[X] Close

அலங்காநல்லூர் மாடுபிடி வீரருக்கு அமெரிக்காவில் பாராட்டு விழா: பாஸ்போர்ட் எடுக்க காமராசர் பல்கலை. ஏற்பாடு


  • kamadenu
  • Posted: 18 May, 2019 09:04 am
  • அ+ அ-

-என்.சன்னாசி

மதுரை அலங்காநல்லூர் மாடுபிடி வீரருக்கு அமெரிக்காவில் உள்ள சிக்காக்கோ நகரில் பாராட்டு விழா நடத்தப்படுகிறது. இதற்காக அவர் விரைவில் வெளிநாடு செல்கிறார்.

அமெரிக்காவில் உள்ள டெக்சாஸ் பல்கலைக்கழகத்தின் ஹூஸ்டன் தமிழ் ஆய்வுகள் இருக்கையின் ஆலோசகர் பாலச்சந்திரன் தலைமையிலான குழுவினர் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு விழாவை கடந்த முறை நேரில் பார்த்தனர். இதில் 23 காளைகளை அடுத்தடுத்து அடக்கிய அலங்காநல்லூரைச் சேர்ந்த மாடுபிடி வீரர் ராம்குமார் (எ) ரஞ்சித் முதல் பரிசை பெற்றார். இவரை டெக்சாஸ் பல்கலைக் கழகக் குழுவினர் நேரில் பாராட் டினர். இருப்பினும் தமிழரின் வீரத்தைப் பறைசாற்றும் வகையில் அவரது திறமையைப் பாராட்டி, அவர் சொந்தமாக தொழில் ஆரம்பிக்கும் விதமாக ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள பசு மாடு ஒன்றை வழங்க ஹூஸ்டன் தமிழ் ஆய்வுகள் இருக்கை நிர்வாகம் திட்ட மிட்டது. இதற்கான ஏற்பாடுகளை மதுரை காமராசர் பல்கலைக்கழகத் துணைவேந்தர் எம். கிருஷ்ணன் மற்றும் தமிழ்த் துறைப் பேராசிரியர் சத்யமூர்த்தி உள்ளிட்டோர் செய்தனர். இதன்படி, அண்மையில் அலங்காநல்லூரில் பாராட்டு விழா நடந்தது. இதில் ராம்குமாருக்கு பசு மாடு வழங்கப்பட்டது.

இதன் தொடர்ச்சியாக ராம்குமாரை ‘சிக்காக்கோ நகருக்கு நேரில் அழைத்து, பாராட்டுவது என்று முடிவெடுக் கப்பட்டுள்ளது. விரைவில் அங்கு நடக்கவிருக்கும் உலகத் தமிழ் மாநாட்டில் அவர் பங்கேற்கிறார். இதற்காக அவருக்கு பாஸ்போர்ட் எடுக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பேராசிரியர் சத்தியமூர்த்தி, டெக்சாஸ் பல்கலைக்கழக தமிழ் ஆய்வுகள் இருக்கை ஆலோசகர் பாலச்சந்திரன் ஆகியோர் முயற்சி எடுத்துள்ளனர். அவருக்கு பாஸ்போர்ட் கேட்டு மதுரை மண்டல பாஸ்போர்ட் அதிகாரி அருண் பிரசாத்திடம் மனு கொடுக்கப்பட்டுள்ளது. மதுரை அலங்காநல்லூரைச் சேர்ந்த ஜல்லிக்கட்டு வீரர் ஒருவர் வெளிநாட்டில் கவுரவிக்கப்பட உள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது எனக் கூறிய பாஸ்போர்ட் மண்டல அதிகாரி, ராம்குமாருக்கு விரைவில் பாஸ்போர்ட் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்துள்ளார்.

சத்தியமூர்த்தி கூறுகையில், நமது தமிழரின் ஏர் தழுவுதல் வீரத்தை டெக்சாஸ் பல்கலைக் கழகத் தமிழ் இருக்கைக் குழுவினர் நேரில் பார்த்து வியந்தனர். ராம்குமார் உயிரையும் துச்சமாக நினைத்து, அதிக ஜல்லிக்கட்டு காளைகளை அடக்கியது கண்டு, அவருக்கு அங்கீகாரம் அளிக்கத் திட்டமிட்டனர். இதற்காக அவரை அமெரிக்காவுக்கு நேரில் அழைத்துப் பாராட்டுவதற்காக நடவடிக்கை எடுத்துள்ளனர். ராம்குமார் விரைவில் வெளிநாடு செல்ல இருக்கிறார். காமராசர் பல்கலைக்கழக ஒத்துழைப்போடு அதற்கான முயற்சியை மேற்கொண்டுள்ளோம் என்றார்.

வாக்களிக்கலாம் வாங்க

'லிசா உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close