[X] Close

துரோகம் செய்பவர்களுக்கு பாடம் புகட்ட வேண்டும்: நாகமலை புதுக்கோட்டையில் டிடிவி.தினகரன் பிரச்சாரம்


  • kamadenu
  • Posted: 17 May, 2019 09:42 am
  • அ+ அ-

அரசியலில் துரோகம் செய்பவர் களுக்கு பாடம் புகட்ட வேண்டும் என்று அமமுக துணை பொதுச் செயலாளர் டிடிவி.தினகரன் பேசினார்.

திருப்பரங்குன்றம் தொகுதி அமமுக வேட்பாளர் இ.மகேந்திரனை ஆதரித்து அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் நேற்று மாலை நாகமலை புதுக்கோட்டையில் பிரச்சாரத்தை தொடங்கினார். அங்கு அவர் பேசியதாவது: தமிழ்நாட்டில் துரோகிகளை வீட்டுக்கு அனுப்பும் வரை ஓயாதே என ஆர்.கே.நகர் மக்கள் என்னை ஆசிர்வதித்து அனுப்பியுள்ளனர். சசிகலாவுக்கு துரோகம் செய்தவர் பழனிசாமி. ஆர்கே நகர் மக்கள் திமுகவை டெபாசிட் இழக்கச் செய்தனர். ஆனால் நீங்கள் துரோகியான அதிமுகவையும், எதிரியான திமுகவையும் டெபாசிட் இழக்கச் செய்ய வேண்டும்.

துரோகம் செய்தவர்களை ஜனநாயக முறைப்படி வீழ்த்த வேண்டிய நேரம் வந்துள்ளது. இவர்களுக்கு ஏற்கெனவே 18 தொகுதிகளில் கதை முடிந்துவிட்டது. துரோகிகள் கையில் அதிமுக இருப்பதால் மக்கள் அமமுகவை ஆதரிக்கின்றனர். பழனிசாமியும், பன்னீர்செல்வமும் அதிமுகவை மோடியிடம் அடகு வைத்துள்ளனர். மே 1-ம் தேதி தொழிலாளர் தினமாகக் கொண்டாடுவதுபோல், மே 23-ம் தேதியை துரோகம் ஒழிக்கப்பட்ட நாளாக தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட வேண்டும். 18 எம்எல்ஏக்களைத் தகுதி நீக்கம் செய்து வினையாக மாட்டிக்கொண்டனர். மே 23-ம் தேதி கோட்டையைக் காலி செய்துவிட்டு இவர்கள் வீட்டுக்குப் போக வேண்டும்.

ஜெயலலிதாவின் உண்மையான மக்களாட்சியை அமமுக கொண்டு வரும். யாருக்கும் தலை வணங்காத, தமிழர்களுக்கு மட்டுமே தலை வணங்கும் ஆட்சியைக் கொண்டு வருவோம். தமிழர்கள் தலை நிமிரவும், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கவும், விவசாயிகள், மீனவர்கள், தொழிலாளர்கள், அரசு ஊழியர்கள் என அனைத்துத் தரப்பினருக்குமான திட்டத்தை நிறைவேற்றுவோம். இந்த மக்கள் விரோத ஆட்சிக்கு முடிவு கட்ட வேண்டும். அரசியலில் துரோகம் செய்பவர்களுக்கு பாடம் புகட்ட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close