[X] Close
 

எஜமானை காப்பாற்ற உயிரை விட்ட நாய்: நல்ல பாம்பை கடித்துக் கொன்ற நெகிழ்ச்சி சம்பவம்


dog-saves-his-master

பாம்புடன் சண்டையிட்டு கடித்து கொன்ற நாய்கள்

  • kamadenu
  • Posted: 31 May, 2018 11:31 am
  • அ+ அ-

வீட்டிற்குள் புகுந்த நல்ல பாம்பை கடித்துக் கொன்று எஜமானை காப்பாற்றிய நாய், பாம்பு கடித்ததால் விஷம் ஏறி அதுவும் உயிரிழந்தது. 

மதுரை அருகே விளாங்குடியை சேர்ந்தவர் நாகேந்திரன். இவர் தனது வீட்டில் லாப்ரடார் இனத்தை சேர்ந்த 3 நாய்களை 5 ஆண்டுகளாக செல்லப் பிராணியாக பாசத்துடன் வளர்த்து வருகிறார்.

மூன்று நாய்களையும் இரவு காவலுக்காக வீட்டின் வளாகத்தில் கட்டிப் போடாமல் அவிழ்த்து விட்டிருப்பார். இரவு யாராவது வீட்டுக்கு வந்தாலோ அல்லது வழக்கத்துக்கு மாறான சத்தம் கேட்டாலோ அந்த நாய்கள் குரைக்க ஆரம்பித்துவிடும். 

நேற்று முன்தினம் இரவு 9.30 மணியளவில் நாகேந்திரனும், அவரது குடும்பத்தினரும் வழக்கம்போல் வீட்டில் தூங்க ஆயத்தமாகினர். அப்போது திடீரென இந்த மூன்று நாய்களும் வழக்கத்துக்கு மாறாக சற்று விநோதமான முறையில் குரைக்கத் தொடங்கின. நாகேந்திரன் மற்றும் அவரது குடும்பத்தினர் வெளியே ஓடி வந்து பார்த்தனர்.

அப்போது நான்கரை (4.5) அடி நீளமுள்ள நல்ல பாம்பு ஒன்று, வீட்டின் முன்புற வாசலில் நின்று படமெடுத்தப்படி நாய்களை பார்த்து சீறிக் கொண்டிருந்தது. அதிர்ச்சியடைந்த நாகேந்திரன் மற்றும் அவரது குடும்பத்தினர் செய்வதறியாது திகைத்து நின்றனர். மூன்று நாய்களும் பாம்பைச் சுற்றி நின்று அதனுடன் சண்டையிட ஆரம்பித்தன.

ஒரு கட்டத்தில், பாம்பு நாய்களுடன் ஈடு கொடுக்க முடியாமல் வீட்டுக்குள் நுழைய முயற்சித்தது. ஆனால், நாய்கள் துரத்திச் சென்று பாம்பை கடிக்க ஆரம்பித்தன. ஒரு நாய், பாம்பின் வால் பகுதியையும், மற்ற இரு நாய்களும் பாம்பின் தலைப் பகுதியையும் கடிக்கத் தொடங்கின. பதிலுக்கு பாம்பும் ஆக்ரோஷமாக நாய்களை கொத்தத் தொடங்கியது.

கடைசியில் நாய்களுடைய கடி தாங்க முடியாமல் நல்ல பாம்பு இறந்தே விட்டது. பாம்பு கடித்ததில் மூன்று நாய்களுக்கும் வாய், உடல் பகுதியில் காயங்கள் ஏற்பட்டன. அதனால், நாகேந்திரன் குடும்பத்தினர், கால்நடை மருத்துவருக்கு தகவல் அளித்தார். மருத்துவர் மெரில்ராஜ், தாமதம் செய்யாமல் நாகேந்திரன் வீட்டுக்கே சென்று பாம்பு கடித்ததால் விஷம் ஏறிய மூன்று நாய்களுக்கும் சிகிச்சை அளித்தார்.

இதில் ஒரு நாய் சிகிச்சை பலன் அளிக்காமல் இறந்தது. மற்ற இரு நாய்களும் அதிர்ஷ்ட வசமாக உயிர் பிழைத்தன. நாய்களுக்கும், சீறிய நல்லபாம்புக்கும் இடையேயான சண்டையை 15 நிமிடமாக கண் எதிரே பார்த்ததோடு அதில் ஒரு நாய் இறந்ததால் நாகேந்திரன், அவரது குடும்பத்தினர் அதிர்ச்சியும், சோகமும் அடைந்துள்ளனர்.

பாம்பு கடித்தால் என்னாகும்?

கால்நடை மருத்துவர் மெரில்ராஜ் கூறியதாவது: மனிதர்களாக இருந்தாலும், நாயாக இருந்தாலும் சரி, நல்ல பாம்பின் விஷம், கடிப்பட்ட இடத்தில் இருந்து உடனடியாக ரத்த ஒட்டத்தில் கலக்கும். 4 மணி நேரத்திற்குள் விஷத்தை முறிக்க சிகிச்சை அளித்தால் பிழைக்க வைக்கலாம். பாம்பு கடிப்பட்ட நாய்களுக்கு தகவல் கிடைத்த அரை மணி நேரத்திற்குள் சென்று சிகிச்சை அளித்தேன்.

இறந்த நாய்க்கு மூளைக்கு மிக அருகிலேயே தலைப்பகுதியில் பாம்பு கடித்திருந்தது. அதனால் காப்பாற்ற முடியவில்லை. மற்ற இரு நாய்களுக்கும் பாம்பு உடல்பகுதியில் கடித்திருந்தது. சிகிச்சைக்கு பிறகு அந்த இரு நாய்களும் தற்போது நலமுடன் உள்ளன. பாம்பு கடித்தால் நரம்பு மண்டலத்தை பாதிக்கும். கடிபட்ட இடத்தில் இருந்து ரத்தம் உறையாமல் வெளியேறிக் கொண்டு இருக்கும். சுவாசக்கோளாறு மற்றும் இதயதுடிப்பில் பாதிப்பை ஏற்படுத்தும். உடல் நடுக்கம், மூச்சு திணறல் ஏற்படலாம், ’’ என்றார். 

- ஒய். ஆண்டனி செல்வராஜ்

தொடர்புடைய செய்திகள்

 
 




Kalathin Vasanai - Kindle Edition


m7

d7

[X] Close