புத்தகக் காதலர் ஆர்.ஏ.புரம் கோவிந்தராஜு

சென்னை ஆர்.ஏ.புரத்தைச் சேர்ந்தவர் எஸ்.ஏ.கோவிந்தராஜூ. பெரும்பாலும் அவர் வீட்டில் இருக்கமாட்டார். காரணம் புத்தகங்களின் மீதான அவரது ஆழமான காதல். அதனாலேயே தென் இந்தியாவின் இரண்டாவது மிகப் பெரிய பழைய புத்தகக் கடையின் உரிமையாளர் என்ற பெருமையை தன்வசப்படுத்திக் கொண்டிருக்கிறார்.
கடைக்குப் பெயர் என்ன தெரியுமா? ரேர் புக்ஸ் (Rare Books) தமிழில் 'அரிய புத்தகங்கள்' என்று பொருள்.
82 வயதான கோவிந்தராஜ் தனது புத்தகக் கடையைப் பற்றிப் பேசும்போது மட்டும் குழந்தைபோல் துள்ளல் பெற்றுவிட்டார்.
"எனக்கு 24 வயதிருக்கும் போதிருந்தே நான் புத்தகங்களை சேகரிக்கத்தொடங்கிவிட்டேன். சிறுகச்சிறுகச் சேகரித்து 10,000 புத்தகங்களை சேர்த்தேன். அவற்றில் பெரும்பாலனவை பென்குயின் பதிப்பாளர்களின் பதிப்புகள். 8 ஆண்டுகளுக்கு முன் அத்தனையும் விற்றுத் தீர்ந்தன.
ஓய்ந்துவிடவில்லை. மீண்டும் புத்தகங்களை சேகரிக்கத் தொடங்கினேன். ஏனென்றால், புத்தகங்கள் இல்லாமல் என்னால் இருக்க முடியாது.
இதற்கெல்லாம் காரணகர்த்தா என் தந்தை. அவர் அப்படி ஒரு தீவிர வாசிப்பாளர். அவரும் புத்தகங்களை சேகரித்துவந்தார். ஒருநாள் அவர் என்னிடம், "ஒவ்வொருவரும் குழந்தைகளுக்கு ஏதாவது சொத்து சேர்த்துவைப்பார்கள். ஆனால், என்னால் முடியாது. ஆனால், நீ நான் தரும் புத்தகங்களை சேர்த்துவை. ஒருநாள் அது உனக்கு உதவியாக இருக்கும்" என்றார். அந்த வார்த்தைகள் அத்தனை நிதர்சனமானவை. இன்று, அந்தப் புத்தகங்கள்தான் இன்று என்னை உயிர்ப்புடன் வைத்திருக்கிறது.
என்னிடம் உள்ள புத்தகங்களிலேயே நான் பொக்கிஷமாகக் கருதுவது காந்தியைப் பற்றிய படைப்புகளையும் காந்தியின் படைப்புகளையும். ஹரிஜன் பத்திரிகையின் ஒரு சில பிரதிகளைக்கூட பாதுகாத்து வைத்திருக்கிறேன். இவை தவிர நேரு, பெர்னார்ட் ஷா புத்தகங்களையும் வைத்திருக்கிறேன்" என்றார்.
இ -புக் பற்றிய கேள்விக்கு, "வாசிப்பது என்று வந்துவிட்டால் அதில் வடிவம் என்னவாக இருந்தால் என்ன? எல்லாமே இனிமைதான். தனிப்பட்ட முறையில் எனக்கு கையில் புத்தகங்களை ஏந்திப் பிடித்து வாசிக்க மிகவும் பிரியம்" என்றார்.
அத்துடன் நின்றுவிடவில்லை, இந்தச் செய்தியைப் படிப்பவர்கள் யாரேனும் 50 வருடங்களுக்கு முந்தைய புத்தகங்களை வைத்திருது அவற்றை விற்க விரும்பினால் அவற்றை 9941132756 என்ற எண்ணில் தொடர்புகொண்டு விற்பனை செய்யலாம்" என்றார்.