[X] Close

நீதிமன்ற அறிவுறுத்தல் இருப்பதால் கமல் பேச்சு குறித்து பேச விரும்பவில்லை: முதல்வர் பழனிசாமி


  • kamadenu
  • Posted: 17 May, 2019 12:04 pm
  • அ+ அ-

கமல் சர்ச்சை கருத்து குறித்து தமிழக ஊடகங்கள் பத்திரிகைகள் பேச வேண்டாம் என நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ள நிலையில் நான் இது குறித்த கருத்து கூற இயலாது என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

சிவகங்கை மற்றும் மதுரையில் அதிமுக கட்சி நிர்வாகி இல்ல திருமண விழாவில் கலந்து கொள்வதற்காக சென்னையில் இருந்து இன்று (வெள்ளிக்கிழமை) காலை விமானம் மூலமாக வந்தார் முதல்வர்.

திருமண நிகழ்வில் கலந்து கொண்டு மீண்டும் சென்னை செல்வதற்காக விமான நிலையத்திற்கு வந்தபோது செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவரிடம் கமலின் பேச்சு குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, "கமலின் கருத்து குறித்து தமிழக ஊடகங்கள் பத்திரிகைகள் பேச வேண்டாம் என நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ள நிலையில் நான் இது குறித்த கருத்து கூற இயலாது. அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களும் தேர்தல் விதிமுறைகளை பின்பற்றி பேசினால் நன்றாக இருக்கும்" எனக் கூறினார்.

தேர்தல் பிரச்சாரத்தின்போது மத உணர்வுகளை தூண்டும் விதமாக பேசும் அரசியல் தலைவர்கள் மீது அரசு நடவடிக்கை எடுக்குமா என்ற கேள்விக்கு, "தேர்தல் நேரத்தில் நடைபெறும் பிரச்சாரத்தின் போது மத உணர்வுகளை தூண்டும் விதமாக பேசினால் தேர்தல் ஆணையம்தான் நடவடிக்கை எடுக்க வேண்டும். தேர்தல் அதிகாரியின் கட்டுப்பாட்டில் வருவதால் அரசு நடவடிக்கை எடுக்க முடியாது. தேர்தல் விதிமுறையை பின்பற்றி அரசியல் தலைவர்கள் பேசினால் எந்த பிரச்சினையும் ஏற்படாது" என்றார்.

குடிநீர் பிரச்சினைக்கு பருவமழை பெய்யாததே காரணம்:

குடிநீர் பிரச்சினை தொடர்பான கேள்விக்கு, "தமிழகத்தில் பருவ மழை சரியாக பெய்யாததால் குடிநீர் பற்றாக்குறை நிலவுகிறது.

குடிநீர் பிரச்சனையை தீர்க்க தேர்தலுக்கு முன்பாகவே  வறட்சி மிகுந்த பகுதிகளில் முன்னெச்செரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. குடிநீர் பிரச்சனை உள்ள பகுதிகளில் ஆட்சியர்கள் தலையிட்டு குடிநீர் முறையாக வழங்க உத்தரவிட்டுள்ளது. மேலும் நிதியும் முன்கூட்டியே ஒதுக்கப்பட்டுள்ளது" என்றார்.

அண்ணா பல்கலைக்கழகத்தில் அரசியல் தலையீடு உள்ளதாக துணைவேந்தர் சூரப்பாவின் குற்றச்சாட்டு தவறானது என்றும் முதல்வர் கூறினார்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close