[X] Close

‘யார் வரவேண்டும் என்பதைவிட யார் வரக்கூடாது’ காங்கிரஸின் சமயோஜித முடிவு: மே.23-ம் தேதி டெல்லி கூட்டத்துக்கு வீரமணி ஆதரவு


23

  • kamadenu
  • Posted: 17 May, 2019 13:49 pm
  • அ+ அ-

யார் வரவேண்டும் என்பதைவிட யார் வரக்கூடாது என்பதால் காங்கிரஸ், தனது பிரதமர் வேட்கையையும் விட்டுக் கொடுக்கவும், தாராளமாகத் தயாராகவிருக்கிறது என்பது காலத்தால் எடுக்கப்பட்ட சமயோஜித சரியான முடிவு ஆகும் என தி.க.தலைவர் வீரமணி வரவேற்றுள்ளார்.

இதுகுறித்து திக தலைவர் கி.வீரமணி இன்று வெளியிட்ட அறிக்கை:

“எதிர்காலத் திட்டத்தை வகுக்க காங்கிரஸ் 23 ஆம் தேதி ஏற்பாடு செய்துள்ள எதிர்க்கட்சிகள் கூட்டம் வரவேற்கத்தக்கது. பொது எதிரி யார் என்பதை தெளிவாக உணர்ந்தால் வெற்றிக்கனி தானாகவே மடியில் வந்து விழும்

மே 23 அன்று தேர்தல் முடிவுகள் வரும் நிலையில், எதிர்க்கட்சிகளின் தலைவர்களை அழைத்து ஆட்சி அமைப்பது குறித்து முடிவு செய்ய காங்கிரஸ் தலைமை வகுத்துள்ள வியூகம் வரவேற்கத்தக்கதாகும்.

பொது எதிரி யார் என்பதை உணர்ந்து செயல்பட்டால் வெற்றிக் கனி தானாகவே மடியில் வந்து விழும்  என்று  திராவிடர்  கழகத் தலைவர்  கி.வீரமணி விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

பல்வேறு சூழ்ச்சிகளையும், தந்திரங்களையும், வித்தைகளையும் சிறிதும் ‘‘லஜ்ஜையில்லாமல்’’ கடைப்பிடித்து, எப்படியும் எக்கட்சியைப் பிடித்தாவது, மீண்டும் இரண்டாவது முறை பதவிக்கு வந்து விட வேண்டும் என்ற ஆர்.எஸ்.எஸ்., மோடி, அமித்ஷாவின் முயற்சிகளைத் தகுந்த முறையில் முறியடிக்கவேண்டும் என்பதை முன்னிறுத்தி காங்கிரஸ் அமைப்பின் முதிர்ந்த தலைவராக உள்ள சோனியா காந்தி அவர்கள் வகுத்துள்ள அரசியல் வியூகம் மிகவும் பாராட்டி வரவேற்கவேண்டியதாகும்.

மோடி ஆட்சி - பா.ஜ.க. ஆட்சி வர வாய்ப்பில்லை என்றாலும்கூட, இத்தகைய முன்னேற்பாடு நல்லதே.  மூன்றாவது அணி என்ற சிலரது நாக்கில் தேன் தடவியோ, மூக்கைச் சொறிந்துவிட்டோ எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையைச் சிதைக்கும் பாஜக -ஆர்எஸ்எஸின் தந்திரோபாயங்களைத் தோல்வி அடையச் செய்ய தொடக்கத்திலேயே சிந்தித்துள்ளனர்.

 ‘‘அடுத்து ஆட்சிக்கு யார் வரவேண்டும் என்பதைவிட, யார் வரக்கூடாது, பாசிச பாஜக ஆர்எஸ்எஸ் ஆட்சி மீண்டும் அமைந்துவிடக்கூடாது என்பதுதான் எங்களுக்கு (காங்கிரஸ் கட்சிக்கு) முக்கிய நோக்கமாக உள்ளது’’ என்ற நிலைப்பாட்டை பகிரங்கமாகவே அறிவித்துள்ளதோடு, இதற்காக காங்கிரஸ், தனது பிரதமர் வேட்கையையும் விட்டுக் கொடுக்கவும், தாராளமாகத் தயாராகவிருக்கிறது என்பது காலத்தால் எடுக்கப்பட்ட சமயோஜித சரியான முடிவு ஆகும்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்  காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை முதன்முதலில் பிரதமராக முன்மொழிந்தார், அன்றைய காலகட்டத்தில் - அரசியல் சூழலில் அது மிகச் சரியானதேயாகும்.

முன்னுரிமை காங்கிரசுக்கே

காரணம், புதுச்சேரி, பஞ்சாப், கர்நாடகம், ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், சட்டீஸ்கர் ஆகிய 6 மாநிலங்களில் காங்கிரஸ் ஆளும் கட்சியாக வந்திருக்கும் நிலையில், மற்ற எந்த மாநிலக் கட்சிகளுக்கும் இல்லாத அரசியல் உரிமை காங்கிரசுக்கு உள்ளது என்பதை மறந்துவிடக் கூடாது.

வரவேற்கத்தக்க காங்கிரசின் தொலைநோக்கு முன்னோடி முடிவு

ஆனால், மே 23-ல் வரவிருக்கும் நாடாளுமன்றத்திற்கான பொதுத் தேர்தல் முடிவுகளில், ஒருவேளை எந்தக் கட்சிக்கும் அறுதிப் பெரும்பான்மை வராத நிலை ஏற்படின், அதைப் பயன்படுத்தியோ அல்லது எதிர்க்கட்சிகளைப் பிரித்தாளும் தந்திரத்தை ஆர்எஸ்எஸ், பாஜக, மோடி வகையினர் கையாண்டோ ஆட்சியைப் பாஜக பிடிக்க முடியாதபடி செய்ய, முன்கூட்டியே முடிவு எடுப்பது தொலைநோக்குக் கூரிய பார்வையே.

காங்கிரஸ் கட்சித் தலைமை எடுக்கும் இந்த விவேகமான அரசியல் வியூகம் ‘‘புதியதோர் நிலைப்பாட்டை எடுக்கத் தயங்கோம். எங்களுக்குப் பிரதமர் பதவி முக்கியமல்ல; நாட்டை பாசிசப் பாதையில் கொண்டு செலுத்த கங்கணம் கட்டிக்கொண்டு திட்டமிடும் காவிக் கும்பலின் ஜனநாயக விரோத, மதச்சார்பு தன்மையைக் குழிதோண்டிப் புதைக்க முற்படும் பாசிச ஆட்சி மீண்டும் எந்த ரூபத்திலும் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதே  எங்களின் நிலைப்பாடு’’ என்ற காங்கிரசின் முடிவு சரியான அரசியல் நடவடிக்கையாகும்.

இடதுசாரிகள் உள்பட ஏற்கவேண்டியது

மே 23 அன்று சோனியா காந்தி அழைத்திருக்கின்ற அத்துணை எதிர்க்கட்சித் தலைவர்களும் இடதுசாரிகள் உள்பட இதனை நிச்சயம் ஏற்கவேண்டும் - ஏற்பார்கள் என்றும் நம்புகிறோம்!

இந்த மாபெரும் ஜனநாயக மீட்புப் போரில், நண்பர்களை எதிரிகளாகவோ, எதிரிகளை நண்பர்களாகவோ தவறாகக் கணித்துவிடக் கூடாது.

வெற்றிக்கனி மடியில் விழும்

பொது எதிரி யார் என்பதில் எதிர்க்கட்சிகளும், அதன் தலைவர்களும் தெளிவாக இருந்தால், ஒத்துழைத்தால் வெற்றிக்கனி தானே அவர்கள் மடியில் வந்து விழுவது உறுதி

வள்ளுவர் சொன்னதுபோல, ‘‘செயத்தக்கது செய்யாமையானும் கெடும்‘’ எனவே, காலமறிந்து செயத்தக்க செய்யும் காங்கிரஸ் தலைமை, அனைத்து முற்போக்கு ஜனநாயக, மதச்சார்பற்ற சக்திகளாலும் உச்சிமோந்து பாராட்டப்படும் என்பது உறுதி”

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close