[X] Close

ஆளுநர் மாளிகைக்கு சில நாட்களாக அரசின் எந்த ஒரு கோப்பும் வரவில்லை: கிரண்பேடி


  • kamadenu
  • Posted: 18 May, 2019 09:00 am
  • அ+ அ-

புதுச்சேரி ஆளுநர் மாளிகைக்கு கடந்த சில நாட்களாக அரசின் எந்த ஒரு கோப்பும் வரவில்லை; இதை துணைநிலை ஆளுநர் மற்றும் நிர்வாகி என்ற முறையில் மக்களுக்கு தெரிவிக்க வேண்டியது எனது கடமை என்று ஆளுநர் கிரண்பேடி தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி ஆளுநர் கிரண்பேடிக்கும், முதல்வர் நாராயணசாமி தலைமை யிலான அமைச்சரவைக்கும் கடந்த 3 ஆண்டுகளாக அதிகார மோதல் நீடித்து வருகிறது.

இந்நிலையில் துணைநிலை ஆளுநர் கிரண்பேடியின் தன்னிச்சையான நடவடிக் கைகள் குறித்து சென்னை உயர் நீதிமன்றத்தில் காங்கிரஸ் எம்எல்ஏ லட்சுமிநாராயணன் தொடர்ந்த வழக்கில்,புதுச்சேரி யூனியன் பிரதேச அரசின் அன்றாட நடவடிக்கைகளில் தலையீடு செய்யும் அதிகாரம் துணைநிலை ஆளுநர் கிரண்பேடிக்கு இல்லை. இது தொடர்பாக ஆளுநருக்கு அதிகாரம் வழங்கி மத்திய அரசு பிறப்பித்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது என்று உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

இந்த தீர்ப்பை எதிர்த்தும், அதற்கு இடைக்கால தடை விதிக்கக் கோரியும் மத்திய உள்துறை அமைச்சகம் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. ஆனால் சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்க மறுப்பு தெரிவித்து வழக்கை ஒத்தி வைப்பதாக உச்சநீதிமன்றம் கூறிவிட்டது.

அதைத்தொடர்ந்து, அரசு நிர்வாகத்தில் தலையிடக் கூடாது என உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய பிறகும், தொடர்ந்து நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் ஆளுநர் கிரண்பேடி செயல்பட்டு வருகிறார். அதனால் அவர் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை சந்திக்க நேரிடும் என்று முதல்வர் நாராயணசாமி எச்சரிக்கை விடுத்தார்.

அதேபோல் நீதிமன்ற உத்தரவை பின்பற்ற வேண்டும். அதை மீறி செயல்பட்டால் அது நீதிமன்ற அவமதிப்பாகும் என்று தலைமை செயலர் உள்ளிட்ட அனைத்துத் துறை செயலர்களுக்கும் முதல்வரின் பாராளுமன்ற செயலரும், எம்எல்ஏவுமான லட்சுமிநாராயணன் கடிதம் ஒன்றை அனுப்பியிருந்தார்.

அந்த கடிதத்தை வாட்ஸ்அப்பில் பகிர்ந்து தனது கருத்தை பதிவிட்டுள்ள துணைநிலை ஆளுநர் கிரண்பேடி, “நிர்வாகம் என்பது மக்களுக்கானது. கடந்த சில நாட்களாக அரசின் எந்த ஒரு கோப்பும் ஆளுநர் மாளிகைக்கு வரவில்லை. புதுச்சேரி மாநிலத்தின் துணைநிலை ஆளுநர் மற்றும் நிர்வாகி என்ற முறையில் இதை மக்களுக்கு தெரிவிக்க வேண்டியது எனது கடமை.

யூனியன் பிரதேசத்தின் சட்ட விதிகள், வணிக விதிகள் மற்றும் நிதி விதிகளில் எந்த ஒரு மாற்றமும் கொண்டுவரப்படவில்லை. தற்போது வரை அதில் எந்த மாற்றமும் இல்லை’’ என்று குறிப்பிட்டிருக்கிறார்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close