[X] Close

மத்திய அரசின் விவசாய நியாயவிலை திட்டத்தில் கோவை மாவட்டத்தில் 25 இடங்களில் ‘கிஷான் ரேஷன் கடைகள்': 10-19 சதவீதம் மானியத்தில் முதல்தர பொருட்கள் விற்பனை


25-10-19

  • kamadenu
  • Posted: 17 May, 2019 09:21 am
  • அ+ அ-

-த.சத்தியசீலன்

மத்திய அரசின் விவசாய நியாயவிலை கடைகள் திட்டத்தின் கீழ், கோவை மாவட்டத்தில் 25 இடங்களில் கிஷான் ரேஷன் கடைகள் தொடங்கப்பட்டுள்ளன. இவற்றில் 10 முதல் 19 சதவீதம் வரை மானியத்தில் பொதுமக்களுக்கு முதல்தர பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றன.

மத்திய அரசின் விவசாய நியாயவிலை கடைகள் திட்டத்தின் கீழ், நாடு முழுவதும் ‘கிஷான் ரேஷன் ஷாப்' என்ற விவசாய நியாயவிலை கடைகள் திறக்கப்பட்டு வருகின்றன.

வேளாண் உற்பத்தி பொருட்களை அறுவடைக்கு முன்பே விலை நிர்ணயம் செய்து, விவசாயிகளுக்கு அதன் பலனை கிடைக்கச் செய்வது இத்திட்டத்தின் நோக்கமாகும். அதன்மூலம் முதல் தர பொருட்களை மானிய விலையில் பொதுமக்களுக்கு கொண்டு செல்வது இத்திட்டத்தின் இலக்கு ஆகும். இதன்படி தமிழகத்தில் முதல்கட்டமாக 260 விவசாய நியாயவிலை கடைகள் திறக்கப்பட்டு தற்போது பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளன.

இது குறித்து கிஷான் ரேஷன் கடைகள் திட்ட மாநில நிர்வாக அலுவலர் என்.கிருஷ்ணகுமார் கூறியதாவது: கோவை மாவட்டத்தில் ரத்தினபுரி, வீரகேரளம், ஆவாரம்பாளையம், பீளமேடு, சௌரிபாளையம், ஹோப்ஸ் சக்தி நகர், குனியமுத்தூர், ஆலாந்துறை, செம்மேடு, விராலியூர், நரசிம்மநாயக்கன்பாளையம், பெரியநாயக்கன் பாளையம், சிறுமுகை உள்ளிட்ட 25 இடங்களில் கிஷான் ரேஷன் கடைகள் திறக்கப்பட்டுள்ளன.

நீலகிரி மாவட்டத்தில் பந்தலூர், சேரம்பாடி, எருமாடு, அய்யங்கொல்லி, பிதர்காடு ஆகிய இடங்களிலும், திருப்பூர் மாவட்டத்தில் வாவி தோட்டம், உடுமலை, வெள்ளகோவில் உள்ளிட்ட இடங்களிலும் திறக்கப் பட்டுள்ளன. இவற்றில் வீட்டுக்கு தேவையான அரிசி, பருப்பு, எண்ணெய், மசாலா வகைகள், சோப்பு உள்ளிட்ட அனைத்து மளிகை பொருட்கள், காய்கறி, பால், முட்டை போன்ற முதல்தர பொருட்கள் 10 முதல் 19 சதவீதம் வரை மானியத்தில் பொதுமக்களுக்கு விற்பனை செய்யப்படுகின்றன. மானிய விலையில் பொருட்கள் வாங்க, தங்களுடைய ஸ்மார்ட் ரேஷன் கார்டு, ஆதார் அட்டை மற்றும் உழவர் அட்டை ஆகிய ஏதேனும் ஒன்றை கொண்டு சென்று அருகில் உள்ள கிஷான் ரேஷன் கடைகளில் பொதுமக்கள் பதிவு செய்து கொண்டால் போதுமானது. ஓரிடத்தில் பதிவு செய்தால், நாட்டின் எந்த பகுதியிலும் உள்ள கிஷான் ரேஷன் கடைகளிலும் மானிய விலையில் பொருட்கள் வாங்கிக் கொள்ள முடியும்.

முன்னணி நிறுவனங்கள் மற்றும் உற்பத்தியாளர்களின் முதல் தர பொருட்களை தங்களுக்கு தேவையான அளவுக்கு வாங்கிக் கொள்ளலாம். ஸ்மார்ட் ரேஷன் கார்டு, ஆதார் அட்டை மற்றும் உழவர் அட்டை இல்லாதவர்கள் பொருட்களுக்கான முழு தொகையும் செலுத்தி தங்களுக்கு தேவையானவற்றை வாங்கிக் கொள்ளலாம். இதன்மூலம் விவசாயிகளுக்கு விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைப்பதுடன், பொது மக்களின் பொருளாதாரமும் உயரும். வரும் நாட்களில் பொருட்கள் வாங்க வரும் பொதுமக்களுக்கு 20 லிட்டர் தூய குடிநீர், கால் லிட்டர் பால் இலவசமாக வழங்கப்பட உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close