[X] Close

மறுமலர்ச்சியை ஏற்படுத்திய அரசுப் பள்ளி ஆசிரியை!


  • kamadenu
  • Posted: 17 May, 2019 09:24 am
  • அ+ அ-

-ஆர்.டி.சிவசங்கர்

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே குக்கிராமத்தில் செயல்படும் அரசுப் பள்ளி மாணவர்களிடம் பல்வேறு மாற்றங்களை உண்டாக்கி, அவர்களிடையே மறுமலர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார் ஆசிரியை புஷ்பா.

குன்னூர் அருகே உள்ளது பெட்டட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி. குக்கிராமங்களைச் சேர்ந்த மாணவர்கள் பயிலும் இப்பள்ளி மாணவர்களிடம்தான் பல்வேறு மாற்றங்களுக்கு வித்திட்டுள்ளார் இந்த ஆசிரியை. ஏழை மற்றும் நலிந்த குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகள் பயிலும் இப்பள்ளியின் அருகில் டாஸ்மாக் மதுக் கடை செயல்பட்டது.

இதனால், இப்பகுதி மக்கள் மட்டுமின்றி, மாணவ, மாணவிகளின் பெற்றோரும் பல்வேறு இன்னல்களுக்கு உள்ளானார்கள். இதனால் மன உளைச்சலுக்கு ஆளான மாணவர்கள், சரிவரப்  படிக்காமல் இருந்தனர். இதையடுத்து, 100-க்கும் மேற்பட்டோரை சந்தித்து, மதுவின் தீமைகளை எடுத்துரைத்து, அவர்களை அந்தப் பழக்கத்திலிருந்து விடுபடச் செய்தார் ஆசிரியை புஷ்பா. மேலும், தலைமை ஆசிரியர் மனோகரன் ஒத்துழைப்புடன் கையெழுத்து இயக்கம் நடத்தி,  பள்ளிக் குழந்தைகள் மூலம் அப்போதைய தமிழக  முதல்வருக்கு கடிதங்கள் எழுதி, முதல்வரின் சிறப்பு உத்தரவு மூலம், அந்த மதுக்கடையை அகற்றினார்.

இதற்காக, தேசிய அளவில் இயங்கும்  ‘சைன் ஃபார் சேஞ்ச்’ என்ற தன்னார்வ அமைப்பு ‘ஐ கேன்’ என்ற விருதை ஆசிரியை புஷ்பாவுக்கு வழங்கி கௌரவித்தது. இதேபோல, அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ஆங்கிலம் போதிக்கும் திட்டம் மூலம், தொடர்ந்து ஆங்கிலத்தைக் கற்பித்தார். பள்ளியில் ஜூனியர் ரெட்கிராஸ் சங்கம் ஏற்படுத்தப்பட்டு, சங்கத்தின் தலைவரான மாணவர் ஆர்.ராகுல், மாணவர்களை தினமும் கண்காணிக்கிறார். மேலும்,  மாணவர்கள் 5 குழுக்களாகப் பிரிந்து, தினமும் பள்ளி வளாகத்தைத் தூய்மைப்படுத்துகின்றனர். கழிப்பறைகளைத் தூய்மையாகப் பராமரிப்பது, பள்ளியில் காய்கறித் தோட்டம் அமைத்து, பராமரிப்பது உள்ளிட்ட பணிகளிலும் மாணவர்கள் ஈடுபடுகின்றனர். இந்த மாற்றங்களால் இப்பள்ளிக்கு கல்வித் துறை மூலம் ‘ஏ கிரேடு’ அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஆசிரியை த.புஷ்பா கூறும்போது, “மாணவர்களுக்கு கேட்டல், வாசித்தல், பேசுதல், எழுதுதல் போன்ற 4 பிரிவுகளின் கீழ் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. பின் தங்கிய மாணவர்களுக்கு, கணினி மூலம் சொற்களைக்  காட்சிப்படுத்தி பயிற்றுவிக்கும்போது, அவர்களது புரிதல் திறன் மேம்படுகிறது. 

ஆங்கிலத்தில் சிறந்த மாணவிகளைக் கொண்டு,  பிற மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. இதன் மூலம் மாணவர்களின் தன்னம்பிக்கை அதிகரித்துள்ளது. அச்சம், தயக்கத்தைக் கைவிட்டு,  ஆங்கிலத்தில் பேசுகின்றனர். படிப்புடன் விளையாட்டு, சமூகப் பணிகளும் முக்கியமானவை என்பதை மாணவர்கள் உணரச் செய்துள்ளோம்”  என்றார்.

இந்தப் பள்ளியில் ஆண்டுதோறும் ஒரு தலைப்பின் கீழ் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. கடந்த 2010-ம் ஆண்டு முதல் ஆங்கிலத்தில் பேசுதல், ஆய்வு செய்தல், மதுவை தவிர்க்கச் செய்தல்,  சுகாதாரமான சூழலில் வீட்டுப் பாடங்களை செய்தல், வசீகரமான  விளையாட்டுகள், ஆங்கிலத்தில்  பிழையின்றி எழுதுதல், ஆங்கில நாளிதழை விரும்பிப் படிக்கச் செயதல்,  இலக்கணத்தை விளையாட்டாகப் பயில்வது உள்ளிட்ட திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன. இவ்வாறு மாணவர்களிடம் பல முன்னேற்றங்களை உருவாக்கிய ஆசிரியை புஷ்பாவுக்கு, பல்வேறு சங்கங்கள், அமைப்புகள் சார்பில் நிறைய விருதுகளும் வழங்கப்பட்டுள்ளன.

வாக்களிக்கலாம் வாங்க

'லிசா உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close