[X] Close

பிளாஸ்டிக் இல்லாத கொடைக்கானல் சாத்தியமா?


kodaikanal-plastic-free

அப்புறப்படுத்துவதற்காக குவித்து வைக்கப்பட்டிருக்கும் பிளாஸ்டிக் பாட்டில்கள் | கோப்புப் படம்

  • kamadenu
  • Posted: 29 May, 2018 11:55 am
  • அ+ அ-

கொடைக்கானல் மலைப்பகுதியில் பாலிதீன், ஒருமுறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பாட்டில்களுக்கு தடை இருந்தபோதும், அதை பலரும் பயன்படுத்தி வருவதால் சுற்றுச்சூழல் மாசுபடுகிறது. வனவிலங்குகள் பாதிப்புக்குள்ளாகின்றன. பாலிதீன் இல்லாத கொடைக்கானல் அமைய அனைவரது ஒத்துழைப்பும் தேவை என்று இயற்கை ஆர்வலர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

மலைகளின் இளவரசி என்று அழைக்கப்படும் கொடைக்கானலில் மோயர்பாய்ண்ட், குணா குகை, தூண்பாறை, பசுமை பள்ளத்தாக்கு, பேரிஜம் ஏரி என பெரும்பாலான சுற்றுலாத்தலங்கள் வனப்பகுதிக்குள் அமைந்துள்ளன. கொடைக்கானலின் இயற்கை வளங்களை காக்கவும், வனவிலங்குகளை பாதுகாக்கவும் பாலிதீன் மற்றும் ஒருமுறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.

ஆனால், இந்த தடையை சுற்றுலா பயணிகளும், உள்ளூர் வியாபாரிகளும் கண்டுகொள்வதில்லை. அதை அமல்படுத்த நகராட்சி அதிகாரிகளும் தீவிர நடவடிக்கை எடுப்பதில்லை. இங்குள்ள ஹோட்டல்களில் வாழை இலைக்கு பதிலாக பாலிதீன் ஷீட்டில் உணவு பரிமாறுகின்றனர். சாப்பிட்ட பின் குப்பையில் வீசி எறிந்த பின், அதில் எஞ்சியுள்ள உணவைத் தேடி வரும் குரங்கு உள்ளிட்ட விலங்குகள் பாலிதீனையும் சேர்த்து சாப்பிடுவதால் உடல்நலக் கேடு ஏற்பட்டு, பல சமயங்களில் இறப்பை சந்திக்கின்றன.

வனத்துறை தீவிர நடவடிக்கை

நகராட்சி நிர்வாகம் ஆக்கப்பூர்வமான நடவடிக்கை எடுக்காத நிலையில், வனத்துறையினர் தான் சுற்றுலா பயணிகளின் வாகனங்களை நிறுத்தி சோதனையிட்டு, பாலிதீன் பைகள், காலியான தண்ணீர் பாட்டில்கள், மது பாட்டில்கள் வைத்திருப்போரிடமிருந்து அவற்றை பறிமுதல் செய்கின்றனர். இதற்கென சுற்றுலாத்தலங்கள் அதிகம் உள்ள 12 மைல் சுற்றுச்சாலையில் மோயர்பாய்ண்ட் அருகே வனத்துறையினர் சோதனைச்சாவடி அமைத்துள்ளனர்.

வனத்துறையினரின் இந்நடவடிக்கையால், சுற்றுலாபயணிகள் ஒருமுறை பயன்படுத்தும் தண்ணீர் பாட்டில்களை வனப்பகுதிக்குள் வீசிவிட்டு செல்வது தவிர்க்கப்படுகிறது. இது வரவேற்கத்தக்கது.

அதேசமயம், சுற்றுலா வரும் மக்களிடம் இயற்கை வளத்தையும், வனவிலங்குகளையும் பாதுகாப்பதில் போதிய அக்கறையில்லாத நிலை நீடிப்பது இயற்கை ஆர்வலர்களை வருத்தமடைய செய்துள்ளது. மக்களிடையே பலமுறை பாலிதீன் பைகளால் ஏற்படும் தீங்கு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினாலும், கொடைக்கானல் வனப்பகுதியில் அமைந்துள்ள சுற்றுலாத்தலங்களில் பாலிதீன் குப்பைகள் குவிவது குறையவில்லை.

வனத்துறையினரின் சோதனைகளையும் மீறி வனப்பகுதிக்குள் தண்ணீர் பாட்டில்களை வீசிவிட்டு செல்வதும் தொடரத்தான் செய்கிறது. பசுமை பள்ளத்தாக்கு பகுதியில் சுற்றுலா பயணிகள் வீசிவிட்டு செல்லும் காலி தண்ணீர் பாட்டில்களில் உணவு இருக்கலாம் எனக் கருதி குரங்குகள் எடுத்துச் செல்லும் காட்சிகளையும் அன்றாடம் பார்க்க முடிகிறது என வனவிலங்கு ஆர்வலர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

வனத்தையும், வனவிலங்குகளையும் பாதுகாக்க வனத்துறையினர் என்னதான் முயற்சி மேற்கொண்டாலும், நகராட்சி நிர்வாகம், உள்ளூர் பொதுமக்கள், சுற்றுலாபயணிகள் என அனைவரும் முழு ஒத்துழைப்பு கொடுத்தால் தான் பாலிதீன் இல்லாத கொடைக்கானலை உருவாக்க முடியும்.

விழிப்புணர்வு ஏற்படுத்துவோம்

இதுகுறித்து கொடைக்கானல் வன மாவட்ட அலுவலர் தேஜஸ்வி கூறியதாவது: தற்போது தான் பொறுப்பேற்றுள்ளேன். பாலிதீன், பிளாஸ்டிக் பாட்டில் பயன்படுத்துவதைத் தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்படவுள்ளது. சுற்றுலா பயணிகளுக்கு வனத்துறையினர் மூலம் விழிப்புணர்வு அளிக்கப்பட்ட போதும் பிளாஸ்டிக் பாட்டில்களை பயன்படுத்திவிட்டு தூக்கி எறிவது தொடர்கிறது.

சுற்றுச்சூழலை பாதுகாப்பதில் தங்களுக்கும் பங்கு உண்டு என்பதை சுற்றுலா பயணிகள் உணர வேண்டும். ஜூன் முதல் வாரத்தில் பொதுநல சங்கங்களை அழைத்து அவர்கள் ஒத்துழைப்புடன் உள்ளூர் கடைகளில் பாலிதீன், பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனையை தடுக்க விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். பிளாஸ்டிக் இல்லா கொடைக்கானலை உருவாக்க அனைத்து துறை அதிகாரிகளுடன் இணைந்து முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்றார்.

- பி.டி.ரவிச்சந்திரன்

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close