[X] Close

சூலூர், திருப்பரங்குன்றம், ஓட்டப்பிடாரம், அரவக்குறிச்சி 4 சட்டப்பேரவை தொகுதிகளில் நாளை வாக்குப்பதிவு; அனைத்து வாக்குச்சாவடிகளிலும் நுண் பார்வையாளர் நியமனம்


4

  • kamadenu
  • Posted: 18 May, 2019 07:23 am
  • அ+ அ-

தமிழகத்தில் சூலூர், திருப்பரங்குன்றம், ஓட்டப்பிடாரம், அரவக்குறிச்சி ஆகிய 4 சட்டப்பேரவை தொகுதிகளில் நாளை காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்குகிறது.

தமிழகத்தில், வேலூர் தவிர 38 மக்களவை தொகுதிகளுக்கான பொதுத் தேர்தல், 18 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வாக்குப்பதிவு கடந்த ஏப்ரல் 18-ம் தேதி நடந்து முடிந்துவிட்டது. இந்நிலையில், தமிழகத்தில் மேலும் காலியாக உள்ள சூலூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், ஓட்டப்பிடாரம் ஆகிய சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் மே 19-ம் தேதி நடக்கும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. சூலூர்- 22, அரவக்குறிச்சி - 63, திருப்பரங்குன்றம் - 37, ஓட்டப்பிடாரம் - 15 என மொத்தம் 137 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

இந்த 4 தொகுதிகளில் அதிமுக, திமுக, அமமுக, மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் ஆகிய பிரதான கட்சிகளின் வேட்பாளர்கள் உள்ளிட்டோர் போட்டியிடுகின்றனர். 4 தொகுதியிலும் நேற்று மாலை 6 மணியுடன் பிரச்சாரம் முடிவடைந்தது. இதைத் தொடர்ந்து, நாளை காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்குகிறது.

இது தொடர்பாக தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு கூறியதாவது: சூலூரில் 121 இடங்களில் 324 வாக்குச்சாவடிகள், அரவக்குறிச்சி தொகுதியில் 159 இடங்களில் 250, திருப்பரங்குன்றத்தில் 100 இடங்களில் 297, ஓட்டப்பிடாரத்தில் 132 இடங்களில் 257 என மொத்தம் 512 அமைவிடங்களில் 1,128 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றில் 301 வாக்குச்சாவடிகள் பதற்றமானவையாக கண்டறியப்பட்டுள்ளன. இருப்பினும், சூழல் கருதி அனைத்து வாக்குச்சாவடிகளுக்கும் நுண் பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். 4 தொகுதிகள் தவிர 5 மாவட்டங்களில் 13 வாக்குச்சாவடிகளில் மறு வாக்குப்பதிவு நடக்கிறது. இங்கும் நுண் பார்வையாளர்கள் நியமிக்கப்படுகின்றனர். 1,364 மத்திய அரசுத் துறை அலுவலர்கள், வங்கி அலுவலர்கள் நுண் பார்வையாளர்களாக பணியமர்த்தப்படுகின்றனர்.

சூலூர் உள்ளிட்ட 4 தொகுதிகளிலும் 5,508 தேர்தல் அலுவலர்கள் வாக்குப்பதிவின்போது பணியாற்றுகின்றனர். துணை ராணுவப் படையினர், ஊர்க்காவல் படையினர், காவல் துறை ஆய்வாளர், எஸ்ஐ நிலையில் 823 பேர் உட்பட 15,939 பேர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.

மின்னணு இயந்திரங்கள்

இந்த தேர்தலை பொறுத்தவரை சூலூரில் 778 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், 389 கட்டுப்பாட்டு இயந்திரங்கள், 422 விவிபாட் இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன. அரவக்குறிச்சி தொகுதியில் 63 வேட்பாளர்கள் போட்டியிடுவதால் அங்குள்ள வாக்குச்சாவடிகளில் தலா 4 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்படும், திருப்பரங்குன்றத்தில் 3, சூலூரில் 2, ஓட்டப்பிடாரத்தில் 1 என்ற அளவில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்படும். 4 தொகுதிகளிலும் உள்ள 656 வாக்குச்சாவடிகள், 13 மறு வாக்குப்பதிவு நடக்கும் வாக்குச்சாவடிகளில் இணையதள வீடியோ ஒளிப்பதிவுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

40 வழக்குகள்

தேர்தல் நடத்தை விதிமீறல்கள் தொடர்பாக 4 தொகுதிகளிலும் கடந்த 16-ம் தேதி வரை 40 வழக்குகள் பதிவாகியுள்ளன. தடை செய்யப்பட்ட இடங்களில் விளம்பரம் செய்த வகையில் அதிமுக மீது தூத்துக்குடியில் 12 உட்பட 15 வழக்குகள், திமுக மீது 7, இதர கட்சிகள் மீது 9 வழக்குகள் பதிவாகியுள்ளன. இந்திய தண்டனை சட்டப் பிரிவில் அதிமுக மீது 2, இதர கட்சிகள் மீது 4 வழக்குகளும், மக்கள் பிரதிநிதி சட்டப்பிரிவில் அதிமுக மீது ஒன்று, இதர கட்சிகள் மீது 2 வழக்குகளும் பதிவாகியுள்ளன.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

வாக்களிக்கலாம் வாங்க

'லிசா உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close