[X] Close

உடன்குடி அருகே தீதத்தாபுரத்தில் கம்பு படிக்கட்டுகள் அமைத்து பனையேறும் தொழிலாளி: குமரி அனந்தன் நேரில் பாராட்டு


  • kamadenu
  • Posted: 18 May, 2019 08:54 am
  • அ+ அ-

-ரெ.ஜாய்சன்

தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி பகுதியை சேர்ந்த பனையேறும் தொழிலாளி முருகராஜ், பனை மரங்களில் கம்புகளை படிக்கட்டுகள் போல் கட்டி வைத்து, அதன் வழியாகஏறி பதநீர் இறக்கி வருகிறார்.

இதுபற்றி அறிந்த குமரி அனந்தன் அவரை நேரில் சந்தித்து பாராட்டினார்.

தமிழகத்தில் பனைத் தொழில் நலிவடைந்து வருகிறது. பனை யேறும் தொழிலாளர்கள் எண்ணி க்கை குறைந்து வருவதே இதற்கு காரணம்.

பனை மரத்தில் ஏறும் போது மார்பு பகுதியில் சிராய்ப்பு ஏற்படும். மேலும், பனை ஏறும் போது தவறி விழும் பட்சத்தில் உயிரிழப்பு நிகழ வாய்ப்பு அதிகம் என்பதால் இளையதலைமுறையினர் இத்தொழிலில் ஈடுபட தயங்குகின்றனர்.

இந்த நிலையில் உடன்குடி அருகேயுள்ள தீதத்தாபுரத்தை சேர்ந்த பனைத் தொழிலாளி கே.முருகராஜ் (47) என்பவர் வித்தியாசமான முறையில் பனையேறும் தொழிலில் ஈடுபட்டு வருகிறார்.

அதாவது பனை மரங்களில் கம்புகளை கயிறு கொண்டு, படிக்கட்டுகள் போல கட்டி வைத்துள்ளார். பார்ப்பதற்கு நூல் ஏணி போல் காணப்படும் இதன் மூலம் காலையும், மாலையும் பனை மரங்களில் எளிதாக ஏறி, பதநீர் இறக்கி வருகிறார்.

இது குறித்து முருகராஜ் கூறும்போது, ‘‘ஓரு பனை மரத்தில் கம்பு வைத்து கயிறு மூலம் கட்டுவதற்கு ரூ.350 செலவாகிறது. இந்த முறையில் பனை மரம் ஏறுவது மிகவும் எளிதாக உள்ளது.

ஆண்டுக்கு நான்கு முதல் ஐந்து மாதங்கள் மட்டுமே பதநீர் பருவ காலம். மீதமுள்ள மாதங்களில் ஏதாவது கூலி வேலைக்கு செல்வேன். பனைத் தொழிலை மேம்படுத்த அரசு உதவ வேண்டும்’’ என்றார்.

வித்தியாசமான முறையில் முருகராஜ் பனை ஏறுவது குறித்து தகவல் அறிந்த தமிழ்நாடு காந்தி பேரவை தலைவர் குமரி அனந்தன், தீதத்தாபுரம் பகுதியிலுள்ள பனங்காட்டுக்கு வந்து, அவரை நேரில் சந்தித்து பாராட்டினார். மேலும், பனைத் தொழிலில் உள்ள சிரமங்கள் குறித்து அவரிடம் கேட்டறிந்தார்.

கருவி கண்டுபிடிப்பு

பின்னர் குமரி அனந்தன் கூறும்போது, ‘‘கோவை வேளாண் பல்கலைக்கழகம் மூலம் பனை மரம் ஏறுவதற்கு எளிதான நவீன கருவி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த கருவியின் விலை ரூ.7,500 என நிர்ணயிக்கப்பட்டு இருந்தது. எனது கோரிக்கையை ஏற்று தற்போது ரூ. 5000-ஆக குறைத்துள்ளார்கள். இந்த கருவியை பனை ஏறும் தொழிலாளர்கள் வாங்கி பயன்படுத்தலாம்.

இலங்கை அரசு பனைத் தொழிலுக்கு மிகவும் ஆதரவாக உள்ளது. அங்கு பதநீர் டின்களில் அடைத்து விற்கப்படுகிறது. மேலும், நுங்கு பதப்படுத்தபட்டு வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.

தமிழக அரசு பனைத்தொழிலை ஊக்கப்படுத்தும் வகையில் நுங்கு, பதநீர் ஆகியவற்றை மாணவர்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பதநீரை டின்களில் அடைத்து விற்க பெரிய அளவில் தொழிற்கூடம் அமைக்க வேண்டும்.

இதன் மூலம் பனைதொழில் புத்துயிர் பெறுவதோடு, மக்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். பனை ஏறும் நவீன கருவியை அரசு இலவசமாக தொழிலாளர்களுக்கு வழங்குவதுடன், அவர்களுக்கு கடன் உதவியும் வழங்க வேண்டும். இது தொடர்பாக தமிழக முதல்வரை நேரில் சந்தித்து வலியுறுத்துவேன் என்றார்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close