[X] Close

தேர்தல் முடிவுக்கு முன்னரே கல்வெட்டில் எம்.பி.,யான ஓபிஎஸ் மகன்: அமளிதுமளிப்படும் தேனி தொகுதி


  • kamadenu
  • Posted: 17 May, 2019 11:27 am
  • அ+ அ-

-என்.கணேஷ்ராஜ்

தேனியில் கோயில் கல்வெட்டு ஒன்றில் ஓபிஎஸ்.ஸின் மகன் ஓ.பி.ரவீந்திரநாத்தை தேனி பாராளுமன்ற உறுப்பினர் எனக் குறிப்பிட்டிருப்பது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

தேனி மக்களவைத் தொகுதிக்கு வேட்பாளராக ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் குமார் அறிவிக்கப்பட்டதில் இருந்தே சர்ச்சையும் ஒளிவேகத்தில் உயரத் துவங்கின.

கட்சிக்கு உழைத்த மூத்த நிர்வாகிகளும் விசுவாசிகளும் இருக்க வாரிசை களம் இறக்கியது குறித்து பரவலாக முணுமுணுப்பு எழுந்தது. இருப்பினும் கண்டு கொள்ளாமல் களப்பணியில் மூழ்கினார் ஓ.பன்னீர்செல்வம்

டெல்லி தலைவர்கள் ஒதுக்குப்புறமாக அமைந்த தேனி பக்கம் வந்ததே கிடையாது. ஆனால் ஓபிஎஸ்.செல்வாக்கினால் பிரதமர் மோடி தேர்தல் பிரசாரத்திற்கு வந்தார். பாஜக.மூத்த தலைவர்கள் பலரும் தென்மாவட்டங்களில் போட்டியிட்டும் அதை விடுத்து ஓபிஎஸ்.மகனுக்காக மோடி வந்தது பாஜக.வினருக்கே பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

மேலும் தேனி தொகுதியில் எப்போதும் இல்லாத அளவிற்கு பணப்புழக்கம் கரைபுரண்டது. ஆண்டிபட்டி அமமுக அலுவலகத்தில் துப்பாக்கிச்சூடு என்று தேனி தொகுதி  பரபரப்பின் உச்சம் தொட்டது.

வாக்குப்பதிவு முடிந்ததும் அத்தனை சர்ச்சைகளும் முடிந்தது என்ற பலரும் நிம்மதியாயினர். ஆனாலும் தொடர்ந்து அரசியல் களம் தகித்துக் கொண்டே இருந்தது. தேர்தல் முடிவு அதிமுக.விற்கு பாதகமாக இருக்கும் என்ற கருத்து ஓபிஎஸ்.தரப்பை சூடேற்றியது. இதனைத் தொடர்ந்து வாரணாசி வரை சென்று மோடியை சந்தித்தார்.

இந்நிலையில் கடந்த 7ம் தேதி கோவையில் இருந்து தேனிக்கு 50 வாக்குப்பதிவு இயந்திரங்கள் வந்தது. எவ்வித அறிவிப்பும் இன்றி வந்த இந்த இந்திரங்களால் எதிர்கட்சிகள் அதிர்ச்சியடைந்தனர்.

இது குறித்த சர்ச்சை தமிழகம் முழுவதும் எதிரொலித்தது. இது முடிவதற்குள்ளே திடீரென்று 2வாக்குச்சாவடிகளில் மறுவாக்குபதிவு என்று அறிவிப்பும்  வெளியானது. இதற்கான எந்த சூழலும் இல்லாத நிலையில் மறுவாக்குப்பதிவு நடைபெறுவதை அப்பகுதி வாக்காளர்கள் கூட விரும்பவில்லை.

இந்நிலையில் நேற்று முன்தினம் மேலும் 20 வாக்குப்பதிவு இயந்திரங்கள், 30 விவிபேட்கள் வந்திறங்கின. டூரிஸ்ட் வேனில் அதுவும் பெரியகுளத்தில் வாடகைக்கு எடுக்கப்பட்ட வண்டியில் வாக்குப்பதிவு இயந்திரங்களைக் கொண்டு வந்ததும் குறித்து எதிர்கட்சியினர் கடும் எதிர்ப்புகளைத் தெரிவித்தனர்.

இந்நிலையில் நேற்று தேனி அருகே குச்சனூர் காசி ஸ்ரீ அன்னபூரணி ஆலயத்தில் கல்வெட்டு ஒன்று வைக்கப்பட்டது. அதில் ரவீந்திரநாத்குமார் பெயர்க்கு பின்னால் பாராளுமன்ற உறுப்பனர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

ஏற்கனவே வெற்றிக்காக பல்வேறு உள்ளடி வேலைகளை செய்து வருகிறார் என்று எதிர்கட்சிகள் குற்றம்சாட்டி வரும் வேளையில் வாக்கு எண்ணிக்கை முடியும் முன்பே பாராளுமன்ற உறுப்பினர் என்று அடையாளப்படுத்தப்பட்டது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

இது குறித்து எதிர்கட்சிகள் தொடர்ந்து சர்ச்சைகளை கிளப்பி வருகிறது.

தேர்தல் முடிந்து அத்தனை தொகுதியும் அமைதியாக இருக்க, தேனி தொடர்ந்து தேர்தல் செயல்பாடுகளால் தகித்துக் கொண்டிருக்கிறது. அந்த வரிசையில் தற்போது கல்வெட்டு விஷயமும் சேர்ந்து கொண்டது.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close