[X] Close

வைப்பாற்றில் தொடரும் மணல் கொள்ளை: ஒரே இரவில் 50 முதல் ஆயிரம் யூனிட் வரை சுரண்டல்


sand-mafia-vaipparu

கோப்புப் படம்

  • kamadenu
  • Posted: 31 May, 2018 11:27 am
  • அ+ அ-

வைப்பாற்றில் தொடரும் மணல் கொள்ளையை தடுத்து நிறுத்த வேண்டும். ஓர் இரவில் 50 முதல் ஆயிரம் யூனிட் வரை மணல் கொள்ளை நடப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

மேற்கு தொடர்ச்சி மலையில் உற்பத்தியாகும் வைப்பாறு தேனி, விருதுநகர் மாவட்டங்களை கடந்து தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் தாலுகா அயன் ராஜாபட்டியில் தொடங்கி, சக்கிலிபட்டி, கீழ்நாட்டுகுறிச்சி, முத்தலாபுரம், தாப்பாத்தி, நம்பிபுரம், ஆற்றங்கரை, சித்தவநாயக்கன்பட்டி, விளாத்திகுளம், பூசனூர், குளத்தூர், வைப்பாறு வழியாக கடலில் கலக்கிறது. இந்த ஆறு விளாத்திகுளம் சட்டப்பேரவை தொகுதியில் மட்டும் சுமார் 40 கி.மீ. தூரம் வரை பயணிக்கிறது.

ஆற்றங்கரையோரப்பகுதியில் சுமார் 5 ஆயிரம் ஏக்கர் தோட்டங்கள் இருந்தன. இதனால் இப்பகுதி பச்சை பட்டுடுத்தியது போல் செழிப்பாக காணப்படும். 

2003-ம் ஆண்டு வைப்பாற்றில் அயன்ராஜாபட்டியில் அரசு மணல் குவாரி அமைத்த பின்னர், பூசனூர் வரை மணலே இல்லாத நிலை காணப்படுகிறது. சித்தவநாயக்கன்பட்டியில் அந்த கிராம மக்கள் போராடியதால் மணல் தப்பியுள்ளது. இதனால் பச்சை பசேல் என இருந்த இடங்கள் அனைத்தும் தற்போது தரிசாகி கிடக்கின்றன. 

மணல் வழித்து அள்ளப்பட்டதால், பாசனம் மற்றும் குடிநீர் கிணறுகள் தண்ணீரின்றி காட்சியளிக்கின்றன. விவசாயிகளும் பிழைப்பு தேடி வேறு இடங்களுக்கு குடிபெயர்ந்துவருகின்றனர். 

தனியார் நிலங்களில் 

இதுகுறித்து அயன்வடமலாபுரம் ஊராட்சி முன்னாள் தலைவர் அ.வரதராஜன் கூறியதாவது: குவாரிகள் மூடப்பட்ட பின்னரும், அயன்ராஜாபட்டியில் இருந்து வைப்பாறு வரை ஆற்றில் மணல் கொள்ளை தங்கு தடையின்றி செழிப்பாக நடந்து வருகிறது. இதில் முத்தலாபுரம், தாப்பாத்தி, கீழ்நாட்டுகுறிச்சி ஆகிய பகுதிகளில் சராசரியாக ஒரு நாளுக்கு 50 யூனிட் முதல் ஆயிரம் யூனிட் மணல் சர்வசாதாரணமாக கொள்ளையடிக்கப்பட்டு வருகிறது.

அரசு அனுமதியின்றி கடத்தப்படும் இந்த மணல், 5 யூனிட் கொண்ட ஒரு லாரி ரூ.40 ஆயிரம் வரை விற்பனை செய்யப்படுகிறது. 

ஆற்றுப்படுகை அருகே உள்ள தனியார் நிலங்களில் 8 அடிக்கு கீழ் ஆற்று மணல் உள்ளது. தற்போது சவுடு மண் என்ற பெயரிலும், நிலங்கள் சீரமைப்பு என்ற பெயரிலும் அரசு அனுமதி பெற்று தனியார் நிலங்களில் மணல் அள்ளுவதற்கு கடும் முயற்சி எடுத்து வருகின்றனர்.

வைப்பாற்று ஆற்றுப்படுகையோர பாசன குளங்களில் இலவசமாக சரள் மண் எடுக்க அனுமதி பெற்று, தனியார் நிலங்களில் மணல் அள்ளி விற்பனை செய்ய ஏற்பாடு நடந்து கொண்டிருக்கிறது. அதற்கான கோப்புகள் மாவட்ட ஆட்சியரிடம் உள்ளன. இது முற்றிலும் நிராகரிக்கப்பட வேண்டும். 

இவ்வாறு அவர் கூறினார். 

தனிப்படை தேவை

விளாத்திகுளம் தாலுகா மார்க்சிஸ்ட் செயலாளர் புவிராஜ் கூறியதாவது: 

மணல் கடத்தல் தகவல் கிடைத்து, செல்லும் வருவாய்த்துறைக்கு காவல்துறை ஒத்துழைப்பு கொடுப்பதில்லை என புகார்கள் உள்ளன. திருநெல்வேலி மாவட்டம் விஜயநாராயணத்தில் காவலர் கொலை செய்யப்பட்டது போல், இப்பகுதியிலும் அசம்பாவிதங்கள் நடைபெற வாய்ப்பு உள்ளது.

விபரீதம் நடந்த பின் நடவடிக்கை எடுப்பதை கைவிட்டு, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஆற்று மணலை பாதுகாக்க, எட்டயபுரம், விளாத்திகுளம், குளத்தூர் ஆகிய காவல் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் ஆற்றங்கரையோரங்களில் காவல் சோதனைச்சாவடி அமைக்க வேண்டும். மணல் கடத்தலை தடுக்க தனிப்படை அமைக்க வேண்டும். 

உள்ளூர் தேவைக்கு மாட்டு வண்டியில் மணல் அள்ளி செல்பவரை பிடித்து வழக்கு பதிவு செய்யும் காவல்துறை, மாலத்தீவுக்கும், கேரளாவுக்கும் கடத்தப்படுவதை கண்டுகொள்வதில்லை. மணல் கடத்தலுக்கு துணை போகும் காவலர்களை இடமாறுதல் செய்ய வேண்டும். 

மாட்டு வண்டிகளில் மணல் அள்ள அனுமதி கொடுத்தால், லாரி, டிராக்டர்களில் மணல் கொள்ளையடிப்பது குறைந்துவிடும். மாட்டு வண்டி தொழிலாளர்களுக்கும் வேலை வாய்ப்பு கிடைக்கும். மணல் கிடைக்காமல் நலிவடைந்து வரும் கட்டுமான தொழிலும் சீரடையும், என்றார் அவர்.

அபராதம் அதிகரிக்கப்படுமா

மணல் லாரியை பிடித்தால் வருவாய்த்துறை சார்பில் ரூ.25 ஆயிரம் மட்டுமே அபராதம் விதிக்கப்படுகிறது. இதனால், அவர்கள் ரூ.25 ஆயிரம் அபராத தொகையை கட்டி விட்டு, அதே மணலை ரூ.40 ஆயிரத்துக்கு விற்பனை செய்து விடுகின்றனர்.

இந்த அபராத தொகை 20 வருடங்களுக்கு முன் ஒரு லாரி மணல் ரூ.5 ஆயிரத்துக்கு விற்பனை செய்தபோது விதிக்கப்பட்டது. தற்போது, ஒரு லாரி மணல் ரூ.40 ஆயிரம் என்பதால், அதனை 5 மடங்கு அதிகமாக ரூ.2 லட்சம் வரை அபராதம் விதிக்க வேண்டும்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close