[X] Close

மொழியால் ஏற்படும் குளறுபடிகளை தவிர்க்க பணி நியமனத்தில் அந்தந்த மாநிலத்தவருக்கு ரயில்வே துறை முன்னுரிமை அளிக்குமா?- அறிவிப்புகள் புரியாமல் பயணிகள் அவதி


  • kamadenu
  • Posted: 18 May, 2019 07:26 am
  • அ+ அ-

மொழிகளால் ஏற்படும் குளறுபடிகளை தவிர்க்க ரயில்வே ஊழியர்கள் நியமனத்தில் அந்தந்த மாநில இளைஞர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.

தெற்கு ரயில்வேயில் சுமார் ஒருலட்சம் பேர் பணியாற்றி வருகின்றனர். இதில், 25 சதவீதத்துக்கும் மேற்பட்டோர் வடமாநிலங்களை சேர்ந்தவர்களாக உள்ளனர் குறிப்பாக ரயில்கள் இயக்கம், சிக்னல் உள்ளிட்ட பணிகளை கவனிக்கும் மொத்தமுள்ள 3,197 ரயில் நிலைய மேலாளர்களில் 60 சதவீதத்துக்கும் மேற்பட்டோர் வடமாநிலங்களை சேர்ந்தவர்களாக இருக்கின்றனர்.

மதுரை ரயில்வே கோட்டத்தில் கடந்த மே 9-ம் தேதி திருமங்கலம் ரயில் நிலையத்தில் இருந்து செங்கோட்டை பயணிகள் ரயில் கள்ளிக்குடி நோக்கியும், கள்ளிக்குடி ரயில் நிலையத்தில் இருந்து மதுரை பயணிகள் ரயில் திருமங்கலம் நோக்கியும் ஒரே நேரத்தில் புறப்படஅனுமதி அளிக்கப்பட்டது. இந்த இரண்டு ரயில்களும் ஒரே தண்டவாளத்தில் எதிரெதிரே வந்தன. கடைசி நேரத்தில் இந்த ரயில்கள் நிறுத்தப்பட்டதால் பெரும் விபத்துதவிர்க்கப்பட்டது. ஒருவர் இந்தியிலும், மற்றொருவர் ஆங்கிலத்திலும் தகவல்கள் பரிமாறிக் கொண்டதும், ஒருவர் பேசியது மற்றொருவருக்கு புரியாமல் இருந்ததும் விபத்துக்கு காரணம் என்று கண்டறிப்பட்டது. இதுதொடர்பாக இவர்கள் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

ரயில் நிலையங்களில் அறிவிப்பு வெளியிடும்போது ஆங்கிலம் தெரிந்தவர்கள் ஆங்கிலத்தில் அறிவிப்பை புரிந்து கொண்டு பயணம் செய்கின்றனர். ஆனால், தமிழ் மட்டுமே தெரிந்த பயணிகள் அறிவிப்புகள் புரியாமல் அவதிப்படுகின்றனர்.

இது குறித்து டிஆர்இயு (தட்சிணரயில்வே எம்ப்ளாயிஸ் யூனியன்) துணைப் பொதுச் செயலாளர் மனோகரன் கூறும்போது, “ரயில்வே பணிக்கு வட மாநிலங்களை சேர்ந்தவர்கள் இந்தி மொழியில் ரயில்வே தேர்வாணைய தேர்வுகளை எழுதி வெற்றி பெறுகிறார்கள். ஆங்கில வழியில் கல்வி கற்றவர்கள் குறைவு. ரயில்வே வேலையில் அந்தந்த மாநிலத்தை சேர்ந்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். மேலும்,மற்ற மாநில ரயில்வே பணிகளுக்குவிண்ணப்பிக்க விரும்புகிறவர்களுக்கு ஆங்கில தகுதி தேர்வு ஒன்றை உருவாக்க வேண்டும். அதில்வெற்றி பெறுபவர்கள் மட்டுமே மற்ற மாநிலங்களுக்கு விண்ணப்பிக்க அனுமதிக்க வேண்டும்” என்றார்.

இதுதொடர்பாக ரயில்வே அதிகாரிகள் கூறும்போது, “ரயில்வேத் துறை என்பது அனைத்து மாநிலங்களுக்கும் பொதுவானது. சில மாநிலங்களில் தேவையான ஊழியர்கள், தொழிலாளர்கள் கிடைக்காதபோது மற்ற மாநிலங்களில் இருந்து வந்து வேலைவாய்ப்புகளை பெறுகிறார்கள். மேலும், தேர்வுகள் மூலம் தகுதியின் அடிப்படையில்தான் அவர்கள் பணிக்கு தேர்வு செய்யப்படுகிறார்கள். ரயில்வே பணியில்அந்தந்த மாநிலத்தை சேர்ந்தவர்களுக்கு முன்னுரிமை அளிப்பது குறித்து ரயில்வே வாரியம் தான் முடிவு செய்ய வேண்டும்’’ என்றனர்.

வாக்களிக்கலாம் வாங்க

'லிசா உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close