[X] Close

தாமிரபரணி ஆற்றில் ஆலைக் கழிவு கலப்பதால் அபாயம்: கருப்பந்துறையில் பாலம் அருகே அவலம்


tamirabarani-pollution

திருநெல்வேலி அருகே கருப்பந்துறை பாலம் அருகே தாமிரபரணியுடன் இதுவரை வீடுகளின் கழிவுநீர்தான் கலந்து கொண்டிருந்தது. தற்போது, நுரை கக்கியபடி ஆலைக் கழிவும் சேர்ந்து ஆற்றை பாழ்படுத்துகிறது | படம்: மு.லெட்சுமி அருண்

  • kamadenu
  • Posted: 31 May, 2018 11:22 am
  • அ+ அ-

திருநெல்வேலி கருப்பந்துறையில் ஆற்றுப்பாலத்தின் அருகே தாமிரபரணி ஆற்றில், ஆலைக்கழிவு நேரடியாக கலக்கிறது. நுரை தள்ளியபடி பாய்ந்தோடிவரும் இந்த கழிவுநீர் ஆற்றில் கலப்பதால் குளிப்பவர்களுக்கு பல்வேறு நோய் தொற்றுகள் ஏற்படுகின்றன.

தாமிரபரணி தனது பாதையில் கடக்கும் பெரிய நகரம் திருநெல்வேலி. தனது பாதையில் கடந்துவரும் அனைத்து நகரங்களையும் விட அதிகமான கழிவுகளை திருநெல்வேலியில்தான் அது சுமக்கிறது. திருநெல்வேலியில் கருப்பந்துறை முதல் வெள்ளக்கோயில் வரை 27 இடங்களில் ஆற்றில் சாக்கடை கலப்பதாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தெரிவிக்கிறார்கள். திருநெல்வேலியில் ஆட்சியர் அலுவலகம் அருகே ஆற்றங்கரை திறந்தவெளி கழிப்பிடமாக காட்சியளிக்கிறது.

வண்ணார்பேட்டையில் அரசுப் போக்குவரத்து கழக பணிமனையிலிருந்து ஆயில் கழிவுகள் அப்படியே ஆற்றுக்குள் திறந்துவிடப்படுகின்றன. திருநெல்வேலி சந்திப்பிலுள்ள அனைத்து கடைகள், தங்கும் விடுதிகளின் கழிவுகள் சிந்துபூந்துறையில் ஆற்றுக்குள் விடப்படுகின்றன. திருநெல்வேலியில் மட்டும் 1 நிமிடத்துக்கு 11 லட்சம் லிட்டர் கழிவு நீர் தாமிரபரணியில் கலப்பதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. 

நுரையுடன் கழிவு நீர்

கருப்பந்துறை ஆற்றுப்பாலத்தின் அருகே சாக்கடை கழிவு நேரடியாக ஆற்றில் கலக்கிறது. இந்த சாக்கடையில் ஒருவித நுரையுடன் ஆலைக்கழிவும் சேர்ந்து வருகிறது. 

இப்பகுதியில் இயங்கும் ஏதோ ஒரு ஆலையில் இருந்து வெளியேறும் கழிவு நீர் தான் இவ்வாறு நுரையைத் தள்ளுகிறது என, இப்பகு பொதுமக்கள் புகார் கூறியதால், அதிகாரிகள் பலமுறை ஆய்வு செய்து சென்றுள்ளனர். ஆனால், ஆற்றுக்குள் கழிவுநீர் கலப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்கவில்லை என்று இப்பகுதி மக்கள் தெரிவித்தனர். சாக்கடை கலந்த தண்ணீரில் குளிப்பதால் சொரி, சிரங்கு, படை போன்ற நோய் தொற்றுக்கு மக்கள் ஆளாகியுள்ளதாகவும் அவர்கள் கூறுகிறார் கள்.

பாதாள சாக்கடை திட்டம்

திருநெல்வேலி மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்டம் அரைகுறையாக இருப்பதுதான் தாமிரபரணியில் சாக்கடை நேரடியாக கலப்பதற்கான காரணமாக மாநகராட்சி நிர்வாகத்தால் சொல்லப்படுகிறது. 

மாநகரில் பாதாள சாக்கடை திட்டத்தில் இதுவரை 30 சதவிகிதம் பகுதிகள் சேர்க்கப்பட்டிருக்கின்றன. மீதமுள்ள 70 சதவிகித குடியிருப்புகளுக்கு 2 கட்டங்களாக பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது.

 அதில் முதல்கட்டமாக திருநெல்வேலி டவுன், தச்சநல்லூர் உள்ளிட்ட 35 சதவீத பகுதிகளுக்கு பாதாள சாக்கடை திட்டப்பணிகள் ரூ.292 கோடியில் செயல்படுத்தப்படவுள்ளது. இதற்கான நிர்வாக அனுமதி பெறப்படும் நிலை இருக்கிறது.

இதன் தொடர்ச்சியாக, 2-ம் கட்டமாக 35 சதவீத இடங்களுக்கான பணி ரூ.400 கோடியில் செயல்படுத்தப்படவுள்ளது. இந்த பணிகளுக்கு மத்திய, மாநில அரசுகள் மானியம் வழங்குகின்றன. 35 சதவீத முதற்கட்ட பணிகளுக்கு ஒப்பந்தப்புள்ளி கோரி, பணி ஆணை வழங்கப்பட்டதிலிருந்து 18 மாதங்களில் பணிகளை முடிக்க வேண்டும். 

இதன்மூலம் 1.54 லட்சம் வீடுகளுக்கு பாதாள சாக்கடை இணைப்பு கிடைக்கும். இந்த பணிகளை முடித்தால் தாமிரபரணியில் கழிவுகள் சேர்வது முற்றிலும் தடுக்கப்பட்டுவிடும் என்று மாநகராட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

எனினும், இதற்கு முன்னதாக, நுரை கக்கியபடி சாக்கடை கழிவு நீர் கலப்பதை உரிய ஆய்வு செய்து தடை செய்ய வேண்டும்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close