[X] Close

சென்னையின் சிறப்பை உலகறியச் செய்தவர் முத்தையா: நினைவஞ்சலி கூட்டத்தில் புகழாரம்


  • kamadenu
  • Posted: 18 May, 2019 07:31 am
  • அ+ அ-

சென்னையின் சிறப்பை உலகறியச்செய்தவர் எஸ்.முத்தையா என்று சென்னையில் நடந்தநினைவஞ்சலி கூட்டத்தில் புகழாரம் சூட்டப்பட்டது.

பத்திரிகையாளரும், வரலாற்றுஆய்வாளருமான எஸ்.முத்தையாகடந்த ஏப்ரல் 20-ம் தேதி காலமானார். அவருக்கு நினைவஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி, சென்னை ஹெரிட்டேஜ் அமைப்பு சார்பில் சென்னையில் நேற்று நடந்தது.

இதில் ‘இந்து’ என்.ராம் பேசியதாவது:சென்னை நகரின் பாரம்பரியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தியவர் எஸ்.முத்தையா. சென்னையின் பாரம்பரியத்தை பாதுகாப்பதற்கான முயற்சியில் அவரது பணி பாராட்டுக்குரியது. அடிப்படையில் அவர் பத்திரிகையாளர். ஆனால், வரலாற்றில் அவருக்கு மிகுந்த ஆர்வமும், ஈடுபாடும் இருந்தது.

முன்பு சென்னை நகரின் வரலாற்றுச் சிறப்புகளும், நகரின் பாரம்பரியமும் யாருக்கும் அவ்வளவாக தெரியாது. அவற்றை எல்லாம் வெளிக்கொணர்ந்து, உலகறியச் செய்தவர் முத்தையாதான். சென்னை நகரின் வரலாறு, பாரம்பரியம் குறித்து ஏராளமான கட்டுரைகள் எழுதியுள்ளார். சென்னை நகரின் பாரம்பரியம் குறித்து ‘தி இந்து’வில் 1999 முதல் தொடர்ந்து கட்டுரைகள் எழுதிவந்தார்.

இவ்வாறு அவர் கூறினார்.

அமெரிக்க துணை தூதர் ராபர்ட்பர்ஜெஸ் பேசும்போது, ‘‘முத்தையா எழுதிய புத்தகங்கள், அவரது கட்டுரைகள் வாயிலாக சென்னை நகரின் பாரம்பரியத்தையும், சிறப்புகளையும் அறிய முடிந்தது. சென்னை நகரின் பாரம்பரியத்தை பாதுகாப்பதில் முத்தையா மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தார்’’ என்றார். சன்மார் குழுமத் தலைவர் என்.சங்கர், முருகப்பா குழும செயல் தலைவர் எம்.எம்.முருகப்பன், ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரி கேப்டன் டி.பி.ராமச்சந்திரன், பத்திரிகையாளர் சுசீலா ரவீந்திரநாத், ஓவியர் மனோகர் தேவதாஸ் ஆகியோரும் முத்தையாவின் நினைவுகளை பகிர்ந்துகொண்டனர். எஸ்.முத்தையாவின் மகள்கள் ரஞ்சனி, பார்வதி மற்றும் ‘மெட்ராஸ் மியூசிங்ஸ்’ இதழின் ஆசிரியர் வி.ஸ்ரீராம் ஆகியோரும் முத்தையாவின் நினைவுகளை பகிர்ந்துகொண்டு, நிகழ்ச்சியில் கலந்துகொண்டவர்களுக்கு நன்றி தெரிவித்தனர்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close