[X] Close

யார் நீங்க?- ரஜினியைப் பார்த்து கேள்வி எழுப்பிய இளைஞர்; ட்விட்டரில் ட்ரெண்டாகும் #நான்தான்பாரஜினிகாந்த் 


youth-snubs-rajinikanth

  • பாரதி ஆனந்த்
  • Posted: 30 May, 2018 15:39 pm
  • அ+ அ-

தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் பாதிக்கப்பட்டவர்களை நேரில் காண சென்ற நடிகர் ரஜினிகாந்தைப் பார்த்து இளைஞர் ஒருவர் யார் நீங்கள் என கேட்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதனையடுத்து ட்விட்டரில் #நான்தான்பாரஜினிகாந்த் என்ற ஹேஷ்டேக் ட்ரெண்டாகி வருகிறது.

ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத்தின் 100-வது நாளன்று போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. இந்தத் துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் பலியாகினர்.
ஏராளமானோர் காயமடைந்தனர். இந்நிலையில், இன்று நடிகர் ரஜினிகாந்த், தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் பாதிக்கப்பட்டவர்களை மருத்துவமனையில் சந்தித்து ஆறுதல் கூறினார். 
மருத்துவமனையில் இளைஞர் ஒருவரின் தோளைப்பிடித்து ஆறுதல் கூற முற்படும் ரஜினியைப் பார்த்து அந்த இளைஞர் யார் நீங்கள் எனக் கேட்கிருக்கிறார். அதற்கு சிறிய பதற்றத்துடன் ரஜினிகாந்த் தன்னைத்தானே நான்..நான்தான் ரஜினி என அறிமுகப்படுத்துகிறார். இன்னிக்குதான் தெரியுதா? நீங்கதான் ரஜினிகாந்துன்னு தெரியாம கேட்கல  என அந்த இளைஞர் கூற.. அங்கிருந்து கும்பிடுபோட்டு நகர்ந்து செல்கிறார் ரஜினி.

தமிழ்த் திரையுலகின் சூப்பர்ஸ்டாரான ரஜினிகாந்த்தைப் பார்த்து இதுவரை யாரும் இப்படியொரு கேள்வியை எழுப்பியிருக்க மாட்டார்கள். அந்த இளைஞர் எதற்காக அப்படிக் கேட்டார் என்பதன் பின்புலம் தெரியவில்லை. ஆனால், யார் நீங்கள்? எனக் கேட்கும் நிலையில்தான் நீங்கள் இன்னும் இருக்கிறீர்கள் ரஜினி என்ற பாணியில் சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் ரஜினி குறித்து கருத்து தெரிவித்து வருகின்றனர்.

"சூப்பர் ஸ்டாரு யாருன்னு கேட்டா"
சின்னக் குழந்தையும் சொல்லும்'னு.....
சொன்ன உங்களைப் பார்த்து 'யாரு நீங்க'னு கேட்டுட்டானே!
அய்யகோ..."

என்ற பாணியில் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர். இந்நிலையில் ட்விட்டரில் சென்னை அளவில் #நான்தான்பாரஜினிகாந்த் ட்ரெண்டாகி வருகிறது.

முன்னதாக காலையில் ரஜினிகாந்த் தனது வீட்டில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது தூத்துக்குடி மக்கள் என்னைப் பார்த்து மகிழ்ச்சி அடைவார்கள் எனக் கூறியிருந்தார். அதற்கும் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். உயிரிழந்தவர்களின் உறவுகளையும் காயமடைந்தவர்களையும் சந்திக்கச் செல்லும் நீங்கள் தூத்துக்குடி மக்கள் மகிழ்ச்சியடைவார்கள் என இடம், பொருள், ஏவல் தெரியாமல் பேசலாமா என கலாய்த்து வருகின்றனர்.

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close