[X] Close

முஸ்லிம்களின் வாக்குகளைப் பெற இந்து மதத்தை இழிவுபடுத்தியுள்ளார்: கமல்ஹாசன் மீது இல.கணேசன் குற்றச்சாட்டு


  • kamadenu
  • Posted: 17 May, 2019 09:37 am
  • அ+ அ-

முஸ்லிம்களின் வாக்குகளைப் பெறுவதற்காகவே கமல்ஹாசன் சந்தர்ப்பவாதத்துடன் இந்து மதத்தை இழிவுபடுத்திப் பேசியுள்ளார் என பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் இல.கணேசன் குற்றம் சாட்டியுள்ளார்.

தஞ்சாவூரில் நேற்று செய்தியாளர் களிடம் அவர் கூறியதாவது: நல்ல இந்து என யாரையாவது அடையாளப்படுத்துவது என்றால் மகாத்மா காந்தியைக் குறிப்பிடலாம். இது, சரியான வார்த்தை. ஆனால், கமல்ஹாசனோ எதிர்மறையாக உள்ள ஒருவரை இந்து எனச் சொல்வது என்பது திட்டமிட்ட ரீதியிலான வார்த்தை. அவர் கோட்சேவை மட்டும் கூறவில்லை. இந்துக்களையும், இந்து மதத்தையும் இழிவுபடுத்தி இருக்கிறார். அரவக்குறிச்சி தொகுதி தேர்தலுக்கும், மகாத்மா காந்தி கொலைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. ஆனால், அவர் பேசியதைப் பார்க்கும்போது மகாத்மா காந்தி கொலைக்கு நியாயம் கேட்க வந்துள்ளேன் என கூறிவிட்டு, இந்த சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி இந்து எனக் கூறியுள்ளார். இதிலிருந்தே கமல்ஹாசன் ஒரு குழப்பவாதி என்று உறுதியுடன் கூறலாம்.

அரவக்குறிச்சியில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக இருப்பதால், இப்படியெல்லாம் பேசினால் அவர்கள் தங்கள் கட்சிக்கு வாக்களிப்பார்கள் என்ற சந்தர்ப்பவாதத்துடன் அவர் பேசியுள்ளார். இதை வன்மையாகக் கண்டிக்கிறேன். கமல்ஹாசன் திருந்துவார் என எதிர்பார்த்தோம். ஆனால், அவர் தொடர்ந்து குழப்பமாகவே பேசி வருகிறார்.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற 7 பேர் விடுதலை குறித்து ஆளுநர் விரைவாக முடிவு செய்ய வேண்டும்.

பெட்ரோலிய பொருட்களுக்காக நாம் இன்னும் வெளிநாட்டைத்தான் எதிர்பார்த்து உள்ளோம். ஆனால், இந்தியாவில் கடலோரத்தில் உள்ள தென் பகுதியில் எண்ணெய் வளம் இருப்பதற்கு வாய்ப்பு இருப்பதை முந்தைய அரசுதான் கண்டறிந்தது. எனவே, இது இப்போது செய்யப்பட்ட முடிவு அல்ல. இந்த ஆய்வால் விவசாயிகளுக்கும், மற்றவர்களுக்கும் எந்த வகையிலும் பாதிப்பு ஏற்படாது. பிரச்சினை ஏற்படாமல் ஆய்வு மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதே என் கருத்து. சிறு அளவில் பாதிக்கப்படலாம். அதற்குரிய இழப்பீட்டை விவசாயிகள் திருப்தியடையும் அளவுக்குக் கொடுக்க வேண்டும் என்பதும் என் கருத்து என்றார்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close