[X] Close

சூலூர் சுற்று வட்டாரப் பகுதி நெசவாளர்களின் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உறுதி


  • kamadenu
  • Posted: 17 May, 2019 09:17 am
  • அ+ அ-

சூலூர் சுற்று வட்டாரப் பகுதி நெசவாளர்களின் நீண்டகால பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு காணப்படும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உறுதியளித்தார்.

சூலூர் சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தல் 19-ம் தேதி நடைபெற உள்ளது. திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளராக பொங்கலூர் பழனிசாமி போட்டியிடுகிறார்.

அவருக்கு ஆதரவாக சூலூர் சுற்று வட்டாரப் பகுதிகளில் மு.க.ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொண்டு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். முதலிபாளையம் பகுதியில் நடந்த நிகழ்ச்சியில், நெசவாளர்கள் தங்களது நீண்ட கால கோரிக்கைகளை நிறைவேற்றித்தர கோரிக்கை விடுத்தனர். அதைத் தொடர்ந்து மு.க.ஸ்டாலின் பேசியதாவது:தேர்தலுக்காக மக்களை சந்திக்கும் கட்சி திமுக அல்ல. ஆட்சியில் இருக்கும் போதும், இல்லாத போதும் மக்களுக்காக பணியாற்றும் கட்சி. மறைந்த கருணாநிதி எங்களை அப்படித்தான் உருவாக்கினார்.

ஆட்சியில் இருக்கும் மக்கள் பிரச்சினைகளைத் தீர்ப்போம். இல்லாதபோது மக்கள் பிரச்சினைகளுக்கு ஆட்சியாளர் களிடம் குரல் கொடுப்போம். நெசவாளர்களுக்கும் திமுகவுக்கும் தொப்புள் கொடி உறவு உள்ளது. தேங்கிக் கிடந்த கைத்தறி பொருட்கள் மறைந்த அண்ணா, கருணாநிதி போன்றவர்கள் கைத்தறி துணிகளை தலையில் சுமந்து வீதி, வீதியாக விற்பனை செய்த வரலாற்றை யாரும் மறந்திருக்க முடியாது.

திமுக ஆட்சி அமைந்ததும் நெசவாளர்களுக்கு மானிய விலையில் கைத்தறி உபகரணங்கள் வழங்கப்படும். நெசவாளர்களுக்கு கூலி பிரச்சினைக்கு தீர்வு காணப்படும். 2 லட்சத்துக்கும் மேற்பட்ட நெசவாளர்கள் வசிக்கும் பகுதியில் கவின்மிகு காட்சியகங்கள் அமைக்கப்படும்.

மற்ற கட்சிகள் பிரச்சாரத்துக்கு வருவார்கள். வென்றால் அதை செய்வோம் இதை செய்வோம் என்பார்கள். வென்றதும் எல்லாவற்றையும் மறந்து விடுவார்கள்.

இதற்கு உதாரணம் பிரதமர் மோடி. ஆண்டுக்கு 2 கோடி பேர் வீதம், 5 ஆண்டுகளில் 10 கோடி பேருக்கு வேலை கொடுப்போம் என்றார். இதுவரை ஒருவருக்கு கூட வேலை கிடைக்கவில்லை. மாறாக வட இந்தியர்களை தமிழகத்தில் உள்ள மத்திய அரசு பணிகளை வழங்கியுள்ளார். 19-ம் தேதி நடைபெறும் இடைத்தேர்தலிலும் திமுக வேட்பாளர்களுக்கு மக்கள் வாக்களிக்க வேண்டும்.

23-ம் தேதிக்கு பிறகு தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படும். தற்போது திமுக கூட்டணியில் 97 சட்டப்பேரவை உறுப்பினர்கள் உள்ளனர். இடைத்தேர்தலில் 22 தொகுதியில் வெற்றி பெற்றால் எண்ணிக்கை 119-ஆக உயரும். இதனால் ஆட்சி அமைப்பதற்கான வாய்ப்பு உருவாகும்.

இவ்வாறு அவர் பேசினார்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close