[X] Close

தமிழகத்தில் 19 சதவீத கொய்மலர்கள் உற்பத்தி: உதகை மலர்க் கண்காட்சியை தொடக்கிவைத்து ஆளுநர் தகவல்


19

  • kamadenu
  • Posted: 18 May, 2019 07:25 am
  • அ+ அ-

தேசிய அளவில் தமிழகத்தில் 19% கொய்மலர்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன என்று ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தெரிவித்தார்.

நீலகிரி மாவட்டம் உதகை அரசு தாவரவியல் பூங்காவில் 123-வது மலர்க் கண்காட்சி நேற்று தொடங்கியது. மாவட்ட ஆட்சியர் ஜெ.இன்னசென்ட் திவ்யா, தோட்டக்கலைத் துறை முதன்மைச் செயலர் ககன்தீப் சிங் ஆகியோர் தலைமை வகித்தனர். மலர்க் கண்காட்சியை தொடங்கி வைத்து ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பேசியதாவது:

உதகை மலர்க் கண்காட்சி உலக அங்கீகாரம் பெற்றுள்ளது. முதன் முறையாக 1896-ம் ஆண்டு மலர்க் கண்காட்சி நடத்தப்பட்டது. 100-வது மலர்க் கண்காட்சியையொட்டி, 10 ஏக்கரில் ரோஜா பூங்கா அமைக்கப்பட்டது. இதுவும் உலக அளவில் புகழ் பெற்று விளங்குகிறது. தேசிய அளவில் தமிழகத்தில் 19 சதவீத கொய்மலர்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. ஒரு லட்சத்து 20 ஆயிரம் கார்னேசன் மலர்களால் உருவாக்கப்பட்டிருந்த நாடாளுமன்ற கட்டிடம், துலிப் மலர்கள், மலர் அருவி ஆகியவை சிறப்பாக உள்ளன. 20 ஆண்டுகளாக விவசாயத் துறையில் பெரிய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இதனால், மக்களின் வாழ்வாதாரம் உயர்ந்துள்ளது.

பெட்ரோல் பொருட்கள், பிளாஸ்டிக் உபயோகத்தால் சுற்றுச்சூழல் பெரிதும் பாதிப்படைந்துள்ளது. அதிக அளவு கார்பன் வாயுவால், ஒசோன் படலத்தில் ஓட்டை ஏற்பட்டு இயற்கை மாசடைந்துள்ளது. மக்கும் பொருட்களை மறுசுழற்சி முறையில் சுத்தப்படுத்தி, வசிப்பிடத்தை மேம்படுத்த வேண்டும். மகாத்மா காந்தி கூறியதுபோல், இயற்கை ஒவ்வொருவனின் தேவைக்காக மட்டுமே உள்ளது. மக்களின் பேராசைக்காக இயற்கை இல்லை. இதனால் அனைவரும் இயற்கையோடு இணைந்து வாழ வேண்டும்.எளிமையான வாழ்க்கையை வாழ கற்றுக்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். தோட்டக்கலைத் துறை இயக்குநர் சுப்பையன் உட்பட அதிகாரிகள் பலர் பங்கேற்றனர்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close