மீட்பது கடினம். நிறுத்தினால், சரியாக தூங்க முடியாது, உற்சாகமின்மை, வேலையில் கவனச் சிதறல் ஏற்படும்.

தற்கொலை எண்ணம் கூட ஏற்படலாம். ஆண்மைக் குறைவு, குழந்தை இன்மை ஏற்படுவதற்கும் புகை, பாக்கு பழக்கம் ஒரு காரணமாகிறது. சிந்தனைக் குறைபாடு மனநல பாதிப்பு ஏற்படுகிறது. ஒரு நாளாவது உலகத்தில் உள்ள எல்லோரும் புகையிலையை பயன்படுத்த மாட்டோம் என்பதை நோக்கமாக கொண்டு விழிப்புணர்வை ஏற்படுத்தவே உலக புகையிலை இல்லா தினம் கடைபிடிக்கப்படுகிறது. 

புகையிலையில் இருக்கும் நிக்கோடின் 2 நிமிடத்தில் மூளையை சென்றடைந்து 2 மணி நேரம் மட்டுமே வேலை செய்யும். மறுபடியும், சுறுசுறுப்பாக செயல்பட மீண்டும் புகைபிடிக்கும் எண்ணத்தை தூண்டும். இப்படியே தொடர் புகைபிடிப்பவராக மாறுகிறார்கள். 

சமீப காலமாக பள்ளி மாணவர்கள், பெண்கள் கூட சாதாரணமாக புகைபிடிக்கின்றனர். நகர் பகுதியில் வெளிப்படையாகவும், கிராமப் பகுதிகளில் மறைமுகமாகவும் செய்கிறார்கள். பொதுவாக புகைபிடிக்கும் பழக்கத்துக்கு டிரைவர்கள், கட்டுமானத் தொழிலாளர்கள் மிக அதிகமாக அடிமை ஆகிறார்கள். அதனாலேயே அவர்கள் சராசரி வயதை தாண்டுவதற்குள் உடல்நலம், மனநலக் குறைபாடு அடைகிறார்கள். 

புகை பழக்கத்தில் இருந்து ஆரம்பத்திலேயே மீள்வதற்கு தீர்வு காணலாம். அதற்காக அவர்கள் மனநல சிகிச்சை பெறலாம். மனநல மருத்துவர்களை, ஆலோசகர்களை அணுகலாம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

வாக்களிக்கலாம் வாங்க

வடசென்னை படத்திற்கு உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close